Monday 13 May 2013


வீடு மாறுகிற போதெல்லாம்
நம்மை கிழிக்கின்றன 
படித்து முடிக்காத 
புத்தகங்கள்


Saturday 11 May 2013


முன்னோட்ட படமும் பின்னூட்ட கருத்தும்

“பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? எதிர்த்தாரா ? என்னும் 90 நிமிட ஆவணப்படம்  முன்னோட்ட காணொளி :


கீழ்கண்ட இணைப்பில் ஆவணப் படத்தின் முன்னோட்ட காணலாம் :

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=9nq8AQSmdiw

அப்படத்தின் திரையீட்டு விழா சென்னை வாஹினி ஸ்டூடியோவில் 24.04.2013 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. படம் பார்த்து விட்டு வெளியில் வந்தவர்களின் கருத்துக்கள் கொண்ட கருத்துப்படம் கீழ்கண்ட இணைப்பில் : 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=IPMeI-9DZrI


திரையீட்டு விழாவில் இயக்குனர். அமீர் பேசியபோது :


படத்தின் குறுந்தகடு தயாரிப்பில் இருக்கிறது. விரைவில் வெளிவரும்.....

Friday 10 May 2013











ஒரு மழை வந்துப் போகவேண்டும்          n     செல்வகுமார்

குந்தாணிகள்
தெருவோரத்து கல்தெய்வம்

அம்மி குளவிகளின்
ஆண்டை

தலைமுறைகளைத் தாண்டியும்
நகர்ந்து வரும்
காலக் கடைசல்

மின்கம்பங்களுக்கு அருகமர்ந்த
கல்கம்பங்கள்

’நெல்லுகுத்த வக்கில்ல’ என்பதாக
பெண்ணளக்கும்
கல்தராசு

உலக்கைகளோடு உறவாடி
நெல்லை அரிசியாக்கும்
கல்குழி

திருவிழா நாட்களில்
அரிசி குத்தும் பெண்களிடம்
வாய் நிறைய வழியும் மாவோடு
கதைகேட்கும்
கல்மழலை

குந்தாணியோடு கட்டப்பட்ட மாடுகள்
குந்தாணியிலேயே தவிடுண்ணும்

தவுடு கரைத்த கழிநீரில்
மூக்கணாங்கயிறு தாண்டி
மூழ்கிய மாடுகளின் 
மூச்சிரைக்கும் குமிழிகள் மேல்வந்து
குந்தாணிக்குள் கொப்பளிக்கும்

குந்தாணிச் சுவற்றில் ஒட்டியிருக்கும்
மிச்சத் தவிடுகளை
நக்கித் திண்ணும் மாடுகளின்
நாக்கில் சொட்டும் ஈரங்களில்
வெட்கி குளிக்கும்

புளியிடிக்கும் பொழுதினில்
கொட்டைகள் ஏறி விளையாடும்
கல் பள்ளத்தாக்கு

குந்தாணியில் அமருவதென்பது
குலப்பெருமை

குந்தாணிகள் தேக்கிக் கொள்ளும்
ஒரு குடம்கொள்ளும்
மழைநீரை

மிளகாய் குத்திய
குந்தாணியில் அமர்வதற்கு
ஒரு மழை
வந்துப் போக வேண்டும்

குந்தாணிகளுக்கு அடியில் இருக்கிற
தேள்களுக்குத் தெரியும்
குந்தாணிகள்
நகர்ந்து செல்லாதவைகளென்று.





சமாதானங்களின் கோடித்துணி

·         ரத்தம் வடியும் 
காயங்களை விட
வலியுண்டாக்குகிறது
நீ
சொல்லும் விளக்கங்கள்

·         உன் 
சமாதானங்களின் கோடித்துணிகளால் 
மறைக்க முடியவில்லை
என் பிணத்தின் கால்களை

·         மறுதலிப்பின் பிதற்றல்களுக்குள்ளே
ஒளிந்திருக்கிறது
உனது
ஒப்பங்களின் சாட்சியம்

·         புன்னகை மாறாமல்
நடந்து செல்கிறாய்
எங்கள் பிணங்களின் மேலே

·         ஒன்று சேரவே முடியாதா ?
என் வலிகளும்
உன் உணர்வுகளும்

Wednesday 8 May 2013



திருவிழாவில் தொலைந்தவர்கள்     .  ப. செல்வகுமார்

எல்லா வருஷம் மாதிரியே
இந்த வருஷமும் வந்தது
காட்டு மாரியம்மனுக்கு திருவிழா

பூ அலங்காரம்
பல்லக்கில் பவணி
தேர் ஊர்வலம்
குறையொன்றுமில்லை
மாரியம்மனுக்கு...

