Monday 14 October 2013

என் வார்த்தைகளை வரச் சொன்னாயா ?

கடந்த 13.10.2013 அன்று நடைபெற்ற பெரம்பலூர் பதியம் இலக்கியச் சங்கமத்தில் நடைபெற்ற கவிதை வாசிப்பில் நான் வாசித்த கவிதை.

எது சிலாகிக்க
என்னை கவிதை எழுதி வரச் சொல்லி
அழைப்பு விடுத்தாய் ?

ஆமாம்சாமி போட்டு குப்புறக் கவிழ்ந்து
எதன் போதும் நிமிர்ந்து சிலிர்த்துடாது
குனிந்தே கிடக்கும் உன் தலையை
துடைத்து தூக்கி கிரீடம் சூட்ட – என்
வார்த்தைகளை வரச் சொன்னாயா ?

பதுங்கி மெல்ல நகரும் பூனையைப் போல்
அதர்மங்களின் பாதையில் அரவமின்றி
இமைமூடி நடக்கிற உன் கண்களுக்கு
பீலி கோர்த்து சாமரம் வீச
அவிழ்த்துப் போட்ட அம்மணமாய் – என் கவிதைகளை
ஆடைகளின்றி வரச் சொன்னாயா ?

ரேகைகள் அழிய ரூபாய் நோட்டுக்களை
எண்ணிக் களைத்து குவிந்து சூம்பிப் போய்
லஞ்ச சீழ்ப்பிடித்த உன் கைகளின் விரல்களில்
வெளிறிப் போன குஷ்டங்களை மறைக்க
கணையாழிப் போல் சூடிக் கொள்ள – என்
வார்த்தைகளை வரச் சொன்னாயா ?

நேர்மையின் பாதையில் சிறுநடையும் பயிலாது
அருவருப்பின் மலங்களின் மீதமர்ந்த
தொடைகளை தாங்கி நிற்கும்
கழிப்பறையின் நிலையொத்த உன் கால்களுக்கு
பரதனின் பாவணையோடு பாதுகை சூட – என்
வார்த்தைகளை வரச் சொன்னாயா ?

கோவில் திருவிழாவில் கவளங்களை உள்வாங்கும்
யாசக யாணையைப் போன்று
ஆவணங்கள் தொலைந்துப் போகும்
வழிப்பறியின் நெடும்பாதையிலும்
மழலைகளை வன்புனர்ந்து
முலைகளை அறுத்தெரிந்த போர்க்களத்திலும்
தொண்டைச் செருமி இருமாத உன் வாய்களுக்கு
வெண்ணெய் பூசி களிப்பூட்ட – என்
வார்த்தைகளை வரச் சொன்னாயா ? 

எரியூட்டப்பட்ட குடிசைகளின் உள்ளிருந்து
மரணமேறிய காயங்களோடு கதறிய போதும்
சீருடைகளோடு பள்ளிக்கனுப்பி கரிக்கட்டைகளாய் வெந்துப் போன
மலர்களை நெஞ்சில் தாங்கி வெடித்து விம்மிய போதும்
அசைவற்ற எருமையின் தோலொத்த உன் செவிகளுக்கு
ஆனந்த யாழெடுத்து மீட்ட – என்
வார்த்தைகளை வரச் சொன்னாயா ?

கொத்துக் குண்டுகளால் நிலைக் குலைந்து
பிய்த்துதெறித்து சிதறிய செஞ்சோலை கறித்துண்டுகள் பட்டும்
எல்லைகளில் புகுந்தும் நாணயங்களை வீழ்த்தியும்
காறித் துப்பிய எச்சில் முகத்தில் வழிந்தபோதிலும்
குந்திச் சாத்திய சவத்தையொத்த உன் உடலுக்கு
வாகை மலர்களை சூட – என்
வார்த்தைகளை வரச் சொன்னாயா ?

பிணமானாய் என்று சேதியனுப்பு
அஞ்சலிக் கவிதை அனுப்பி வைக்கிறேன்.
நன்றி.



Friday 11 October 2013

சைக்கிளில் போனாலே இவ்வளவு தூரம் போலாமா ?....



சைக்கிளில் போனாலே இவ்வளவு தூரம் போலாமா ?....

என் ’ அப்பாவின் சைக்கிள்’ கவிதையை வண்ணமேற்றி உலவவிட்ட தோழர். கஸ்தூரி ரங்கனுக்கும், அதற்கு வகை செய்த தோழர். நந்தன் ஸ்ரீதரனுக்கும், இந்த கவிதையை ‘காக்கைச் சிறகினிலே ‘ இதழில் வெளியிட்ட தோழர். இரா.எட்வினுக்கும், கேட்டுப் பாராட்டிய இயக்குநர்.தாமிரா ஆகிய அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள். 



முழு கவிதையும் கீழ்கண்ட வீடியோ இனைப்பில் காணலாம் :
https://www.facebook.com/photo.php?v=591551067558438&set=vb.271449309568617&type=2&theater

எழுத்தில் :




Wednesday 9 October 2013

என் ஒரு துளி ஸ்டேட்டஸுக்கு



என் ஒரு துளி ஸ்டேட்டஸுக்கு
ஒரு பவுன் லைக்குகள்
போட்டது நீயல்லவா

என் உடல் பொருள் ஆவியை
முகநூலுக்கும் உங்களுக்கும்
கொடுப்பது முறையல்லவா

கமெண்ட்டுகள் போட்டு களத்திலே இறங்கு
ஸ்டேட்டஸ் போட்டு லைப்ஸ்டைல மாத்து

Tuesday 8 October 2013

வானம் கிழியாதவரை

வானம் கிழியாதவரை நம்புவோம்

வானம் கிழியாதென்று

பூமி பிளக்காதவரை நம்புவோம்

பூமி பிளக்காதென்று

மரணிக்கும் வரை நம்புவோம்

வாழ்கிறோமென்று.

