Monday 10 February 2014

வானவில் கவியரங்கம்

பெரம்பலூர் புத்தகத் திருவிழாவில் கடந்த 05.02.2014 அன்று
 ‘ வண்ணங்கங்களால் ஆன வாழ்க்கை ‘ என்னும் தலைப்பில் நடைபெற்ற வானவில் கவியரங்கத்தின் போது எடுத்தப் படம்.


படத்தில் இடமிருந்து முனைவர். பீ. ரகமத்பீபி, ஜெ. சங்கர், இ.தாஹீர் பாட்சா, கவியரங்கத் தலைவர் அகவி, சு. நாகராஜன், பாளை. செல்வம், ஆ. இராமர் மற்றும் ப. செல்வகுமார்.




வண்ணங்கள் பற்றிய இக்கவியரங்கத்தில் கவிஞர்கள் அவர்கள் கவிபாடும் வண்ணத்திலேயே ஆடை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இக்கவியரங்கத்தில் ‘ வண்ணங்களால் ஆன வாழ்க்கை - கருப்பு ‘ என்னும் தலைப்பில் பாடப்பட்ட எனது கவிதை கீழே :


05.02.2014 அன்று பெரம்பலூர் புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற  வானவில் கவியரங்கில் ‘ வண்ணங்களால் ஆன வாழ்க்கை – கருப்பு ‘ என்ற தலைப்பில் வாசித்த கவிதை
________________________________________________________________________________________________________

” வண்ணங்களால் ஆன வாழ்க்கை “  - கருப்பு


கருப்பு மண்

பெரம்பலூரின் கரிசல் மண்ணை

முத்தமிட்டு முதல் வணக்கம்.


என் மொழி  என் உயிரின் மொழி

தாய்மொழி தமிழுக்கு  வணக்கம்


புத்தகத் திருவிழாவிற்கு

இடம் தந்த நகராட்சிக்கும்

படம் பிடிக்கும் தொலைக்காட்சிக்கும்

பணிவான வணக்கம்.



இருக்கைகளில் அமர்ந்திருக்கும் இதயங்களுக்கும்

இறுதிவரை எழுந்துபோகாத கால்களுக்கும்                  

புத்தகங்கள் வாங்கிவந்த கைகளுக்கும்

போனவுடன் படிக்கின்ற விழிகளுக்கும்

நெஞ்சம் நிறைந்த வணக்கம்.


  

இளைஞனாய் இருந்த போதே

இனத்தைப் பாடிய சும்மாட்டுக் கவி

எப்போதும் சத்தமாய் பேசும்

எங்கள் பண்பாட்டுக் கவி

எளிய உரையாடலிலும் சொல்லருவி

எப்போது பேசினாலும் தமிழருவி

பெரம்பலூர் இலக்கிய புரவி

பெருமைமிகு நட்புப் பிறவி

கவியரங்கத் தலைவர் அகவி …    வணக்கம்.



வார்த்தகளுக்கு வண்ணமடித்து அமர்ந்திருக்கும்

சக கவிஞர்களுக்கும்

சாயம் பூசாத சகோதர வணக்கம். 




கல்யாணத்திற்கு துணிஎடுப்பதைப் போல

கவியரங்கத்திற்கு துணி எடுக்கப் போனோம்

சட்டைகள் எடுத்து விட்டோம்

சேலை எடுப்பதற்குத்தான் சில நாட்கள் ஆனது.

ஜவுளிக் கடையில் கேட்டார்கள் :

“ பத்திரிக்கை அடிச்சாச்சா..? “……

அரசி ஜிவல்லரி ராஜசேகர் அடித்துக் கொடுத்தாரென்றேன்

“ பாக்கு வெத்தலை மாத்தியாச்சா..? “ என்று கேட்டனர்

தாளாளார் சிவசுப்ரமணி தாம்பூலத்தோடு மாற்றினாரென்றேன்

“ பந்தக்கால் நட்டாச்சா..? “ என்றனர்

பெரம்பலூர் பண்பாட்டு மன்றம் பார்த்துக் கொண்டதென்றேன்

“ அது சரி……….பொண்ணு யாரு…? “ என்றனர்

அகவியோடு ஏழுபேரும் எழுதிய கவிதைகள் –

கவிமகள் என்று சொன்னேன்

“ சபாஷ்……பலே பலே  

மாப்பிள்ளை யாரு “ என்றனர்

எங்கள் மாவட்ட ஆட்சியர் என்றேன்.