முந்தின வருஷத்து
வடு மாறாமலே
அலகு குத்தி வரும்
கருப்பையாவுக்கு
கூட்டத்தைப் பார்த்ததும்
அருள் வந்து விடுகிறது
சடசட வென்று…

ஏரோப்ளேன் அலகில்
தலைகீழாய் வரும்
முருகேசனுக்கு வாய்த்திருக்கிறது
அந்தரத்தில் பறக்க…….

வெட்டுண்ட கிடாய்களின்
ரத்தத்தின் மேல்
கொடுவாளோடு நிற்கும்
முருகையனுக்கு
இன்றைக்கு மட்டும்
சாமி மரியாதை…

முறம் போல் விரித்த
முந்தாணையில்..
ம்ஹீம்.. ம்ஹீம் என
சாமியாடி வரும்
தாண்டாயி கிழவிக்கு
இப்போதும்
ஒரு குடம் தண்ணீரும்
ஒரு பிடி விபூதியும்தான்…

ஊக்கோடு குத்தப்பட்ட
ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை
அடவுகளை கூட்டியது
காவடியாடும் ஜெயராமனுக்கு…

அக்னிச்சட்டி ஏந்தி வரும்
வள்ளியம்மைக்கு
வேறொன்றும் வாய்ப்பதில்லை
கட்டிய
மஞ்சள் சேலையைத் தவிர….

அங்கப்பிரதட்சணம் செய்து
கோவிலை சுற்றுபவர்களின்
முழங்காலுக்கு மேலேறிய
பாவடைகளை சரிசெய்யும்
தோழியர்களின் பார்வைகளோடு
சேர்ந்து சிவக்கும்
கோவிலின் புனிதம்… 

மஞ்சள் நீராடியும்
மறையவில்லை
கடன் கொடுத்தவன் துப்பிய
எச்சில் கரி…

மூனுசீட்டுக் காரனையும்
தாலிசெயின் அறுப்பவனையும்
பிள்ளைப் பிடிப்பவனையும்
கடந்து செல்கிறபோதும்
மெளனமாகவேயிருக்கிறாள்
மாகாளி
சூலாயுதத்தோடு…… 

மேலும் கீழுமாய்
சுற்றி சுற்றி வரும்
ராட்டினம் மட்டும்
சொல்லிக் கொண்டேயிருக்கிறது
வாழ்வின் சூட்சமங்களை….

“ ம்ம்ம்ம் சொல்லு……
என்ன்னா கொற வச்சோம்…? ”
அதட்டலோடு கேட்கும்
பூசாரிக்கு தெரிந்தே இருக்கிறது
தெய்வங்கள்
நம் குறைகளை தீர்க்க வருவதில்லையென்று.


Saturday 4 May 2013

திரைக்கடலின் கடற்கரையில்.....

இஸ்லாமிய அழைப்பு மற்றும் ஆய்வு மையம் ( IDRC ) சார்பாக பேராசிரியர்.பெரியார்தாசன் அவர்கள் நெறியாள்கையில் “பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? எதிர்த்தாரா ? என்னும் 90 நிமிட ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டது. அந்தப் படத்தில் அவரோடு நடிப்பதற்கு எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ‘கீரிப்புள்ள’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமாகிய பெரோஸ்கான் அவர்களது வீட்டில் தான் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட படம்தான் இது......

Photo: நானும் எனது ஆசிரியர்களும்....

அப்படத்தின் திரையீட்டு விழா சென்னை வாஹினி ஸ்டூடியோவில் 24.04.2013 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. அப்போது அந்த ஆவணப்படத்தின் கருத்தியலை உள்ளடக்கிய “பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? எதிர்த்தாரா ?” என்ற பேராசிரியர். பெரியார்தாசன் அவர்கள் எழுதிய  நூலை இயக்குனர். அமீர் வெளியிட்டார். நூலின் ஒரு பிரதியை நானும் பெற்றுக் கொண்டபோது எடுக்கப்பட்டதுதான் இது......