என் வாழ்க்கை

உன் போதனைகளையும்
உள்ளடக்கியதொரு
இயல்பாய் போனது
என் வாழ்க்கை

நம் காதல்

உன் மகனுக்கு எனது பெயரையும்
என் மகளுக்கு உனது பெயரையும்
சூடிக் கொண்டு விளையாடுகிறது
நம் காதல்

குழந்தையாக முயற்சிக்கும்

குழந்தையாக முயற்சிக்கும்
மனைவியின் விளையாட்டில் புகுந்து
தாயாகி விடுகின்றன
குழந்தைகள்

வளைந்து வளைந்து போகிற

வளைந்து வளைந்து போகிற
கோவில் பிரகாரங்களில்
நீ வந்து வந்து போவது
தெய்வ தரிசனம்தான்

செம்பருத்தி பூ பறிக்க வந்த நீயும்

செம்பருத்தி பூ பறிக்க வந்த நீயும்
தவளைப் பிடிக்க வந்த நானும்
ஒரே தோட்டத்தில் சந்தித்துக் கொண்டது
அறிவியல் அதிசயம் தான்

தொலைபேசியில்லாத

தொலைபேசியில்லாத
எனக்கு அழைப்பு வந்ததாய்
ஓடிவந்து சொல்லிய
ஒரு நாளில்தான் நிகழ்ந்தது
நீ தடுமாறி விழுந்ததும்
நான் தடுமாறி கிடந்ததும்

இறுக்கிப் பற்றிய கரங்களைப் பிரித்து

இறுக்கிப் பற்றிய கரங்களைப் பிரித்து
சுண்டு விரல் பிடித்து
என்னோடே நடந்து வரும்
என் மகள் உணர்த்துவது
விடுதலையின்
எளிய நடை

குளித்து முடித்து

குளித்து முடித்து
வெள்ளை ஆடைகளுடன்
ஓட்டுப் போடச் செல்லும்
குடிமகனைப் பார்த்து
ட்ட்ட்ட்ட்ர்ர்ர்ர்ர்ர்ரென
சிரித்தபடி ஷட்டர் திறக்கும்
டாஸ்மார்க் கடைகள்

பைத்தியம்

பைத்தியம் பிடித்தவன் போல்
கவிதை எழுதுகிறேனே
கவிதை
பைத்தியத்தின் மொழியா ?

Wednesday 2 October 2013

காந்தி ஜெயந்தியும் கள்ளுண்ணாமையும்

காந்தி ஜெயந்தியும் கள்ளுண்ணாமையும்

காந்தி பிறந்த நினைவாக அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து கொண்டாடுகிறது. அவர் வலியுறுத்திய மது விலக்குப் பற்றிய எந்த முடிவும் எடுக்க அரசு துணியாது. தெருவெங்கும் டாஸ்மாக்குகளின் வழியே நடந்துக் கொண்டு எனக்கும் கூட அதை வலியுறுத்துவது ஒரு மிகையான தத்துவச் சொல்லாடலாக தெரிகிறது.

ஆயினும் வள்ளுவர் சொல்லிய கள்ளுண்ணாமை அதிகாரத்தின் குறள்களை இங்கு எடுத்துப் பதிய முனைகிறேன். கள்ளுண்ணாமை அதிகாரம் – 93, பொருட்பால்.

921.   உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்
      கள்காதல் கொண்டுஒழுகு வார்.

பொருள் : மதுவின் மீது ஆசைக் கொண்ட ஒருவரைக் கண்டு எதிரிகள் கூட பயப்பட மாட்டார். அவரது முன்னோர்கள் சேர்த்த புகழையும் இழப்பார்.

922.   உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான்
      எண்ணப் படவேண்டா தார்.

பொருள் : சாண்றோர்களால் தான் மதிக்கப் படவேண்டாம் என்று நினைப்பவர்கள் மட்டுமே மது அருந்துவர்.மற்றவர்கள் தவிர்ப்பர்.

923.   ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
      சான்றோர் முகத்துக் களி.

பொருள் : எதுசெய்தும் பொறுக்கும் பெற்றவள் முன்னால் கூட மது அருந்தக் கூடாது எனும்போது சான்றோர் முன் செய்வது தவறு.

924.   நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்என்னும்
      பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

பொருள் : மது அருந்துபவர்களை புகழ் எனும் நல்லாள் பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொள்வாள்.

925.   கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

பொருள் : தன் பொருளைக் கொடுத்து உடலை மறக்க செய்ய மது அருந்துதல், தன் செயல்களால் தனக்கே பழி ஏற்படுத்துதலாகும்.

926.   துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்
      நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

பொருள் : தூங்குபவர்கள் எப்படி இறந்தவர்க்ளுக்கு ஒப்பாவாரோ அதுபோல மது அருந்துபவர்கள் விஷம் குடிப்பவர்களுக்கு ஒப்பாவார்.

927.   உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
      கள்ஒற்றிக் கண்சாய் பவர்.

பொருள் : மறைந்துச் சென்று மது அருந்தி மயங்குபவர்களின் நிலையை உள்ளூரில் காண்பவர்கள் அவர்கள் மறைந்துச் செல்வதைக் கண்டு எள்ளி நகையாடுவர்.

928.   களித்துஅறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

பொருள் : மதுஅருந்தியதே இல்லை என்று பொய்சொல்வீர்கள் எனில் அந்தப் பொய் நெஞ்சில் இருந்து உங்களை அறியாமலே வெளிப்படும்.

929.   களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்க்
      குளித்தானைக் தீத்துரீஇ யற்று.

பொருள் : போதையில் இருக்கும் ஒருவனிடம் புத்திமதி சொல்வது என்பது தண்ணீரில் தொலந்தவனை விளக்கு கொண்டு தேடுவது போன்றது.

930.   கள்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

பொருள் : குடிகாரன் ஒருவன் மது அருந்தாத போது குடித்திருப்பவனைக் கண்டால் ‘நாமும் இப்பிடித்தான் இருப்போமா ?’ என்று நினைத்து கலக்கமுறுவான்.

**

Tuesday 1 October 2013

என் வார்த்தைகளின் பின்னால்

என் வார்த்தைகளின் பின்னால்

வேறுயாருமில்லை

நான் தான்

ஆப்பிள் நறுக்குவதற்காக

ஆப்பிள் நறுக்குவதற்காக
வாங்கிய கத்தியில்
காய்கறிகள் நறுக்கத் தொடங்கி
காகிதங்களை வெட்டி
நகங்கள் வெட்டி
ஒரு அவசர வேளையில்
இறைச்சியையும் வெட்டுபவர்களுக்கு
மத்தியில்தான் வாழ்கிறார்கள்
ஆப்பிளை மட்டுமே நறுக்குபவர்களும்


*

அந்த நகரப் பேருந்தின்

அந்த நகரப் பேருந்தின்
பகல்பொழுதில்
எனக்கும் சேர்த்து
நீ எடுத்த
பயணச்சீட்டில்தான்
விசிலடித்துக் கொண்டிருந்தது
நம் காதல்

*

மொய் நோட்டோடு

மொய் நோட்டோடு
உட்கார்ந்திருக்கும் நானும்
பன்னீர்க் குவளையோடு
நின்றிருக்கும் நீயும்

ஒரே மணமேடையில்
உட்காரப்போவது
இந்தக் கல்யாணத்திற்கு வந்த
யாருக்கும் தெரியாது...