சைரன் இல்லாத பேருந்தில்                                       collector

சத்தமில்லாமல் பயணம் செய்தவர்

மாறுவேடத்தில் திரையரங்கில்

டீ-சர்ட் போட்டு படம் பார்த்தவர்

பிச்சை எடுத்த குழந்தைகளை

பள்ளியில் சேர்த்தவர்

படிக்கிற வயதில் திருமணம் செய்தால்

பாய்ந்து தடுப்பவர்

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் க்ளாஸ் கொண்டு வந்தவர்

ஆயாக்கள் கைகளினால் சத்துணவு தின்றவர்

ஏழை மாணவர்களை எடைப் போட்டுப் பார்த்தவர் – அவர்கள்

எடை கூடுவதற்குக் கடலைமிட்டாய் பிஸ்கட் கொடுத்தவர்

மருத்துவம் படித்தவர் – எங்கள்

மாவட்ட ஆட்சியர்…

முதல்வர் தலைமையில் ஆட்சியர் மாநாடு சென்னையில் நடக்கும் – அதில்

முதலாவது விருது முதல்வர் விருது பெரம்பலூருக்கே கிடைக்கும்.

108 ஆம்புலண்ஸ் நெம்பர் தெரியாதவருக்கும்

ஆட்சியரின் அலைபேசி எண் தெரிந்திருக்கும்

ஏழைகளின் பிரியாணி

பெரம்பலூர் விஞ்ஞானி

மீசையில்லா வீரம்

மேன் ஆப் தி ஜில்லா 

தாரேஸ் அகமது அவர்களுக்கு தலைதாழ்ந்த வணக்கம்.




மரபிலும் புதுக்கவிதையிலும்                          Marabin Maindthan

நமது நம்பிக்கை நட்சத்திரம்

வீழ்ந்து கிடந்தவனுக்கு கான்ஃபிடன்ஸ் கார்னர்

லட்சியம் கொண்டவனுக்கு வெற்றி வாசல்

மரபின் மைந்தன்

புதுக்கவிதை புதல்வன்

கலைமாமனி முத்தையா அவர்களுக்கு

கனிவான வணக்கங்கள்.



கம்பராமாயணம் பாடும் பள்ளிவாசல்                   Parveen Sulthaana

பெரியபுராணம் ஓதும் நபிமகள்

இலக்கிய மேடைகளின் மஸ்தானா

இன்பத்தமிழ் பர்வீன் சுல்தானா

இரு கைகள் கூப்பி

இயம்புகிறேன் நல்வணக்கம்.



தலித் எழுத்துலகின் தகப்பன்கொடி                    Azhakiya Periyavan

கால நதியின் நெருப்பு விதை

பெருகும் வேட்கையென எழுதும்

கட்டை விரல் ரத்தம்

நீ நிகழ்ந்த போது தான்

தலித் இலக்கியத்தில் அழகியல் நிகழ்ந்தது

தீட்டைப் புனிதமாக்கியவன்

கம்பளிப் பூச்சி இரவுகளை வெளிச்சமாக்கியவன்

கூரைகளுக்குக் கீழே அழுக்கில் பிறந்தவன்

கோபுரங்களும் வணங்கும் அழகிய பெரியவன்

அன்போடு வணங்குகிறேன்

அடிதொற்றி நல்வணக்கம்.




உயிர்கள் தோன்றுவதற்கு முன்னரே

உலகில் நிறங்கள் தோன்றின

இனங்களைப் பிரிப்பது போல

நிறங்களைப் பிரித்தான் மனிதன்.



குழந்தையா யிருந்தவரை

நிறங்களின் குருடாயிருந்தான்

வயது ஏறஏற

வண்ணம் ஏறிக் கொண்டே வந்தது



பால் வெள்ளையென்று சொன்னான்

பருத்தியையும் வெள்ளையென்று சொன்னான்

வானம் நீலமென்று சொன்னான்

கடலையும் நீலமென்று சொன்னான்

கிளியையும் பூமியையும் பச்சையென்று சொன்னான்

மஞ்சளையும் மங்கலத்தையும் மஞ்சளென்றே சொன்னான்

மதங்களையும் துறவையும் காவியென்று சொன்னான்

வறுமையையும் இரத்ததையும் சிவப்பென்றே சொன்னான்

கண் மூடி நான் கேட்டேன்… 

கருப்பென்று எதைச் சொல்வாய்..?



வண்ணமாய் இருப்பதெல்லாம் வண்ணமானது

வண்ணங்கள் இல்லாததெல்லாம் கருப்பானது



ஏவாள் கடித்த ஆப்பிள் சிவப்பென்று

ஏவாளுக்குத் தெரியாது

ஆதாம் மயங்கிய பொழுது இரவா…?.... என்று

ஆதாமுக்கும் தெரியாது



நிறபேதம் உணர்வதற்கு முன்னால்

இனபேதமின்றி இணைந்திருந்தான்.