Photo: சாவதற்கு 5 நிமிடம் முன்பு கலிமா சொல்லி முஸ்லிமாக மரணிப்பேன்!  
பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? ஆவணப்படத்தில் அதிர்ச்சி தரும் உண்மைகள் ! 
 
இஸ்லாமிய அழைப்பு மற்றும் ஆய்வு மையம் சார்பில் பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? எதிர்த்தாரா ? எனும் ஆவணப்படதிரையீட்டு நிகழ்சி  நேற்று 24.3.13 மாலை வடபழனி RKV ஸ்டுடியோ வில்   நடை பெற்றது ! சுமார் 90 நிமிடங்கள் ஓடும் இந்தத் திரைப்படத்தில் பெரியார் குறித்த இதுவரை வெளிவராத பல அறிய தகவல்கள் வெளி வந்துள்ளன. திரையீட்டு நிகழ்சியில்  கலந்து கொண்ட பத்திரிக்கையாளர்கள் , திரைத் துறையினர் , பெரியார் இயக்க தோழர்கள், தலித் இயக்க தோழர்கள் , இஸ்லாமிய இயக்க தலைவர்கள், சமுதாய ஆர்வலர்கள்  அனைவரும் IDRC இன் இந்த முயற்சியை வியந்து பாராட்டினர்.    
 
புரபசனல் கூரியர் அஹமது மீரான் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் செங்கிஸ் கான் வரவேற்புரை ஆற்ற , இயக்குனர் சிபிச்சந்தர் ,இயக்குனர் அமீர் , பேராசிரியர். செல்வராஜ் , ஆகியோர் வாழ்த்துரை வழங்க இறுதியாக பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்!   IDRC செயலாளர் இப்ராகிம் காசிம் நன்றி உரை நிகழ்த்தினார்.இந்நிகழ்ச்சியில் பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? எதிர்த்தாரா ? எனும் ஆவணம் புத்தகமாகவும் வெளியிடப்பட்டது !  

இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்திய IDRC துணைத் தலைவர் செங்கிஸ் கான் 'இஸ்லாத்திற்கு ஆதரவாக இவ்வளவு பேசிய பெரியாரை இஸ்லாமிய சமுதாயம் சரியான முறையில் அணுகவில்லை பயன் படுத்தவில்லை எனும் ஆதங்கத்தின் வெளிப்பாடாக பெரியார்தாசன் அப்துல்லாஹ்   அவர்களையாவது சரியான தளத்திலே பயன்படுத்த வேண்டும் எனும் தாவா நோக்கில் எடுக்கப்பட்டது தான் இந்த ஆவணப்பட முயற்சி !  ஏன் எனில் இங்கே பெரியாரின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாத அமைப்போ தலைவர்களோ இல்லை எனும் போது      50 ஆண்டுள் அவர் இஸ்லாத்தை பற்றி சொன்ன கருத்துக்கள் எளிதில் மக்களை சென்றடையும் ! எனவே இந்த ஆவணப்பட திரையீட்டு நிகழ்ச்சி  இன்ஷா அல்லாஹ தமிழகத்தின் அனைத்து பெரு நகரங்களிலும் மேலும்   வெளிநாடுகளிலும் வெளியிட உங்களின் ஒத்துழைப்பை நாடுகிறோம் ! என்று கூறினார்.

கீழே இருப்பது அப்படத்தின் இயக்குனர்.சிபிசந்தர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியது......
இஸ்லாத்தை பெரியார் ஏற்றாரா எதிர்த்தாரா எனும் தலைப்பில் நான் இயக்கிய ஆவணப்படத்தில் அய்யா பெரியார் தாசன் அவர்களை கேள்விகள் கேட்கும் பொறுப்பை ஏற்று அதை வெகு நேர்த்தியாக செய்த பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் வெளியீட்டின் போது ஆற்றிய உரை அனைவரையும் ஈர்த்ததோடு இன விடுதலைக்கான போராட்ட களத்திற்கு ஒரு தளபதியையும் அடையாளப்படுத்தியது  - இயக்குனர் சிபிசந்தர்

Photo: நான் மட்டும் வருவதால் எந்த நன்மையையும் இல்லை 
ஒட்டு மொத்த என் கிராமமும் வர வேண்டும் !