*

ஆசிரியர் தின செய்தி - 1

ஆசிரியர் தின செய்தி - 1 :

தம்மம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக தொகுப்பு ஊதிய அடிப்படையில் கணினி ஆசிரியராக அன்றைக்குத்தான் பணியில் சேர்கிறேன். அது 2001 வருடம். பணியில் சேர்ந்த முதல் நாள்.

ஆசிரியர்கள் அறையில் இருந்த எனக்கு தலைமை ஆசிரியரிடமிருந்து அழைப்பு.

“ ஆறாம் க்ளாஸ் டீச்சர் வரலை நீங்க போறீங்களா..? “

‘ சரிங்க சார்..’

முதல் பாட வேளை. வகுப்புக்குள் நுழைகிறேன்.

“ வணக்கம் அய்யா..”

‘ வணக்கம் எல்லோரும் உட்காருங்க..’

எல்லோரும் என்னை உற்றுப் பார்க்கிறார்கள். 45 மாணவர்கள் இருக்கும்.

”முதல்நாள் எல்லார் பேரையும் கேட்டாலும் நினைவில் நிக்காது..
அதனால நான் கேள்வி கேக்கிறேன் பதில் சொல்லுங்க...”

‘ சரிங்க சார்...’

“ தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் யார்...? “

‘ ............’

“ சரி இன்னோரு கேள்வி கேக்குறேன்..
கம்ப்யூட்டரை கண்டுபிடிச்சது யாரு ? ”

‘...........’

“ சரி பரவாயில்லை.. உங்களுக்கு தெரியாத கேள்வி நான் கேட்ட மாதிரி எனக்குத் பதில் தெரியாத கேள்வி நீங்க யாராவது கேளுங்க பார்ப்போம்...”

‘...........’ சிறிது அமைதிக்குப் பின், ஒரு மாணவன் எழுந்தான்.

“ தம்மம்பட்டியில் ஓடுற ஆறு பேரு என்னா சார்..? “

‘......ஙே......’

அன்றைக்கு தோற்க தொடங்கினேன். மாணவர்களிடம்.

* இன்றைக்கும் தான்

பாஸ்கல் விதி, ஓம்ஸ் லா

பாஸ்கல் விதி, ஓம்ஸ் லா மாதிரி நானும் ஏதாவது கண்டுபிடிச்சு எழுதலாம்னு
இப்ப நினைச்சு, இப்ப எழுதுகிறேன் :

செல்வா தேற்றம் ( பிதாகரஸ் தேற்றத்தின் தழுவல் ) :

ஒரு செட்டான ஃபிகரின் கர்வ அளவின் வர்க்கமானது, மற்ற செட்டாகாத பிகர்களின் கர்வ அளவின் வர்க்கங்களின் கூடுதலுக்குச் சமம்.


*

செல்வா விதி 1 ( நியூட்டன் முதல் விதியின் தழுவல் ) :

காதலிக்காத நிலையில் இருக்கும் ஒருவரை, யாரும் காதலிக்காத வரை அவர் காதல் வசப்படாத நிலையில்தான் இருப்பார். இதுபோன்று நிலையிலுள்ள ஒருவர் தொடர்ந்து காதல் நினைவாகவே இருப்பார்.

*

செல்வா விதி 2 (நியூட்டன் இரண்டாம் விதியின் தழுவல்) :

காதலிக்கப்படும் ஒருவரின் அன்பு மாறுபாட்டு வீதம் அவரின் மீது செலுத்தப்படும் அன்புக்கு நேர் விகிதத்தில் இருப்பதுடன் அந்த அன்பின் திசையிலேயே இருக்கும்.

*

செல்வா விதி 3 ( நியூட்டனின் விதியை தழுவியது ) :

ஒவ்வொரு ஃபிகருக்கும் அதற்குச் சமமான கொடுங்குணம் ஒன்று உண்டு

*

செல்வா விதி ( பாஸ்கல் விதியின் தழுவல் ) :

வீட்டுக்குள் அடக்கப்பட்ட பெண்ணின் மீது செலுத்தப்படும் பெற்றவர்களின் அழுத்தம் அப்பெண்ணின் நண்பர்கள் அனைவருக்கும் சமமாகக் தெரிவிக்கப்படும்
 
*

செல்வா லா ( ஒம்ஸ் லா தழுவல் ) :

காதலர்கள் சந்திக்காத நாட்களில் காதல் உணர்வு என்பது சந்தித்த நாட்களுக்கு நேர்விகிதத்திலும், சந்திக்காத நாட்களுக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும்.

V=IR (அல்லது) I=V/R (அல்லது) R=V/I

*

செல்வா மிதத்தல்விதி ( ஆர்க்கிமிடிஸை தழுவியது ) :

பெறப்பட்ட முத்தத்தின் எண்ணிக்கை , அந்த நபரால் கொடுக்கப்பட்ட முத்தத்தின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கும்.

***

Thursday 29 August 2013

நூலகப் பணியாளர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி

கொல்கத்தாவில் உள்ள மத்திய அரசின் ‘ ராஜாராம் நூலக ஆணைக் குழுவும் ‘ ’ தமிழ்நாடு பொது நூலகத்துறை’ யும் இனைந்து ஒருங்கினைந்த திருச்சிராப்பள்ளி மாவட்ட நூலகப் பணியாளர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாமை பெரம்பலூரில் 23.08.2013 முதல் 24.08.2013 வரை நடத்தியது. 


அந்த முகாமில் கலந்துக் கொண்ட 50 நூலகப் பணியாளர்களுக்கு “ கணினியும் நூலகப் பயண்பாடும் ‘ என்ற தலைப்பில் பயிற்சி எடுத்தப் போது….



Monday 26 August 2013

நான் செஞ்ச குறும்பு – 4 :

நான் செஞ்ச குறும்பு – 4 :

அப்ப எனக்கு எட்டு இல்லைன்னா ஒன்பது வயது இருக்கும். நாலாவது முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை. அப்ப நாங்க கீரம்பூர்ல குடியிருக்கோம். நீச்சல் கற்றுக் கொள்வதற்காக எங்கம்மா கூட கிணற்றுக்கு போனேன். அப்பெல்லாம் கிணத்துல ஒரே கும்பலா இருக்கும். விடுமுறை நாளென்றால் கேட்கவே வேணாம். ஊருல இருக்கிற பசங்க பூராம் அங்கத்தான் இருப்பாங்க.