அன்னம் வெள்ளையென்று

ஆர்ப்பாட்டம் செய்வதில்லை

அழகுதோகை நீலம் என்று

மயில்கள் அகவவில்லை

பச்சையென்று கிளிகள் – ஒருநாளும்

பாடித் திரிந்ததில்லை

மஞ்சள் வண்ணமாய் மாறுவதால் – எலுமிச்சை

மாம்பழம் போல் பெருக்கவில்லை

கொத்து மஞ்சள் ஆணவத்தில்

கொடியில் காய்ப்பதில்லை

சிவப்பழகாய் பழுப்பதினால் – மிளகாய்

சினிமா சான்ஸ் கேட்டதில்லை.


நிறபேதம் உணர்ந்த

குருட்டு மனிதன்

கொக்கிடம் போய்ச் சொன்னான் …

“ நீ வெள்ளை என்று “

கொக்கு சொன்னது..

” நான் கொக்கு என்று…”



பகலில் ஒருநாள்

வண்ணங்களுக்கிடையே போட்டி நடந்தது

எல்லா வண்ணங்களும் மின்னிச் சிரித்தன.

இரவு வந்தது

கருப்பு வென்றது.



பிறப்புக்கு முந்திய இடமும்

இறப்புக்கு பிந்திய நிலமும்

பிறப்பென்றும் இறப்பென்றும்

பிதற்றுகின்ற எல்லாம்……………. கருப்பு



தாயும் தந்தையும் சேர்ந்த முதல் இரவும்

தனயனும் உறவும் பிரிந்த கடைசி நாளும்

தானம் செய்யாத ஒவ்வொரு நாளும்

உதடுகள் சிரிக்காத எல்லா நாளும்………… கருப்புத்தான்.


புருவம்,  மீசை,  முடி

மனித அடையாளம் கருப்பு



உயிர் உணர பால்குடித்த உதடுகள் கருப்பு

உயிரூட்டி அமுதூட்டிய முலைக் காம்பு கருப்பு



தொப்புள் கருப்பு

தொப்புள் கொடியும் கருப்பு

தொப்புள் கொடியை காப்பாற்றாத

தேசியக் கொடியும் கருப்பு….



வெள்ளை கருப்பென்று யாரும் சொல்வதில்லை

கருப்பு வெள்ளையென்று  தான் சொல்வார்கள்

கருப்பு தான் நிறங்களின் அரசன்.

ஆங்கிலத்திலும் ப்ளாக் & வொயிட் தான்.



காகம் கருப்பு மேகம் கருப்பு

குயில் கருப்பு யானை கருப்பு



பச்சைப் பசும்புல் தின்று

சிவப்பு இரத்தம் ஊறி

வெள்ளை பாலாய் தரும்

ஆடு கருப்பு – எருமை

மாடு கருப்பு.


கருப்பாய் பிறந்த ஆட்டை

வெள்ளாடு என்றிவன் சொல்லக் கேட்டு

புல் தின்று மேய்ந்த ஆடு

போஸ்டர் தின்ன பழகிக் கொண்டது.




கிளியின் கால் கருப்பு

எலிப் புழுக்க கருப்பு



ஒளவையை சுட்ட நாவலும்

ஏழையின் திராட்சை ஈச்சையும்

முகமெல்லாம் அப்பிக்கொண்ட நொணாவும்

மூச்சுமுட்ட சப்பித்தின்ற பனம்பழமும்

கருப்பு….கருப்பு …கருப்பு…




பச்சை வாழையிலை விரித்து

வெள்ளைச் சோறு கொட்டி

மஞ்சளும் சிவப்புமாய் கொழம்பு ஊற்றினாய்

சமைத்த சட்டி கருப்பு – அரிசி

தந்த மண் கருப்பு..




கடுகு மிளகு காப்பித்தூள் கருப்பு

எள்ளு நெத்து தோசைக்கல்லு கருப்பு



சேலைகள் நைட்டியான பிறகு

முண்டா பனியன் தான் கரித்துணியானது.




கருப்பு …….. உயிரின் நிறம்

கருப்பு …….. உணர்வின் நிறம்



கண்ணே மணியே என்று

குழந்தையை கொஞ்சும் போது

கன்னத்தில் வைத்தப் பொட்டு…. கருப்பு



கைகளால் கண்கள் பொத்தும்

கண்ணாமூச்சி விளையாட்டில்

காட்சி …..கருப்பு



கால்சட்டைப் பருவத்தில்

மேல்சட்டை இல்லாமல்

கூட்டாஞ்சோறு ஆக்கி

கூடிவிளையாடும் போது

தேரு வண்டி செஞ்ச

களிமண்ணு கருப்பு.