 பெரியார் ஆவணப்படத்தில்   ' நாங்க தச்ச செருப்பை அவங்க போடுறாங்க எங்களப் போடக் கூடாதுன்னு சொல்ராங்களே! எங்க எருமை மாடு ஊர்க்குளத்துல குளிக்குது நாங்க குளிக்கக் கூடாது என்கிறார்களே' என உணர்வோடு உயிரோட்டமாக நடித்த பேராசிரியர்  செல்வகுமார் அவர்கள் அந்த ஆவணப்பட திரையீட்டு நிகழ்சியில் பேசும் போது  'பெரம்பலூர் மாவட்டத்தின் பெயர் தெரியாத கிராமத்தில் இருந்த என்னை இந்த ஆவணப்படம் என்னை பெயர் அறிய செய்தது. அய்யாவின் கை பிடித்து அறிவு சாலை சென்றேன் ! இன்றைக்கும் அய்யா பெரியார் தாசனின் [அப்துல்லாஹ்வின் ] கை பிடித்து இந்த மேடை ஏறி வந்துள்ளேன் !   இன்றைக்கு நான் இந்த ஆவணப்படத்தில் நடித்ததன் மூலம் பெரியார் பரிந்துரைத்த  இஸ்லாத்தை உள்வாங்கி   இருக்கிறேன்! ஆனால் நான் மட்டும் வருவதால் எந்த நன்மையையும் இல்லை! எனது ஒட்டு மொத்த கிராமத்துக்கும் இந்த கருத்துக்களை எடுத்து சொல்லி   பெரியார் சொன்ன இடத்துக்கு இஸ்லாத்துக்கு வர வேண்டும் அதுவே என் விருப்பம்  ! ஏன் எனில் இது என் போன்ற தனி மனிதனின் பிரச்னை இல்லை இது சமுகம் சார்ந்த பிரச்னை என்றார். அல்ஹம்து லில்லாஹ்! இறைவன் அவரின் உள்ளத்தை இஸ்லாத்தின் பால் திருப்பட்டும்!

அந்த ஆவணப்படத்தின் முன்னோட்ட காணொளியை ( Trailer ) கீழ்கண்ட இணையதள முகவரியில் காணலாம்.......
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=9nq8AQSmdiw

படப்பிடிப்பு இடைவேளையில் ... க்ளிக்கியது.. இது....











Thursday 2 May 2013


விடுமுறைகளில் வீட்டில் குழந்தைகளை பயமுறுத்துவதற்கு எப்போதும் ஒருமிஸ்தேவைப்படுகிறார்கள்.





 # குழந்தைகள் தங்கள் விளையாட்டுக்கள் மூலம் மறுபடி மறுபடி சுதந்திரத்தை பற்றி சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் பெற்றோர்களுக்கு.

விடுமுறையில்
ஊருக்குப் போன
பிள்ளைகள் வரும் வரை
விளையாடமலே இருக்கின்றன
அலமாரி பொம்மைகள்.....



தேவதைகள் என்று
நாம் முதலில் 
குழந்தைகளைத்தான் அழைத்திருப்போம்....







" நானும் கவிஞனென்று திமிரோடு சாகலாம்


பெரம்பலூர் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில் 29.04.2013 திங்கள்கிழமை அன்று மாலை 7 மணி அளவில் 007 புகைப்பட நிலைய மாடியில் பாரதிதாசன் 123 ஆம் பிறந்தநாள் கவியரங்கம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சி பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை தலைவர் கவிச்சிட்டு வேல்.இளங்கோ தலைமையிலும், செயலாளர் ஓவியச் செம்மல்.கி.முகுந்தன் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது.



இந்நிகழ்வின் சிறப்பு அங்கமாக பாவேந்தர் பிறந்தநாள் கவியரங்கம் நடைபெற்றது. இக்கவியரங்கத்தை பேரவையின் இனைச் செயலாளர் கவிஞர்.முத்தரசன் தலைமையேற்று நடத்தினார். பொருளாளர் புலவர் செம்பியனார் வரவேற்புக் கவிதை வாசித்தார். துனைச் செயலாளர் பாவலர். சிற்றரசு நன்றிக் கவிதை பாடினார்.

