Monday 14 October 2013

என் வார்த்தைகளை வரச் சொன்னாயா ?

கடந்த 13.10.2013 அன்று நடைபெற்ற பெரம்பலூர் பதியம் இலக்கியச் சங்கமத்தில் நடைபெற்ற கவிதை வாசிப்பில் நான் வாசித்த கவிதை.

எது சிலாகிக்க
என்னை கவிதை எழுதி வரச் சொல்லி
அழைப்பு விடுத்தாய் ?

ஆமாம்சாமி போட்டு குப்புறக் கவிழ்ந்து
எதன் போதும் நிமிர்ந்து சிலிர்த்துடாது
குனிந்தே கிடக்கும் உன் தலையை
துடைத்து தூக்கி கிரீடம் சூட்ட – என்
வார்த்தைகளை வரச் சொன்னாயா ?

பதுங்கி மெல்ல நகரும் பூனையைப் போல்
அதர்மங்களின் பாதையில் அரவமின்றி
இமைமூடி நடக்கிற உன் கண்களுக்கு
பீலி கோர்த்து சாமரம் வீச
அவிழ்த்துப் போட்ட அம்மணமாய் – என் கவிதைகளை
ஆடைகளின்றி வரச் சொன்னாயா ?

ரேகைகள் அழிய ரூபாய் நோட்டுக்களை
எண்ணிக் களைத்து குவிந்து சூம்பிப் போய்
லஞ்ச சீழ்ப்பிடித்த உன் கைகளின் விரல்களில்
வெளிறிப் போன குஷ்டங்களை மறைக்க
கணையாழிப் போல் சூடிக் கொள்ள – என்
வார்த்தைகளை வரச் சொன்னாயா ?

நேர்மையின் பாதையில் சிறுநடையும் பயிலாது
அருவருப்பின் மலங்களின் மீதமர்ந்த
தொடைகளை தாங்கி நிற்கும்
கழிப்பறையின் நிலையொத்த உன் கால்களுக்கு
பரதனின் பாவணையோடு பாதுகை சூட – என்
வார்த்தைகளை வரச் சொன்னாயா ?

கோவில் திருவிழாவில் கவளங்களை உள்வாங்கும்
யாசக யாணையைப் போன்று
ஆவணங்கள் தொலைந்துப் போகும்
வழிப்பறியின் நெடும்பாதையிலும்
மழலைகளை வன்புனர்ந்து
முலைகளை அறுத்தெரிந்த போர்க்களத்திலும்
தொண்டைச் செருமி இருமாத உன் வாய்களுக்கு
வெண்ணெய் பூசி களிப்பூட்ட – என்
வார்த்தைகளை வரச் சொன்னாயா ? 

எரியூட்டப்பட்ட குடிசைகளின் உள்ளிருந்து
மரணமேறிய காயங்களோடு கதறிய போதும்
சீருடைகளோடு பள்ளிக்கனுப்பி கரிக்கட்டைகளாய் வெந்துப் போன
மலர்களை நெஞ்சில் தாங்கி வெடித்து விம்மிய போதும்
அசைவற்ற எருமையின் தோலொத்த உன் செவிகளுக்கு
ஆனந்த யாழெடுத்து மீட்ட – என்
வார்த்தைகளை வரச் சொன்னாயா ?

கொத்துக் குண்டுகளால் நிலைக் குலைந்து
பிய்த்துதெறித்து சிதறிய செஞ்சோலை கறித்துண்டுகள் பட்டும்
எல்லைகளில் புகுந்தும் நாணயங்களை வீழ்த்தியும்
காறித் துப்பிய எச்சில் முகத்தில் வழிந்தபோதிலும்
குந்திச் சாத்திய சவத்தையொத்த உன் உடலுக்கு
வாகை மலர்களை சூட – என்
வார்த்தைகளை வரச் சொன்னாயா ?

பிணமானாய் என்று சேதியனுப்பு
அஞ்சலிக் கவிதை அனுப்பி வைக்கிறேன்.
நன்றி.



Friday 11 October 2013

சைக்கிளில் போனாலே இவ்வளவு தூரம் போலாமா ?....



சைக்கிளில் போனாலே இவ்வளவு தூரம் போலாமா ?....

என் ’ அப்பாவின் சைக்கிள்’ கவிதையை வண்ணமேற்றி உலவவிட்ட தோழர். கஸ்தூரி ரங்கனுக்கும், அதற்கு வகை செய்த தோழர். நந்தன் ஸ்ரீதரனுக்கும், இந்த கவிதையை ‘காக்கைச் சிறகினிலே ‘ இதழில் வெளியிட்ட தோழர். இரா.எட்வினுக்கும், கேட்டுப் பாராட்டிய இயக்குநர்.தாமிரா ஆகிய அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள். 