வளையவரும் வாலிபர்களை

வளைத்துச் சுற்றும் ரெட்டை ஜடையும்

கண்ணில் வலைவிரித்துக் காதல் தூண்டிலிடும்

கண்ணின் மையும் கருமை

கருமை – இளமை



காதல் கொண்ட களவுப் பொழுதில்

கைகோர்த்த பகலும் கருப்பு

கைபிடித்த கற்பு வாழ்வில்

கட்டில் சேர்ந்த இரவும் கருப்பு



பெற்றோர் இட்ட பெயர் மறக்குமளவுக்கு

நிறத்தின் பெயரால் அழைக்கப்பட்டேன்..

“…ஏ…….கருப்பா….”



மனதின் உயரம் அறியாமல்

உடலின் உயரத்தால் அழைக்கப்பட்டேன்

“..யே…..குட்டையா…”




” கருப்பு நிலா “ என்று

கண்டவர்கள் அழைத்த போது

பொருள் எனக்குப் புரியவில்லை

அப்புறம் புரிந்தது

’ அம்மாவாசை “ என்று.




“ ஏ… கருவாயா….”

என காதலி அழைத்த போதுமட்டும்

கருப்பு பிடித்தது – கருப்பாய்

இருப்பது பிடித்தது.




வெள்ளையாய் இருந்தவன்

வெளியேறச் சொன்னபோதுதான் – நான்

கருப்பென உணர்ந்தேன்

அதுவரை – நான்

கருப்பென எனக்கு தெரியாது.

வெள்ளைக்காரன் போய்

வெகுநாட்கள் ஆனாலும்

வெள்ளை தான்……. இங்கு சுதேசி.





பட்டம் படித்தவன் வகிக்கும் பதவி ……

வொயிட் காலர் ஜாப்

படிக்காதவன் இன்னும் இங்கு …

கருப்பு மை கைநாட்டு.


ரோடு போட்ட தாரும்

சோறு போட்ட ஏரும்

கருப்பான தேசத்தில்

மந்திரி போகும் காரும்

மடிப்பு கலையாத சட்டையும்

வெள்ளையாய் போனது.



சைரன் சிவப்பு

மகிழுந்து வெள்ளை

டயர் கருப்பு.


சிவப்பாய் இருந்த நாக்கு

பொய்ப்பேசி பொய்ப்பேசி

கருநாக்கு ஆனது.



கருநாக்கின் பொய்யை

அதிகமாய் பேசுவதாலோ

கைபேசி ப்ளாக்பெரியானது



கருப்புத்தானே……. என்று யாரும் சுரண்டிப் பார்க்காதீர்கள்

மீறிச் சுரண்டினால் ஏ.டி.எம் கார்டில் பணம் வராது.


மின்னணு எந்திரம் வந்த பிறகும்

விரலில் வைக்கும் மை…கருப்பு

பணம் வாங்கிக் கொண்டு

ஓட்டுப் போட்டதால்

ஜனநாயகமும்….கருப்பு




ஓட்டுக்கு பணம் வாங்கி

விரலில் வைத்த மை

எதிர்க்க திராணியின்றி

வாய்பொத்தி கிடந்ததனால்

விரலில் இருந்து…. கரி

முகமெங்கும் பரவியது

அவமானம் கருப்பு…



பணம் கருப்பானதை

பார்த்து பார்த்துதான்

வறுமை சிவப்பானது                                    ( 2 )



ஊராளும் மன்றங்கள் எல்லாம்

கருப்பு ஆடுகளின் மந்தைகளானது

உள்ளூர் வெள்ளாடுகள்

ஒட்டுத் தாடியோடு ஊர்சுற்றி வருகிறது.



கருப்புக் கொடிகள் ஏற்றுவதற்கு வசதியாய்

கொடிக் கம்பங்களே அரைக் கம்பங்களாகி விட்டன.



கருப்பு சொத்துப் பல்லை மறைக்கும்


வெள்ளைச் சிரிப்பு அரசியலாகி விட்டது – இதை

எழுதியெழுதி பத்திரிக்கைகள் மஞ்சளாகி கிடக்கிறது.



சமாதான வெள்ளைப் புறாக்கள்

செத்துப் போனதொரு நாளில் தான்

கருப்பு பூனை காவலுக்கு வந்தது.