இக்கவியரங்கத்தில் கீழ்கண்டவாறு தலைப்புகளில் கவிஞர்கள் கவிதை பாடினர்.
  மருத்துவர்.கோசிபா                        -      குடும்பவிளக்கு
கவிஞர். ஆ. இராமர்                         -      அழகின் சிரிப்பு
கவிஞர். அகவி                                  -      தமிழியக்கம்
கவிஞர். தேசிங்குராஜன்                -     இருண்டவீடு
பேராசிரியர். ப.செல்வகுமார்        -     புரட்சிக்கவி


இக்கவியரங்கத்தில் புரட்சிக்கவி – பாரதிதாசன் என்ற தலைப்பில்  நான் பாடிய கவிதை :


நானும் கவிஞனென்று திமிரோடு சாகலாம்”

– ப. செல்வகுமார்.

தமிழுக்கு தலை வணக்கம்.

பெரியார் பேசிட மேடை செய்து
எங்களைப் போன்று
சிறியோர் பேசிடவும் மேடை செய்த
சுழியம் ஏழின் தலைவனே
விடுதலையின் முகவரியே
முரசொலியின் பகுத்தறிவே
உமக்கு எம் தலை வணக்கம்.

வெடிவைத்து உடையாத
மலைகளை எல்லாம்
பொடிவைத்து தகர்க்கும் – நேர்
வகிடெடுத்த கவிச்சிட்டே..
உன் கைக்குட்டையில் பொடி நெடி அடிக்கும்
உன் கைப்பிடித்தால் சர வெடி வெடிக்கும்
எம் தந்தையே
உனக்கும் வணக்கம்.

வரவேற்பு கவிதை
வாசித்து அமர்ந்திருக்கும்
விளவை செம்பியனாரே
உம்மோடு எனைச் சேர்த்து
பெரியவனாக்கினாய்..
எம்மோடு நீ சேர்ந்து
இளையவனாகினாய்..
உனக்கு எனது
இதய வணக்கம்.

நன்றி கவிதை பாடும் 
சிற்றரசுக்கும் நல்வணக்கம்.
வந்திருக்கும் அனைவருக்கும் 
வணக்கம்.


கவியரங்கத் தலைவரே
பாட்டரங்க நடுவரே
ஓய்வுப் பெற்றும் இளைஞரே
கீழப்புலியூர் துறைமுகம்
கண்டெடுத்த முத்தரசே
முதலில் உனக்கு
முத்தமிழ் வணக்கம்.

கவியரங்கம் என்றாலே
கவிஞர்களுக்கிடையில்
சண்டை பிறக்கும்
சில நேரம் - கவிதைகளால்
மண்டை பிளக்கும்

தலைமைக் கவிஞரே
தலைப்புகளை ஒதுக்கியவரே
நன்றி உனக்கும்

நல்லவேளை குடும்ப விளக்கு
எனக்கு இல்லை…
இன்று இரவு
உணவு கிடைக்கும்
உறக்கம் பிடிக்கும்….


அழகின் சிரிப்பைக் கூட
ஆ.இராமருக்கு கொடுத்தீர்
அவர்
கட்டாத கோவிலுக்கு
செங்கல் சேகரிப்பார்
இல்லாத பாலத்தில்
இலங்கை செல்வார்..

தமிழியக்கத்தை
கொண்டு போய்
அகவியிடம் கொடுத்தீர்
தப்பித்தேன் நான்…
இன உணர்வு
மொழி உணர்வு
எல்லாம்செத்த மக்களிடையே
எதைச் சொல்லி 
தமிழியக்க கவிதை பாடுவேன்…

இருண்ட வீட்டின்
சாவியை கொண்டுபோய்
தேசிங்குராஜனிடம் கொடுத்தீர்..
அவர்
குதிரையை விற்றுவிட்டு
இன்வெர்ட்டர் வாங்கிவிட்டார்…

எனக்குத் தந்தாய் புரட்சிக்கவி..
இதற்காகவே நீயும் புரட்சிக்கவி.