முழு கவிதையும் கீழ்கண்ட வீடியோ இனைப்பில் காணலாம் :
https://www.facebook.com/photo.php?v=591551067558438&set=vb.271449309568617&type=2&theater

எழுத்தில் :




Wednesday 9 October 2013

என் ஒரு துளி ஸ்டேட்டஸுக்கு



என் ஒரு துளி ஸ்டேட்டஸுக்கு
ஒரு பவுன் லைக்குகள்
போட்டது நீயல்லவா

என் உடல் பொருள் ஆவியை
முகநூலுக்கும் உங்களுக்கும்
கொடுப்பது முறையல்லவா

கமெண்ட்டுகள் போட்டு களத்திலே இறங்கு
ஸ்டேட்டஸ் போட்டு லைப்ஸ்டைல மாத்து

Tuesday 8 October 2013

வானம் கிழியாதவரை

வானம் கிழியாதவரை நம்புவோம்

வானம் கிழியாதென்று

பூமி பிளக்காதவரை நம்புவோம்

பூமி பிளக்காதென்று

மரணிக்கும் வரை நம்புவோம்

வாழ்கிறோமென்று.

என் வாழ்க்கை

உன் போதனைகளையும்
உள்ளடக்கியதொரு
இயல்பாய் போனது
என் வாழ்க்கை

நம் காதல்

உன் மகனுக்கு எனது பெயரையும்
என் மகளுக்கு உனது பெயரையும்
சூடிக் கொண்டு விளையாடுகிறது
நம் காதல்

குழந்தையாக முயற்சிக்கும்

குழந்தையாக முயற்சிக்கும்
மனைவியின் விளையாட்டில் புகுந்து
தாயாகி விடுகின்றன
குழந்தைகள்

வளைந்து வளைந்து போகிற

வளைந்து வளைந்து போகிற
கோவில் பிரகாரங்களில்
நீ வந்து வந்து போவது
தெய்வ தரிசனம்தான்

செம்பருத்தி பூ பறிக்க வந்த நீயும்

செம்பருத்தி பூ பறிக்க வந்த நீயும்
தவளைப் பிடிக்க வந்த நானும்
ஒரே தோட்டத்தில் சந்தித்துக் கொண்டது
அறிவியல் அதிசயம் தான்

தொலைபேசியில்லாத

தொலைபேசியில்லாத
எனக்கு அழைப்பு வந்ததாய்
ஓடிவந்து சொல்லிய
ஒரு நாளில்தான் நிகழ்ந்தது
நீ தடுமாறி விழுந்ததும்
நான் தடுமாறி கிடந்ததும்

இறுக்கிப் பற்றிய கரங்களைப் பிரித்து

இறுக்கிப் பற்றிய கரங்களைப் பிரித்து
சுண்டு விரல் பிடித்து
என்னோடே நடந்து வரும்
என் மகள் உணர்த்துவது
விடுதலையின்
எளிய நடை

குளித்து முடித்து

குளித்து முடித்து
வெள்ளை ஆடைகளுடன்
ஓட்டுப் போடச் செல்லும்
குடிமகனைப் பார்த்து
ட்ட்ட்ட்ட்ர்ர்ர்ர்ர்ர்ரென
சிரித்தபடி ஷட்டர் திறக்கும்
டாஸ்மார்க் கடைகள்

பைத்தியம்

பைத்தியம் பிடித்தவன் போல்
கவிதை எழுதுகிறேனே
கவிதை
பைத்தியத்தின் மொழியா ?

Wednesday 2 October 2013

காந்தி ஜெயந்தியும் கள்ளுண்ணாமையும்

காந்தி ஜெயந்தியும் கள்ளுண்ணாமையும்

காந்தி பிறந்த நினைவாக அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து கொண்டாடுகிறது. அவர் வலியுறுத்திய மது விலக்குப் பற்றிய எந்த முடிவும் எடுக்க அரசு துணியாது. தெருவெங்கும் டாஸ்மாக்குகளின் வழியே நடந்துக் கொண்டு எனக்கும் கூட அதை வலியுறுத்துவது ஒரு மிகையான தத்துவச் சொல்லாடலாக தெரிகிறது.

ஆயினும் வள்ளுவர் சொல்லிய கள்ளுண்ணாமை அதிகாரத்தின் குறள்களை இங்கு எடுத்துப் பதிய முனைகிறேன். கள்ளுண்ணாமை அதிகாரம் – 93, பொருட்பால்.