எங்கம்மா, பக்கத்து வீட்டு ராஜேஸ்வரி அம்மா, தனபாக்கியம், ஜானகி அம்மா எல்லோரும் அவங்கங்க வீட்டு துணியெடுத்து வந்து துவைச்சு, காயப் போட்டு மெதுவா குளிச்சுட்டு மத்தியாணமாத்தான் வீட்டுக்குப் போவோம். கிணத்துமேல மோட்டார் ஓடினால் அங்க துணி துவைச்சாலும், கிணத்திலதான் குளிப்பாங்க. நீச்சல் ஒரு சுகம். நீச்சல் ஒரு தன்னம்பிக்கை.

எனக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக எங்கம்மா சேலையை என் இடுப்புல கட்டி நல்லா மூனு முடிச்சுப் போட்டு ( இது என் அம்மா எனக்கு போட்ட முடிச்சு , அவிழ்க்க முடியாது ) சுற்றுச் சுவரில் இருந்து ‘ குதிடா..குதிடா..’ன்னு சொன்னிச்சு. நான் திரும்பி பின்னாடி பார்க்கிறேன் சேலை அனுமார் வால் மாதிரி நீளமா இருக்கு. ஒரு முனை என் இடுப்பில். மறுமுனை எங்கம்மா கையில்.

நான் பயத்துல அப்பிடியே பின்னாடி பின்னாடி போறேன். ராஜேஸ்வரி அம்மா வேற “ இங்க பாருடா.. நான் குதிக்கிறேன்..னு..” , தொபுக்கடீர்னு குதிக்க, அவங்க குதிச்ச தண்ணி என்மேல பட்டதும் , இன்னும் பயம் சில்லுன்னு ஏறிடுச்சு.

நான் அப்பிடியே நிக்கிறேன். எங்கம்மா பக்கத்தில நின்ன ஜானகி அம்மாவைப் பார்த்து கண்ணடிக்க, என் பின்னாடி நின்னுக்கிட்டு இருந்த அவங்க அப்பிடியே காலால உட்டாங்க பாரு… ஓங்கி ஒரே உதை. நான் ‘ ஓ ‘ன்னு கத்திக்கிட்டு அழுதிக்கிட்டே கிணத்தில விழுந்துட்டேன். எங்கம்மா என் இடுப்புல கட்டியிருந்த சேலையை இழுத்து பிடிச்சுக்கிட்டு, ‘ அடி, அடி, கையை நல்லா தூக்கி அடி…காலை பின்னாடி விசிறியடி…’ன்னு கத்துறாங்க. நானா மூச்சடக்க முடியாம தண்ணி குடிச்சிட்டேன்…..’ங்ஹே…’ ‘ங்ஹே’ ன்னு கத்துறேன்.
எங்கம்மா சுற்றுப் பாருக்கு மேல நிக்குது. நான் தண்ணியில தத்தளிக்கிறேன்.

ஒரு நிமிஷம்தான்… பிடிக்கறதுக்கு ஒன்னும் இல்லாததால நான் அப்பிடியே என் இடுப்பில கட்டியிருந்த சேலையை இழுத்தேன் பாருங்க… எங்கம்மா மேலேயிருந்து தொப்புன்னு தண்ணியில விழுந்துருச்சு. இதாண்டா சமயம்முன்னு நான் அப்பிடியே, எங்கம்மா மேலே ஒரே தாவா தாவி தோள் மேல கைப் போட்டு முதுகுல ஏறி உட்கார்ந்துட்டேன். மேலேயிருந்து பார்த்துட்டு எல்லோரும் சிரிக்கிறாங்க.

எங்கம்மாவுக்கு நீச்சல் தெரியும். இருந்தாலும் என் பாரம் தாங்காம தண்ணிக்குள்ள போவுது. எங்கம்மா ஒரு நாள் பேசிக்கிட்டு இருக்கும்போது கவனிச்சிருக்கேன். “ யாரவாது தண்ணிக்குள்ள முழுகுனா அவங்க முடியை பிடிச்சு இழுக்கனும்”

எங்கம்மா முழுவுறத பார்த்து நான் “ எங்கம்மா முடிய பிடிச்சு இழுத்தேன், அது கையோட வந்துருச்சு..அப்பெல்லாம் அது சவுரிமுடி வைச்சிருக்கும்…, நான் அழுத்துறது தாங்காமலும், அது முடியப் பிடிச்சு இழுத்தனாலும் அந்த நேரத்திலயும், உட்டுச்சு பாரு ஒரு அறை , நான் தேம்பி தேம்பி அழுதிக்கிட்டே. இன்னும் வேகமா முடியைப் பிடிச்சு இழுத்து எங்கம்மா முதுகை அழுத்துறேன்.

இதுக்கு மேலே தாங்காதுன்னு ராஜேஸ்வரி அம்மாவும், ஜானகி அம்மாவும் சுற்றுப் பாருல நின்னுகிட்டு கையை குடுக்க, எங்கம்மாவை முந்திக்கிட்டு நான் அவங்க கையைப் பிடிச்சு , ரெண்டு காலாலயும் எங்கம்மா முதுகுல ஒரு அழுத்து அழுத்தி தாவி அவங்க கையைப் பிடிச்சு சுவற்றில் ஏறி உயிர் தப்பித்தேன். உடனே குடுகுடுன்னு மேல ஏறி வந்துட்டேன்.

கொஞ்ச நேரத்தில மேலேறி வந்த எங்க அம்மா ‘ பளார், பளார்’னு அறை விட்டுச்சு பாருங்க. நான் தேம்பி ,தேம்பி அழுதேன். அழுதுகொண்டே கிணற்றைப் பார்க்கிறேன். கிணறு முழுக்க நான் அழுத கண்ணீர் நிறைந்து கிடக்கிறது.

நான் ஐந்தாம் வகுப்புக்கு போன முதல் நாள் எங்க வாத்தியார் கேட்டார் “ நீச்சல் தெரியாதவங்க எல்லாம் கையைத் தூக்குங்க “. நான் கையைத் தூக்கல.