புரட்சிக்கவி
இது
பாவேந்தன் எழுதியது
இதற்குப் பிறகுதான் – அவன்
பாவேந்தன் ஆனது

புரட்சிக்கவி
பில்கணியம் என்ற
வடமொழி நூலைத் தழுவியது
புரட்சிக்கவியால்
பார்ப்பனியம்
சபையை விட்டு நழுவியது.


வறட்சி வரிகளால்
வடமொழி வாழ்ந்த போது
புரட்சி வரிகளால்
பூத்திட்ட கவிதை இது..
கவிதைக் கதை இது..

இது
அரசனுக்கும் புலவனுக்கும்
இடையிலான கதை..
செங்கோலுக்கும் எழுதுகோலுக்கும்
நடந்த யுத்தக் கவிதை..

புரட்சிக்கவி மரபுக் கவிதை
மரபுகளை உடைத்த கவிதை
அகவல், எண்சீர் விருத்தம்
சிந்துக் கண்ணி, பறொடை வெண்பா
நொண்டிச் சிந்து, கும்மி என
இலக்கணத் தேரேறி
எழுதிட்ட இலக்கியக் கதை…


இனி
கண்களை மூடிக் கொள்ளுங்கள்
கவிதைத்தேர் இழுக்கப் போகிறேன்
செவிகளை திறந்து வையுங்கள்
அதன்வழி
இதயத்தில் இறங்கப் போகிறேன்…

மன்னன் ஒருவன்
மந்திரியை அழைத்தான்
”எனக்கொரு மகளுண்டு
அவள் பெயர் அமுதவல்லி என்றான்
இந்த நாட்டின் இளவரசி
எழில் கொஞ்சும் பேரழகி
கவிதை கற்றுக்கொள்ள வேண்டும்
புலவன் ஒருவனை ஏற்பாடு செய்யுங்கள்” என்றான்.
அப்போதெல்லாம்
மன்னர்கள் அமைச்சர்களிடம்
ஆலோசனை கேட்பது
வழக்கமாயிருந்தது…


“உதாரன் என்றோர் இளைஞன்
கவிப்பேருலகின் கலைஞன் – அவன் தான்
இளவரசிக்கு கவிதை சொல்ல
சரியான நாயகன்
சகலகலா வல்லவன் “
மந்திரி பதில் சொன்னான்
மறுகணமே தயங்கினான்

என்ன ? என்பதுபோல்
அரசன் பார்த்தான்
குறிப்பை அறிந்து
மந்திரி கொட்டிவிட்டான்..
“குலமகளை அன்னவன்பால் கற்கவிட்டால்
குறைவந்து சேந்தாலும் சேர்தல் கூடும்”
பஞ்சையும் நெருப்பையும்
பக்கத்தில் வைத்தால்
பற்றிக் கொள்ளாமல் விடுமா ?

இப்போது பதற்றம்
மன்னனை பற்றிக் கொண்டது
பரபரப்பு அவையிலும் தொற்றிக் கொண்டது
அமைச்சர் தான்
முடிச்சுப் போட்டார் – பின்
அவரே அவிழ்த்தார்…
“இருவரும் பார்க்கா வண்ணம் திரையிடுக…
உதாரன் குருடனென்று
அமுதவல்லியிடம் சொல்லுங்கள்
அமுதவல்லி குஷ்டரோகியென
உதாரனிடம் சொல்லுங்கள்…”

இவ்விடத்தில்
உங்கள் இதயத்தில்
புராண நாராயணன் தோன்றினாலும்
புதுச்சேரி நாராயணசாமி தோன்றினாலும்
அதற்கு நான் பொறுப்பல்ல – அந்த
புதுச்சேரி புரட்சிக்கவிதான் பொறுப்பு.

மன்னன் மகிழ்ந்தான், வியந்தான்
“க.க.போ.” என்று கத்தினான்.
ஆணைப் பிறப்பித்தான்
சோலை நடுவில்
பொன்மேடை செய்பித்தான்.

இருவரும் பார்க்காமல் திரைப் போட்டான்
இதயங்களுங்கிடையில் திரையிட்டான்
இசையில் பண்ணில் பாடம் நகர்ந்தது
இப்படியே பல நாளும் நகர்ந்தது.