921.   உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்
      கள்காதல் கொண்டுஒழுகு வார்.

பொருள் : மதுவின் மீது ஆசைக் கொண்ட ஒருவரைக் கண்டு எதிரிகள் கூட பயப்பட மாட்டார். அவரது முன்னோர்கள் சேர்த்த புகழையும் இழப்பார்.

922.   உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான்
      எண்ணப் படவேண்டா தார்.

பொருள் : சாண்றோர்களால் தான் மதிக்கப் படவேண்டாம் என்று நினைப்பவர்கள் மட்டுமே மது அருந்துவர்.மற்றவர்கள் தவிர்ப்பர்.

923.   ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
      சான்றோர் முகத்துக் களி.

பொருள் : எதுசெய்தும் பொறுக்கும் பெற்றவள் முன்னால் கூட மது அருந்தக் கூடாது எனும்போது சான்றோர் முன் செய்வது தவறு.

924.   நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்என்னும்
      பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

பொருள் : மது அருந்துபவர்களை புகழ் எனும் நல்லாள் பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொள்வாள்.

925.   கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

பொருள் : தன் பொருளைக் கொடுத்து உடலை மறக்க செய்ய மது அருந்துதல், தன் செயல்களால் தனக்கே பழி ஏற்படுத்துதலாகும்.

926.   துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்
      நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

பொருள் : தூங்குபவர்கள் எப்படி இறந்தவர்க்ளுக்கு ஒப்பாவாரோ அதுபோல மது அருந்துபவர்கள் விஷம் குடிப்பவர்களுக்கு ஒப்பாவார்.

927.   உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
      கள்ஒற்றிக் கண்சாய் பவர்.

பொருள் : மறைந்துச் சென்று மது அருந்தி மயங்குபவர்களின் நிலையை உள்ளூரில் காண்பவர்கள் அவர்கள் மறைந்துச் செல்வதைக் கண்டு எள்ளி நகையாடுவர்.

928.   களித்துஅறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

பொருள் : மதுஅருந்தியதே இல்லை என்று பொய்சொல்வீர்கள் எனில் அந்தப் பொய் நெஞ்சில் இருந்து உங்களை அறியாமலே வெளிப்படும்.

929.   களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்க்
      குளித்தானைக் தீத்துரீஇ யற்று.

பொருள் : போதையில் இருக்கும் ஒருவனிடம் புத்திமதி சொல்வது என்பது தண்ணீரில் தொலந்தவனை விளக்கு கொண்டு தேடுவது போன்றது.

930.   கள்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

பொருள் : குடிகாரன் ஒருவன் மது அருந்தாத போது குடித்திருப்பவனைக் கண்டால் ‘நாமும் இப்பிடித்தான் இருப்போமா ?’ என்று நினைத்து கலக்கமுறுவான்.

**

Tuesday 1 October 2013

என் வார்த்தைகளின் பின்னால்

என் வார்த்தைகளின் பின்னால்

வேறுயாருமில்லை

நான் தான்

ஆப்பிள் நறுக்குவதற்காக

ஆப்பிள் நறுக்குவதற்காக
வாங்கிய கத்தியில்
காய்கறிகள் நறுக்கத் தொடங்கி
காகிதங்களை வெட்டி
நகங்கள் வெட்டி
ஒரு அவசர வேளையில்
இறைச்சியையும் வெட்டுபவர்களுக்கு
மத்தியில்தான் வாழ்கிறார்கள்
ஆப்பிளை மட்டுமே நறுக்குபவர்களும்


*

அந்த நகரப் பேருந்தின்

அந்த நகரப் பேருந்தின்
பகல்பொழுதில்
எனக்கும் சேர்த்து
நீ எடுத்த
பயணச்சீட்டில்தான்
விசிலடித்துக் கொண்டிருந்தது
நம் காதல்

*

மொய் நோட்டோடு

மொய் நோட்டோடு
உட்கார்ந்திருக்கும் நானும்
பன்னீர்க் குவளையோடு
நின்றிருக்கும் நீயும்

ஒரே மணமேடையில்
உட்காரப்போவது
இந்தக் கல்யாணத்திற்கு வந்த
யாருக்கும் தெரியாது...


*

ஆசிரியர் தின செய்தி - 1

ஆசிரியர் தின செய்தி - 1 :

தம்மம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக தொகுப்பு ஊதிய அடிப்படையில் கணினி ஆசிரியராக அன்றைக்குத்தான் பணியில் சேர்கிறேன். அது 2001 வருடம். பணியில் சேர்ந்த முதல் நாள்.

