Tuesday 30 April 2013

          உலக புத்தக தின விழா 

பெரம்பலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட மைய நூலகத்தில் 27.04.2013 அன்று சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ‘உலக புத்தக தின விழா’ கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையேற்கவும், சட்டமன்ற உறுப்பினர் இளம்பை இரா. தமிழ்செல்வன் முன்னிலை வகிக்கவும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் இரா.காமராசு சிறப்புரை ஆற்றினார்.


இந்த விழாவில் பெரம்பலூர் மாவட்ட மாணவ, மாணவியர்க்கு உலக புத்தக தின விழாவினை முன்னிட்டு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு அதற்கான பரிசுகளை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.



இவ்விழாவில் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் , பொதுமக்கள் என பெருந்திரளான மக்கள் கலந்துக் கொண்டனர்



மாவட்ட நூலக வாசகர் வட்டத் துனைத் தலைவர் என்ற வகையில் நானும் பேசிட வாய்ப்பளிக்கப்ப்ட்டேன்.


மாவட்ட நூலக அலுவலர் சி.அசோகன் பொன்னாடைப் போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார். 


கடந்த 2010 ல் நூலத்தில் ரூபாய் 1000 கொடுத்து புரவலராக இனைத்துக் கொண்டதற்கான பட்டயமும் அவ்விழாவில் வழங்கப்பட்டது.


புத்தகம் தனிமனிதனை பண்படுத்துகிறது                                                                      நூலகம் சமூகத்தை கட்டமைக்கிறது .





Friday 26 April 2013















வாடகை வீடு 

பத்துவயது மகன் கேட்டான்
“அப்பா நான் எந்த வீட்டில் பொறந்தேன்?”
அது … வந்து…
பதிலை முடிக்கும் முன்பே
கடைக்குட்டியும் கேட்டுவிட்டாள்
“அப்பா நானு?...”
மெளணத்தால் விக்கித்து
மனைவியின் முகம் தேடினேன்
“எப்பங்க சொந்த வீடு கட்டுறது?“
வாடகை ஏற்றத்தால்
வருடத்திற்கொருமுறை
மாறிக்கொண்டேயிருக்கிற வீடுகளில்
பதிலிறுக்க முடியாத கேள்விகளோடு
நிராசையாகின்றன
சொந்த வீடு பற்றிய கனவுகள்
                                


அம்மாவும் கோழியும்
                 

வலதுகாலை மடக்கி
இடதுகாலை நீட்டி
திருவையில் வரகு அரைக்கிற
அம்மாவின் தோளிலும் தொடையிலும்
பயமின்றி ஏறிவிளையாடும்
கோழிக்குஞ்சுகள்

அம்மாவும் கோழிகளைப் போலத்தான்

”அடுப்புக்கிட்ட போகாத”
“கொளம்புசட்டிய ஊத்தாத”
”ச்சூ வெளியிலபோயி  மேயி”
எதையாவது கோழிகளோடு
பேசிக் கொண்டுத் தாணிருப்பாள்

வெளியூருக்குப்  போனால்
மறக்காமல் சொல்லிவிட்டுப் போவாள்
“இருட்டுறதுக்கு முன்னாடி
கோழியை பிடிச்சு
கொடாப்புல அடைச்சு வை”

திண்ணையில்
அரிசி புடைத்து கொண்டிருந்த
அம்மாவின் கால்களின் கீழே
மேய்ந்த குஞ்சுகளை
தூக்க வந்த பருந்துகளை விரட்ட
அரிசியோடு முறத்தை வீசியதில்
குஞ்சுகளை போட்டுவிட்டு
பறந்தோடும் பருந்துகள்

மகளோ மருமகனோ
விசேத்துக்கு வந்து விட்டால்
வாசலில் மேயும் கோழியை
தலையை பிடித்து
சுடுதண்ணீர் சொம்பில்
கவிழ்த்து விடுவாள்

மழைக்கு பயந்து
தகர கதவை தாண்டி
வீட்டுக்குள் வரும்
கோழிகளையும் குஞ்சுகளையும்
பக்கத்திலேயே வைத்து படுத்துறங்குவாள்

குஞ்சுகள் கோழியின் சிறகிலும்
கோழி அம்மாவின் சேலையிலும்
கண்ணுறங்கும்



பாத்திரம் விளக்கி ஊற்றிய தண்ணீரில்
கோம்பு கருவேப்பிலை
கொத்தவரும் கோழியை பிடித்து
புட்டிய போட்டு மூடி வைச்சா
காட்டுக்கு போறதுக்கு முன்னால்
முட்டை போட்டு விடும்

மறந்த நாட்களில்
விட்டத்தில் ஏறி
சாமி போட்டா பின்னாடி
போட்ட முட்டைகள்
அம்மாசிக்கு அப்பா
பொட்டு வைப்பதற்காக அழுத்துகையில்
விபூதி தட்டுகளில்
விழுந்து விடும்

பள்ளிக்கூடம் போன பிள்ளைகள்
இடைவேளைகளில்
தண்ணீர் குடிக்க வந்தால்
பச்ச முட்டையை
விரலால் தட்டி ஓடு உடைத்து
அப்படியே குடிக்கத் தருவாள்

புட்டியில் வைக்கோல் பரப்பி
முட்டைகளை வைத்து
அடைக்கு வைக்கிற
இருபத்தியோரு நாட்களும்
திறந்து திறந்து பார்ப்பாள்

ஒரே சமயத்தில்
பதினான்கு குஞ்சுகள் பொரித்த
அந்த வருஷத்தில் தான்
அம்மாவும் முழுகாம இருந்தாள்
எனது தம்பிக்காக

குப்பைமேடு சாக்கடை
வெட்டிக்காடு
எங்கு சென்றாலும்
குஞ்சுகளோடுதான்  கோழிகள் செல்லும்
அம்மாவைப் போலவே

அம்மாவைப் பார்த்துதான்
கற்றுக் கொண்டதோ கோழிகள்
குஞ்சுகளை இறகில் மூடுவதை.

                    .
தேர்வு அறை

நீளும் அமைதியில்
பயமுறுத்தும்
பேனாக்கள்
உருளும் சப்தம்.


Saturday 20 April 2013

இப்பத்தான் ஆரம்பிக்கிறேன்.......


வலைப்பூவில் எழுத வேண்டும் என்று வெகு நாளாய் ஆசை.

முதலில் நன்றாக வடிவமைக்க வேண்டும்.

நிறைய தெரிய வில்லை. புத்தகம் ஏதாவது இருக்கிறதா ?

முதலில் எனது கவிதைகளை பரப்புகிறேன்.

கட்டுரையா ? அதெல்லாம் பெரிய வார்த்தை....ரொம்ப கஷ்டங்க....


முயற்சிக்கிறேன்.
வாழ்த்துங்களேன்.