ஒருநாள்
அமுதவல்லி காத்திருந்தாள்
திரைக்கு அந்தப் பக்கம்
உதாரனனை காணவில்லை
திரைக்கு இந்தப் பக்கம்

காத்திருந்த இளவரசியின் காதில்
கானமழை தேனாய் பொழிந்தது
இசைவந்த வழியே
இளவரசி நுழைந்தாள்
பூஞ்சோலை நடுவில்
புயல் போல் – ஒரு
இளைஞனை கண்டாள்…

“என்ன வியப்பிது வானிலே – இருந்
திட்டதோர் மாமதி மங்கையாய்
என்னெதிரே வந்து வாய்த்ததோ ?”
உதாரனன் உளறினான்..
“அமுதவல்லி நானன்றோ..”
அவளும் மயங்கினாள்…

இருவருக்குள்ளும் காதல் பெருவெள்ளம்
கரையைக் கடந்தது – அதில்
மன்னனும் மந்திரியும்
அவர்களின் சூழ்ச்சியும் கரைந்தது….
இருவருக்குள்ளும்
காதல் பிறந்தது…
காதலோடு அவனுக்கு
கலக்கமும் பிறந்தது – அதற்கு
காரணம் இருந்தது….

நீயோ அரசகுலத்து இளவரசி
நானோ பாட்டெழுதி பிழைக்கும் பரதேசி
“காதல் நெருப்பால் கடலுன்மேல் தாவிடுவேன்
சாதி என்னும் சங்கிலி எண்ணி தாளை பிணைத்தடீ”

விரும்பும் உரிமை எனக்கிருந்தாலும்
தருமபுரிகள் தடுக்குதடி..
அடுத்து அமுதவல்லிதான்
அணையை உடைத்தாள்..
“வாளை உருவிவந்து மன்னன் எனதுடலை
நாளையே வெட்டி நடுக்கடலில் போடட்டும்
என் உள்ளம் மாறாதே..
நமதுள்ளம் ஒன்றுபட்ட பின்னர்
உயர்வென்ன ? தாழ்வென்ன ?

இளவரசி என்னை
கொல்வதற்கு சட்டமில்லை
அரசன் உன்னை
கொல்ல வந்தால்
என் வேல்விழியால்
அவனை தடுத்திடுவேன்…

இன்னும் என்ன ?
உதாரன்
அண்ணத்தை அள்ளினான்
கண்ணத்தை கிள்ளினான்
அவளும்
வில்லாய் வளைந்தாள் – காதல்
வித்தையால் நெளிந்தாள்
இன்ப உலகில் இருவரும் உலாவினர்.

இதுவரை அவளை பசலை தின்றது
இப்போது அவளை மசக்கை வென்றது

அறிந்த தோழிகள் புருவம் உயர்த்தினர்
அப்படியே அதை அரசனிடம் ஓதினர்
தோழிகள் சொன்னதை கேட்டவுடன்
தேள்கள் கொட்டியதாய் திடுக்கிட்டான்

அவையை கூட்டினான்
உதாரனனை இழுத்துவரச் செய்தான்
“சிலையிடை இவனை வைத்தே – சிரச்
சேதம் புரிக..” என ஆணையிட்டான்
அவையை நோட்டமிட்டான்.

மலையினைப் பிளந்திடும் ஓர்
சத்தம் வந்தது…
வந்தனள் .. அமுதவல்லி ..!
“இல்லை உனக்கதிகாரம் – அந்த
எழிலுடையான் பிழை இழைக்க வில்லை
உன் குடிக் கூறிழைத்தால் – எனில்
ஊர்மக்கள் இடம் அதை உரைத்தல் கடன்..!”

மன்னனுக்கு வந்ததுக்கு கோபம்…
கத்தினான்…
“இருவரையும் கொலை செய்ய
கூட்டிச் செல்வீர்..”
இது எனது கட்டளை
விதி 110 என்றான்
இதை மறுப்போர் யாராயினும்
வாயைப் பொத்து என்றான்.

மன்னனை மறுக்கும் அதிகாரம்
அக்காலத்து மந்திரிகளுக்கு இருந்தது
“நீதி அன்றிது
மங்கை கிழைத்திடும் தண்டம்;
அன்னது நீக்கியருள்க “ என்றான் மந்திரி.

அமுதவல்லியோ..
“சாதல் எனில் இருவரும் சாதல் வேண்டும்
தவிர்வதெனில் இருவரும் தவிர்தெல் வேண்டும்
ஒதுக இவ்விரண்டி லொன்று மன்னன் வாய்
உயிர் எமக்கு வெல்லமல்ல என்றாள் மங்கை..”