Sunday 25 August 2013

வேலையில்லா திண்டாட்டத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்



டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வின் இருபது பேர் கொண்ட எனது வகுப்பறையில் :

வருகை புரிந்தோர் - 18 , வராதவர்கள் - 2

ஆண்கள் - 8 , பெண்கள் - 10

நரைத்தவர்கள் - 4 ( ஆண்கள் )

திருமணம் ஆன பெண்கள் - 5 , தி.ஆகாத முதிர்கண்ணிகள் - 2

மல்லிகைப் பூ வைத்திருந்தவர்கள் - 4

தற்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்தவர்களாய் தோன்றியவர்கள் - 3

கல்லூரிப் படிப்பை முடித்து 7 (அ) 8 வருடம் ஆனவர்கள் போல் தோன்றியவர்கள் - 4

எனது மாணவர் - 1

இடது கை பழக்கமுடையவர் - 1

கடிகாரம் அணிந்து வந்தவர்கள் - 5 ஆண்கள், 4 பெண்கள்

கடிகாரம் அணியாதவர்கள் - 3 ஆண்கள், 6 பெண்கள்

செல்போன் எடுத்து வந்து அறையின் மூலையில் வைத்தவர்கள் - 12 , ஹேண்ட் பேக்கில் வைத்திருந்த பெண்கள் - 3

600 பேர் தேர்வெழுதும் எங்கள் செண்டருக்கு பெண் காவலர்கள் - 3

* வேலையில்லா திண்டாட்டத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்

மாரிமுத்துவின் ’ நீர்ச்சிறகு ‘

தேடிப் படிப்போம்...

நேற்று 04.08.2013 பெரம்பலூர் பதியம் இலக்கியச் சங்கமத்தில் கவிஞர். மாரிமுத்து அவர்களின் ‘ நீர்ச் சிறகுகள் ‘ என்ற நூல் குறித்து பேசினேன்.

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் கவிஞர். சுரதா, ” ’ நீர்ச் சிறகுகள் ‘ என்னும் தலைப்பே என்னைக் கவர்ந்தது, அவர் கவிதைகளுக்கு கொடுத்துள்ள தலைப்புகளே கவிதையாக இருக்கிறது” என வாழ்த்தியிருக்கிறார்.

இவர் பச்சையப்பன் கல்லூரி முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது இவருடைய முதல் கவிதை தொகுப்பு என்பதை...முன்னுரையில் ‘ எங்கேப் போகிறோம் என்று தெரியாமலே தாயின் கையை பிடித்துக் கொண்டே நடக்கும் குழந்தை மாதிரி....’ என்று சொல்லியிருக்கும் அழகு பாராட்டப்பட வேண்டியது.

ஒரு சில கவிதைகள் உங்களுக்காக :

* பிரெய்லியை
தடவுவதுமாதிரி
உன்
பிஞ்சுமுகம்
தடவிப் பார்ப்பேன்...

*
பட்டதாரி என்னும் தலைப்பில்,

படிக்க வந்து
வெடித்து சிதறும்
வெடியானோம்...

* உமி என்னும் தலைப்பில்,

அனைத்து
அடுப்புகளும்
அறிக்கை விடப்போகிறதாம்
இனி
உமியாவது
உலைக்கு வேண்டுமென...

இவைகள் பானைகளை அறியத் தரும் பருக்கைகள் மட்டுமே...

வாய்ப்பிருந்தால் வாசியுங்களேன்...

நூலின் பெயர் : நீர்ச் சிறகுகள்
ஆசிரியர் : மாரிமுத்து
வெளியீடு : ரெங்கநாயகி பதிப்பகம், ‘சுந்தரம் பில்டிங்’, 81/47, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை - 24.
முதல் பதிப்பு : பிப்ரவரி 2004



நூலகர் தின விழா

பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் 21.08.2013 அன்று மாலை நூலகர் தின விழா நடைபெற்றது.

இதில் மாவட்ட நூலக அலுவலர் திரு. சி.அசோகன் தலைமேற்க, வாசகர் வட்டத் தலைவர் திரு. சு. அசன்முகம்மது அவர்களும், வாசகர் வட்டத்துனைத் தலைவரான நானும் முன்னிலை பொறுப்பேற்றிருந்தோம்.

அரும்பாவூர் இலக்கியச் சாரல் அமைப்பின் செயலாளர் திரு. இ. தாஹீர் பாட்சா வாழ்த்துரை வழங்கினார். அவர் தனது உரையில் புத்தகங்களால் வெற்றி பெற்றவர்கள் பற்றியும், உலக அறிஞர்களின் பொன்மொழிகள் பற்றியும் சிறப்பாக கூறி அனைவரது பாராட்டையும் பெற்றார்.

சிறப்புரையாற்றிய உளுந்தூர் பேட்டை விநாயகா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வரும், எனது பேராசிரியருமான திரு. இரா.நாராயணசாமி அவர்கள் கருத்தாழமிக்க உரை வழங்கினார். அவர் தனது உரையில் உலகின் மிகச் சிறந்த புத்தகங்கள் பற்றியும், புகழ் பெற்ற நூலகங்கள் பற்றியும், நூலகர்கள் பணியின் அவசியத்தையும், வாசகர்கள் நடந்துக் கொள்ள வேண்டிய பண்புகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

இறுதியாக பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற நூலகர்களுக்கு பரிசு வழங்கி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. ரெ. மகாலிங்கம் பாராட்டுரை வழங்கினார்.

நிகழ்வின் சிறப்பம்சாக ‘ சேகுவேராவின் வாழ்வும் மரணமும் ‘ என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.

மைக்கில பேசறது நாந்தான்.......



எந்த முலாமும்

எந்த முலாமும்
என் சொற்களுக்குப் பொருந்தவில்லை
நிர்வாணங்களைப் போல

பாசாங்குடைய எனது சொற்களை கல்லெறியுங்கள்
நானும் அவ்வாறுதான் செய்கிறேன்

சட்டை உரிக்கிற
பாம்பின் லாவகம் வாய்க்கவில்லை
இருந்தும்
விஷமுறித்துதான் தருகிறேன்
என் வார்த்தைகளை

நானும் கணினியும்

நானும் கணினியும்


" என்ன சார், நீங்க..? கம்ப்யூட்டர் சயின்ஸ்ங்கிறீங்க, இந்த பிரிண்டரை ரிப்பேர் பார்க்க தெரியல..? “

“ நீங்க எந்த துறை ? “

“ ஏன்... தமிழ்த்துறை..? “

“ அது சரி... ‘ கற்க கசடற..’ன்னு ஒரு குறள் இருக்குல்ல, அது எத்தனையாவது குறள் ? “

“...ஙே...”

* என்னோட உலகம் வேற.. உன்னோட உலகம் வேற...