கூரைகளுக்கு கீழே

குழந்தைகள் வெந்துபோனதொரு மாலையில்

கரிக்கட்டையான பிஞ்சுகளின் முகம் பார்த்து

கரும்பலகைகள் அழுத கண்ணீரில்

சாக்பீஸ் துண்டுகளும் கருப்பானது.




கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியிலும்

விளம்பரம் தேடும் வஞ்சகம் எண்ணி

துக்கம் கருப்பாய் சிரிக்கிறது



நீதிதேவதையின்

கண்களில் கட்டிய துணிபோல்

நீதியும் கருப்பானது

இதற்கு வந்துக் கொண்டிருக்கும்

தீர்ப்புகளே பொறுப்பானது

வழக்குரைஞரின் அங்கியில் இருந்த கருப்பு

நீதிபதியின் அங்கியில் படர்ந்து

நிரபராதியின் தூக்கு தண்டனையின் போது

முகத்தை மூடும்

துணியினைச் சென்று சேர்ந்தது.



கரும்பிலே கருப்பு செங்கரும்பு

எறும்பிலே கருப்பு சாமிஎறும்பு



கோவில் கருவறைக் கண்டேன்

கருவறை சிலைகளைக் கண்டேன்

சிலைசெய்த உளிகளைக் கண்டேன்

உளியடித்த சம்மட்டி கண்டேன்

வழிபாட்டின் வடிவம் சிலைகள்

வழிபடுதலின் நிறம் கருப்பு.



திரி கருப்பு

புகை கருப்பு – என்றாயின்

தீபமும் கருப்புத்தானே ?



வண்ணங்களாய் கடவுளை வரைந்து

கைகூப்பி வழிபடலாம்

கண்களை மூடி தியாணித்தால் – ஒருவேளை

உனக்கு பிடிபடலாம்.



கண் மூடினாலும் தெரிவது…. கருப்பு.



மற்ற நிறங்கள் விஞ்ஞானம்

கருப்பு ஒன்றுதான் மெய்ஞானம்                   ( 2 )




சின்னச்சாமி பெரியசாமி என்றிருந்தாலும்

எல்லைக் காப்பது கருப்பண்ண சாமி…




மஞ்சள் சேலைக்கட்டி சிவப்பாய் வரைந்தாலும்

சிவப்பு சேலைக்கட்டி மஞ்சள்நீர் ஊற்றினாலும்

அவள் ’ கரு ‘மாரியம்மன் தான் – கருப்புத்தான்.



நீலகண்டன் தொண்டையில் நின்ற விஷம் கருப்பு

ஆயிரம் தேவர் கடைந்த அமிர்தமும் கருப்பு

புரிந்ததா…..?....புராணங்களும் கருப்பு.




கடவுள் கருப்பு

கடவுள் மறுப்பும் கருப்பு

ராமர் கிருஷ்ணர் ஆத்திகம் கருப்பு

பெரியார் அம்பேத்கர் நாத்திகம் கருப்பு.


பேயெனவும் பிசாசெனவும்

விடாது கருப்பு

பில்லி சூனியம் விரட்ட

வரமிளகாய் கரிக்கொட்டை கருப்பு….



வண்ணங்களை வைத்துக் கொண்டு

வாழ்க்கை நடத்துகிறவன்

மனிதன் மட்டும்தான்..



குங்குமப்பூ சிவப்பா சேர்த்தும்

பொறந்த புள்ளை கருப்பாச்சின்னு

பொண்டாட்டியை அடிச்சான்…



பொட்டு மஞ்சள் பூவு கலரா கொடுத்தான்

புருஷன் செத்ததும் – புடவையை

வெள்ளையாய் கொடுத்தான்.


கருப்பை வெறுத்தவனின் தலையில்

ஒருநாள் வெள்ளை முளைத்தது

அன்றுமுதல் – அவன்

சாயம் பூசித் திரிந்தான்.



முகச்சாயம் பூசி வெளுத்து

நகச்சாயம் அப்பி மினுத்து

வெயிலில் நின்றவனின் நிழல்

கருப்பாய் விழுந்தது 


நிஜங்களை வென்றவனை

நிழல் தோற்கடித்தது



வண்ணங்களின் பைத்தியம் பிடித்த மனிதன்

ராசிக் கற்களில் மோதிரம் செய்தான்

இறந்த பிறகு எழுந்து நிற்கும் நடுகல்

ஏளனமாய் சிரித்தது.


கருப்பு எதனையும் உள்வாங்கும்

எதனுள்ளும் கரையாது.




ஆணி சவப்பெட்டி சமாதி கருப்பு


அதனால் மரணமும் கருப்பு…



நன்றி 

வணக்கம்.