மன்னன் எழுந்து விட்டான்
“இருவரையும் கிடத்தி கொலை செய்வீர்
கடிது செல்வீர் ! கடிது செல்வீர் !”
அவையினிலே அசைவில்லை பேச்சில்லை
அச்சடித்த பதுமைகள் போல் இருந்தார் யாரும்

காதலர் இருவரையும் இழுத்து வந்தனர்
கொலைக் களத்திற்கு அழைத்து வந்தனர்
ஆறாத அமுதவல்லி அலறினாள்….
“கொலை செய்யும் எதேச்சை மன்னன் பொருந்தட்டும்
பொதுமக்கள் ரத்தச் சேற்றை அருந்தட்டும்…”
……… ……… ………….
கொலைக்கள அதிகாரி கூறினான் இப்படி…
“உதாரனனும் அமுதவல்லியும்
கடைசியாய் சில பேச்சு பேசிடுக…”
தேவையில்லாமல் இவ்விடத்தில் நீங்கள்
அப்சல் குருவையோ
அஜ்மல் கசாப்பையோ நினைத்தால்..
கவிதையை இத்தோடு நிறுத்தி விடுவேன்….

உதாரனன் முழங்கினான்…
“சிரம் அறுத்தல் வேந்தனுக்கு
பொழுது போக்கும் சிறிய கதை ;
நம்க்கெல்லாம் உயிரின் வாதை..”
சிரம் அறுத்தலுக்கு
மரண தண்டனை என்றும்
பொருள் கொள்ளலாம்…
வேந்தனுக்கு
முதல் குடிமகன் என்றும்
பொருள் கொள்ளலாம்….
”மரண தண்டனை முதல் குடிமகனுக்கு
பொழுது போக்கும் சிறிய கதை ;
நம்க்கெல்லாம் உயிரின் வாதை..”

”ஆழ்க என்றன் குருதியெல்லாம்
அன்பு நாட்டில் ஆழ்க என்றான்”
தலை குனிந்தான் கத்தியின் கீழ்….
அமுதவல்லி ஆவென்று கதறினாள்..
பதை பதைத்தாள்…
தேச மக்கள் அனைவரும் பார்த்திருந்தனர்….

உதாரன் கழுத்து கத்தியின் கீழ்…
அமுதவல்லி அழுகையின் விளிம்பில்..
தேச மக்கள்  பார்த்து கொண்டிருந்தனர்….
என்ன நடந்தது மிச்சக் கதையில்…?
என்ன நடந்த்து கதையின் முடிவில்..?

உதாரனனுக்கு இன்னொரு பெயருண்டு பேரறிவாளனென்று….
உதாரனனுக்கு இன்னொரு பெயருண்டு சாந்தனென்று….
உதாரனனுக்கு இன்னொரு பெயருண்டு முருகனென்று….
அமுதவல்லிக்கும் இன்னொரு பெயருண்டு நளினியென்று….

கதையின் முடிவை தேடிப் படியுங்கள்…
காலத்தின் முடிவை நீங்கள் எழுதுங்கள்….
புரட்சிக்கவி முடிந்தது….

இனி….
நால்ரோட்டுக்கு அருகே
நாலுசெண்ட் நிலமில்லாமல் போகலாம்…
துறைமங்கலம் வாழை இலையில்
மதிய உணவு உண்ணாமல் போகலாம்…
நாகரீக உடையில்
புதிய பேருந்து நிலையத்தில்
வலம் வராமல் இருக்கலாம்….
சிவப்பு விளக்கு சுழற்சியில்
அரசு பதவிகளில்
ஆட்சியரக வளாகத்தில்
சுழலாமல் இருக்கலாம்…
இவையேதும் இல்லாமல் போகலாம்….
எதுவும் இல்லாமலும் போகலாம்….
பழைய பேருந்து நிலையம்
முகுந்தனது மாடியில்
சிட்டு, விளவை, சிங்காரம் நட்பில்
பாவேந்தன் பாடல் பாடி – நானும்
கவிஞனென்று திமிரோடு சாகலாம்.
நன்றி.
வணக்கம்.