_________________________________________________________________________________

" நீங்க நடத்துன கம்ப்யூட்டர் க்ளாஸ்ல இருந்து எனக்கொரு விஷயம் புரிஞ்சுது சார்...”

“ என்ன விஷயம்..? “

“ நாம ஒருத்தருக்கு ஈ- மெயில் அனுப்பனும்னா , அவங்களுக்கும் ஈ- மெயில் அட்ரஸ் இருக்கனும்...”

* பயங்கரம்

_________________________________________________________________________________


 " யோவ்..என்னைக் கொஞ்சம் பஸ்டாண்டில இறக்கி விட்டுடுய்யா...”

“ வணக்கம் சார்... ஏறுங்க..”

“ நல்லாருக்கியாய்யா, எங்க இருக்க..? “

“ நான் மெட்ராஸ்ல ஒரு சாப்ட்வேர் கம்பெனியில ஃப்ராஜெக்ட் லீடரா இருக்கேன் சார்...”

“ யே...யெப்பா... எங்கிட்ட படிச்சுட்டு மெட்ராஸ்ல வேலையில இருக்கியா...?...அதுவும் ஃப்ராஜெக்ட் லீடரா..? ரொம்ப ஆச்சரியமா இருக்குய்யா...”

“ சார்.. நீங்க எப்பவுமே இப்பிடித்தான் சார்... “

* அந்த கடைசி வரிக்கு என்னா அர்த்தமுன்னே தெரியலியே...!

_________________________________________________________________________________

நேற்று வகுப்பறையில் எனது மடிக் கணினி இருக்கும் பையை பெஞ்ச் மேல வச்சிக்கிட்டு,

“ எல்லோருக்கும் மடிக் கணினி அரசாங்கம் கொடுத்திருக்கு. ஆனால் தினமும் எடுத்து வர யோசிக்கிறீங்க. நானே பாருங்க.. வெயிட்டா இருந்தாலும் எடுத்து வர்றேன்...”
என்று சொல்லிக் கொண்டே பெஞ்ச் மேலேயிருந்த பையில் கைவிட்டு...எடுத்த போது என் கைகளினால் நான் வெளியில் எடுத்ததைப் பார்த்து எல்லோரும் சிரித்து விட்டார்கள். என்னவென்று புரியாமல் கைகளில் பார்க்கிறேன்.... என் கைகளில் மூன்றாவது படிக்கும் எனது மகள் இளையநிலாவின் பெட்டிக்கோட்டும், ஜட்டியும்....

ஒரே வெட்கமாக போய்விட்டது.

ஒரு மாணவி சொன்னாள் ..” சார்.. இந்த மாதிரி மடிக் கணினி எங்களால எடுத்து வர முடியாது...”

காவேரிக்கு குளிக்கப் போனபோது வைத்தது நான்கு நாட்களாக எனது பைக்குள்ளேயே இருந்திருக்கிறது. நல்லவேளை என் மனைவியும் வந்ததைப் பற்றி அங்கு யாருக்கும் தெரியாது, நானும் சொல்லவில்லை.

* செக்கிங் சிரமங்கள்


_________________________________________________________________________________

நான் செஞ்ச குறும்பு - 1 , 2 & 3 :


நான் செஞ்ச குறும்பு - 1 :

என்னை ஒன்னாம் வகுப்பு பள்ளிக்கூடம் சேர்த்தவுடனே, போக மாட்டேன்னு தினமும் அழுவேனாம். அப்பிடி இப்பிடி எங்கம்மா கிளப்பி விட்டாலும் தெருவில இருக்கிற ஒவ்வொரு கம்பமா நிப்பேனாம். பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டு எங்கப்பா ஒரு நாள் அப்பிடியே என்னை அலாக்கா தூக்கிட்டுப் போய்... பள்ளிக்கூடத்தில நுழைஞ்சு நேரா ஒன்னாம் வகுப்பு வாசல் படியில் நிலைக்கால் கட்டையில தொப்புன்னு போட்டு, டீச்சரைப் பார்த்து “ இன்னைமே இவன் எனக்குப் புள்ளையே இல்லை... அடிச்சாலும் சரி, கொன்னாலும் சரி... “ன்னுட்டு வீட்டுக்கு வந்துட்டாராம்.

அதுக்க்ப்புறம் தான் ஒழுங்காப் பள்ளிக்கூடம் போனேனாம்...

” அப்பிடி படிக்க வைச்சண்டா உன்னைய..” என்று எங்கப்பா அடிக்கடி சொல்வார்.

* கொலைகாரனுவு...!
_________________________________________________________________________________

நான் செஞ்ச குறும்பு - 2 :

நான் மூன்றரை வயசு கைக்குழந்தையா இருந்தபோது , எங்கம்மா ஒரு நாள் அம்மியில ரசம் வைக்க பூண்டு, மிளகு சீரகம் அரைச்சிக்கிட்டு இருந்துச்சாம். பக்கத்தில விளையாடிட்டு இருந்த நான் அப்பிடியே நகர்ந்து வந்து பக்கத்துல இருந்த சுவற்றில சாய்ச்சு வச்சிருந்த ஏணியில ஏரி... அந்தாண்ட விழுந்துட்டனாம். சத்தம் கேட்ட எங்கம்மா ஏதோ செறாக்குச்சித்தான் ( விறகு ) விழுவுதுன்னு அசால்ட்டா இருந்துருச்சாம்.

அம்மியில எல்லாம் அரைச்சிட்டு “எங்கடா புள்ளைய காணோம்னு ..” தேடுனா நான் சுவற்றுக்கு அந்தால ‘தேமே’ன்னு கிடக்கிறனாம். அப்புறமா என்னையத் தூக்கிட்டுப் போனுச்சாம்.

ஆனால் நான் அழுவவே இல்லியாம், எங்கம்மா சொல்லும்.

* மவராசி...!
_________________________________________________________________________________

நான் செஞ்ச குறும்பு - 3 :

அப்ப மூனாவது படிக்கிறேன். ஒரு நாள் மத்தியானம் வகுப்பு முடிஞ்சு இடைவேளை நேரம். மணி 3.30 . எங்க வீடு, பக்கத்து வீடு, தெருவில எல்லா வீடும் கூரை வீடுதான். பள்ளிக்கூடம் மட்டும்தான் ஓட்டுக் கட்டடம்.