ஆசிரியர்கள் அறையில் இருந்த எனக்கு தலைமை ஆசிரியரிடமிருந்து அழைப்பு.

“ ஆறாம் க்ளாஸ் டீச்சர் வரலை நீங்க போறீங்களா..? “

‘ சரிங்க சார்..’

முதல் பாட வேளை. வகுப்புக்குள் நுழைகிறேன்.

“ வணக்கம் அய்யா..”

‘ வணக்கம் எல்லோரும் உட்காருங்க..’

எல்லோரும் என்னை உற்றுப் பார்க்கிறார்கள். 45 மாணவர்கள் இருக்கும்.

”முதல்நாள் எல்லார் பேரையும் கேட்டாலும் நினைவில் நிக்காது..
அதனால நான் கேள்வி கேக்கிறேன் பதில் சொல்லுங்க...”

‘ சரிங்க சார்...’

“ தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் யார்...? “

‘ ............’

“ சரி இன்னோரு கேள்வி கேக்குறேன்..
கம்ப்யூட்டரை கண்டுபிடிச்சது யாரு ? ”

‘...........’

“ சரி பரவாயில்லை.. உங்களுக்கு தெரியாத கேள்வி நான் கேட்ட மாதிரி எனக்குத் பதில் தெரியாத கேள்வி நீங்க யாராவது கேளுங்க பார்ப்போம்...”

‘...........’ சிறிது அமைதிக்குப் பின், ஒரு மாணவன் எழுந்தான்.

“ தம்மம்பட்டியில் ஓடுற ஆறு பேரு என்னா சார்..? “

‘......ஙே......’

அன்றைக்கு தோற்க தொடங்கினேன். மாணவர்களிடம்.

* இன்றைக்கும் தான்

பாஸ்கல் விதி, ஓம்ஸ் லா

பாஸ்கல் விதி, ஓம்ஸ் லா மாதிரி நானும் ஏதாவது கண்டுபிடிச்சு எழுதலாம்னு
இப்ப நினைச்சு, இப்ப எழுதுகிறேன் :

செல்வா தேற்றம் ( பிதாகரஸ் தேற்றத்தின் தழுவல் ) :

ஒரு செட்டான ஃபிகரின் கர்வ அளவின் வர்க்கமானது, மற்ற செட்டாகாத பிகர்களின் கர்வ அளவின் வர்க்கங்களின் கூடுதலுக்குச் சமம்.


*

செல்வா விதி 1 ( நியூட்டன் முதல் விதியின் தழுவல் ) :

காதலிக்காத நிலையில் இருக்கும் ஒருவரை, யாரும் காதலிக்காத வரை அவர் காதல் வசப்படாத நிலையில்தான் இருப்பார். இதுபோன்று நிலையிலுள்ள ஒருவர் தொடர்ந்து காதல் நினைவாகவே இருப்பார்.

*

செல்வா விதி 2 (நியூட்டன் இரண்டாம் விதியின் தழுவல்) :

காதலிக்கப்படும் ஒருவரின் அன்பு மாறுபாட்டு வீதம் அவரின் மீது செலுத்தப்படும் அன்புக்கு நேர் விகிதத்தில் இருப்பதுடன் அந்த அன்பின் திசையிலேயே இருக்கும்.

*

செல்வா விதி 3 ( நியூட்டனின் விதியை தழுவியது ) :

ஒவ்வொரு ஃபிகருக்கும் அதற்குச் சமமான கொடுங்குணம் ஒன்று உண்டு

*

செல்வா விதி ( பாஸ்கல் விதியின் தழுவல் ) :

வீட்டுக்குள் அடக்கப்பட்ட பெண்ணின் மீது செலுத்தப்படும் பெற்றவர்களின் அழுத்தம் அப்பெண்ணின் நண்பர்கள் அனைவருக்கும் சமமாகக் தெரிவிக்கப்படும்
 
*

செல்வா லா ( ஒம்ஸ் லா தழுவல் ) :

காதலர்கள் சந்திக்காத நாட்களில் காதல் உணர்வு என்பது சந்தித்த நாட்களுக்கு நேர்விகிதத்திலும், சந்திக்காத நாட்களுக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும்.

V=IR (அல்லது) I=V/R (அல்லது) R=V/I

*

செல்வா மிதத்தல்விதி ( ஆர்க்கிமிடிஸை தழுவியது ) :

பெறப்பட்ட முத்தத்தின் எண்ணிக்கை , அந்த நபரால் கொடுக்கப்பட்ட முத்தத்தின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கும்.

***