நான், என் ஃப்ரெண்ட் குமார், பாலகிருஷ்ணன், செங்குட்டுவன் எல்லாரும் விளையாடிட்டு இருக்கோம். அப்ப எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு சுவற்றுக்கு அருகில் எள்ளு சக்கை குமிச்சு வச்சிருந்தாங்க. நான் எங்க வீட்டுக்கு ஓடிப் போயி அடுப்புக்கு பக்கத்தில இருந்த தீப்பெட்டி எடுத்து வந்தேன். எங்க வீட்டுல எல்லோரும் காட்டுக்கு போயிட்டாங்க. தீக்குச்சியை எடுத்து விளையாட்டுத்தனமா கொளுத்தப் போயி.. எள்ளுச் சக்கை பிடிச்சுகிட்டு, அப்பிடியே நெருப்பு பக்கத்து வீட்டு கூரையில பிடிச்சிக்கிச்சு. ஊரே கூடிடிச்சு . எல்லோரும் தண்ணி மொண்டு ஊத்தி ஒரு வழியா நெருப்பை அனைச்சிட்டாங்க.

அதுக்கப்புறம் தான் க்ளைமாக்ஸே. விஷயம் பள்ளிக்கூடத்திக்கு தெரிஞ்சி, முழுக்கை வாத்தியார் மாரிமுத்து ( அவரு எப்பவும் முழுக்கை சட்டைத்தான் போடுவார் ) எங்க நாலுபேரையும் பிடிச்சிட்டார். பள்ளிக்கூடமே வேடிக்கைப் பார்க்குது.

எங்க நாலுபேரையும் ரெண்டு காதையும் கைகளால் தோப்புக் கரணம் போடுவது மாதிரி பிடிக்கச் சொல்லி, முட்டிக்கால் போட்டபடி பள்ளிக்கூடத்திற்கு முன்னாடி இருந்தா கிரவுண்ட் சுத்தி மூனு ரவுண்டு அடிக்கச் சொன்னார்... நாலு மணி வெயில், கூட படிக்கிறவங்க எல்லோரும் வேடிக்கைப் பார்க்கிறாங்க, ஒரு ரவுண்டுங்கிறது சுமாரா 20 நிமிடம். சத்தியமா நான் அழுதிட்டேன்.

விஷயம் கேள்விப்பட்டு எங்கம்மா ஒரு ரவுண்டு, எங்கப்பா ஒரு ரவுண்டுன்னு அடிப் பிண்ணிட்டாய்ங்க.

சோறு தின்னனான்னு ஞாபகம் இல்லை. அன்னைக்கு ராத்திரி அழுதுகிட்டே தூங்கிட்டேன்.

* கூரைகளும் அறிந்திடாத சோகங்கள்

உரையாடல் அராஜகம்



அரசியல் தவிர்த்து நாம் எல்லோரும் பேச என்ன இருக்கிறது?

.........

” வாங்க இலக்கியம் பேசலாம்..”

“ மொக்க போடாதீங்க...”

” வாங்க இலக்கணம் பேசலாம்...”

“ நீங்க பள்ளிக்கூட வாத்தியாரா ? “

“ வாங்க சினிமா பேசலாம்...”

“ அது.. பார்ப்பாங்கத்தானே..? பேசலாம்கிற ...லூஸாயா நீ.. “

“ வாங்க மருத்துவம் பேசலாம்..”

“ எல்லாம் எனக்குத் தெரியும்..”

“ வாங்க அறிவியல் பேசலாம்..”

“ இப்ப என்ன பரிட்சைக்கா படிக்கிறோம்..? “

“ வாங்க சமூகம் பேசலாம்...”

“ ஏதாவது நிதி வேணுமா..? “

“ ..........................................”

‘ .....’

“ உங்க பக்கத்து டேபிள்ல இருக்காரே...? “

“ ஆமா சார்.. நான் கூட கேக்கனும்னு நெனைச்சேன். அவரு ஏன் இப்படி இருக்கிறார். அவரை மாதிரி ஒரு ஆளை பார்த்தே இல்லை. உங்களைப் பற்றிக் கூட...”

* அரட்டைகளின் அரசியல் : உரையாடல் அராஜகம்

தேர்தல் திருவிழா

 தேர்தல் திருவிழா

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் கண்டிப்பாக ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தீர்மாணிக்க வேண்டும். இல்லையெனில் வேட்புமனு நிராகரிக்கப்படும் என்று அறிவிக்க வேண்டும்.

*
 " தலைவரே இந்த தடவை பூத் செலவோட சேர்த்து ஃபேஸ்புக் செலவுன்னு ஒரு பட்ஜெட் போட்டு வையுங்க...”

” ஆமாய்யா...அநேகமா இந்த தடவை அவிங்கத்தான் டிஸைடிங் பேக்டர்...”


*
 " யோவ் .. என்ன வெளையாடுறீயா..? ஓட்டுக்கு 500 தானே..நீ 1000 ரூபாய் கேக்குற..? “

“ தலைவா... நான் ஃபேஸ்புக்ல இருக்கேன்..”


*

 அமைதிப்படை ரீமிக்ஸ் : 

” எங்க ஊர் பெட்டிய உடைக்கட்டும்...
நீங்கெல்லாம் எகிரிறீங்களா இல்லியான்னு பார்ப்போம்...”

“ உங்க ஊர்ல தாண்டா நாங்க கள்ள ஓட்டே போட்டோம்....”

“ அதெப்படி...? எல்லாரும் 1000 ரூபாய் வாங்கினாய்ங்களே..”

“ 1000 ரூபாய் வாங்கிட்டு எல்லாப் பயலும் ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டுட்டே இருந்திட்டாய்ங்க. ஒருத்தனும் ஓட்டுப் போட வரல...”
*

” ஃபேஸ்புக்ல இருக்காய்ங்கண்ணு அண்ணா நகர் 5 நெம்பர் பூத்துக்கு இப்பத்தான் ஒருத்தன் 45000 ரூபாய் வாங்கிட்டுப் போறான். நீயும் அண்ணா நகர் 5 நெம்பர் பூத்துன்னு சொல்றே...”

“ தலைவா...மோசம் போய்ட்டீங்க அவிங்க பூராம் ஃபேக் ஐ.டி. “

“ அப்பிடின்னா..? “

“ நாம ஜெயிச்ச மாதிரிதான்....வெளங்கிடும். “


*
எதிர்கட்சிகாரர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன்...

வெளிநாட்டுக்காரனை வைத்து ஃபேஸ்புக்கில் எழுதும் நீயெல்லாம் தமிழனா ? உப்பு போட்டுத்தான் சோறு திங்கிறாயா ?


*
தேர்தல் நடக்க இருக்கும் 48 மணி நேரத்திற்கு முன்னதாகவே அனைத்து ப்ரொவ்சிங் செண்டர்களும் பூட்டி விட வேண்டுமென்று தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.

# ஆமாங்க...


*
எந்த கட்சிக்கு ஓட்டு போட்டேனென்று யாரும் ஸ்டேட்டஸ் போடவேண்டாமென்று அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மீறுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப் படும் : தேர்தல் ஆணையம்

# யோவ்..அவரு சூப்பர்ஸ்டாரு...அப்பிடியுங்கூட அப்ப ஃபேஸ்புக் இல்ல...


*

விரல்களால் விழிமூடினேன்

விரல்களால் விழிமூடினேன்
தெரிந்தது
கனவு

வார்த்தைகளின் பின்னாலே

வார்த்தைகளின் பின்னாலே
போய்த்தான்
ஒரு கவிதையை
கண்டெடுத்தேன்

நீ என்னை பிரிந்த நாளில்

நீ
என்னை பிரிந்த நாளில்
செத்துப் போன
எனது கவிதைகளையெல்லாம்
தோண்டியெடுத்து
தூக்கிலிட்டேன்

உன் முந்தானையை

உன் முந்தானையை
நீ
உதறி சொருகியபோது
தெறித்து விழுந்தது
வெட்கத்தின் கவிதை

Sunday 18 August 2013

காதலிகள் நிறைந்த சபையில்

காதலிகள் நிறைந்த சபையில்
அரசியாய் இருக்கிறாள்
மனைவி

சுஜாதா நினைவு கற்பனைத் திறன் போட்டி - 2



” சுஜாதா நினைவு கற்பனைத் திறன் போட்டி - 2 “ ல் கலந்து கொண்ட எனது படைப்பு , திரு. வெங்கடேஷ் ஆறுமுகம் அவர்களின் அனுமதியோடு இங்கு வெளியிடப் படுகிறது.

போட்டிக்காக 5 கதைகள் எழுதினேன், முதல் மூன்று மட்டும் அனுப்பினேன்..... இப்போது உங்களுக்காக :

சுஜாதா நினைவு கற்பனைத் திறன் போட்டி எண் - 2

படைப்பு : ப. செல்வகுமார்
_______________________________________________________

1) தலைப்பு : திருமணக் கோலத்தில் தேர்வெழுத வந்த மணமக்கள்…..

கதை : “ சீக்கிரம் கட்டு “

*

2) தலைப்பு : நகைக் கடையின் வரிசையில் …..

கதை : “ உரசாம நில்லு “

*

3) தலைப்பு : முதலிரவு காட்சியின் படப்பிடிப்பில் …..

கதை : “ லைட்ஸ் ஆன் “

*
4) தலைப்பு : பத்து வருட திருமண வாழ்க்கை …..

கதை : “ சலிச்சுப் போச்சு “

*
5 ) தலைப்பு : வராமல் போனதற்கு பால்காரரின் பதில் …..

கதை : “ தண்ணி வரல “

*

_________________________________________________

கலந்துக் கொள்ள வாய்ப்பளித்மைக்கு திரு. வெங்கடேஷ் ஆறுமுகம் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி...

* யோவ் செல்வகுமார்.. மூனாவது போட்டி அறிவிச்சு முப்பது நிமிஷம் ஆச்சு... அங்க பல பேரு மவுச எடுத்தாச்சு...அங்கனக்குள்ள கதை பேசிக்கிட்டு.... நீ தேற மாட்ட...

சுஜாதா நினைவு கற்பனைத்திறன் போட்டி-1

வெங்கடேஷ் ஆறுமுகம் முகநூலில் நடத்தும் போட்டி : 

சுஜாதா நினைவு கற்பனைத்திறன் போட்டி-1...

அன்பிற்கினிய நண்பர்களே கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட இப்போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் ஆதரவு தந்தவர்களுக்கும் மிக்க நன்றி...

மொத்தம் 20 நபர்கள் கலந்து கொண்டாலும் இனி வரும் காலங்களில் இது அதிகரிக்கும் என எண்ணுகிறேன்... இந்த வார வெற்றியாளர்கள் பட்டியல் இதோ...

செல்வ குமார்
சஞ்சய்காந்தி
கோகுலன் நடராஜன்
கவி இளவல் தமிழ்
முதல்பக்கம் முக்கி
அஜ்னபி அல் ஸ்ரீலங்கி
சதீஷ் குமார்
செ.யோக்ஸ்
புங்கை முகிலன்
வெங்கட் கோகுலத்தில் சூரியன்...

இவர்கள் அனைவரும் வெற்றியாளர்கள்.. வாழ்த்துக்கள்... இவர்கள் அனைவருக்கும் சுஜாதாவின் புத்தகம் பரிசு.

இவர்களின் படைப்புகள் இவர்களுக்கு பரிசாக அளிக்கும் புத்தகம் பற்றிய விவரங்கள் நாளை என் முகனூல் பக்கத்தில் வெளியாகும்.

*

Selvakumar

சுஜாதா கற்பனைத்திறன் போட்டி எண்- 1 


” கண்ணகியே, கொல்லப்பட்ட ஃபேக் ஐ.டி கோவலன் யார் ? “

“ என் கணவன் ..”

“ கோவலனது ஃபேஸ்புக் ரிலேஷன்சிப் ஸ்டேட்டஸில் சிங்கிள் என்றுதானே போட்டிருக்கிறான்..”

“ ஐய்யகோ….அது மாதவியோடு சேட்டிங் செய்வதற்கான ஏற்பாடு..”

“ அது யார் மாதவி ? “

“ அவள் இந்த நோக்கியாவுக்கு சக்களத்தியாய் வந்த சைனா மொபைல்..”

“ சரி… கோவலன் உன் கணவன் தான் என்று எப்படி நம்புவது..? ”

’ இதோ ’வென கண்ணகி .வோட்டர்ஸ் ஐ.டி.யை வீசியெறிய…

“ பொன்செய் ’மார்க்’கின் தன்சொற்கேட்ட..

யானோ அரசன் யானே கள்வன்..”

மன்னவன் மயங்கி வீழ்ந்தனன்…..
_____________________________________________
Photo: Selvakumaar 

சுஜாதா கற்பனைத்திறன் போட்டி எண்- 1  

” கண்ணகியே, கொல்லப்பட்ட ஃபேக் ஐ.டி கோவலன் யார் ? “
“ என் கணவன் ..”
“ கோவலனது ஃபேஸ்புக் ரிலேஷன்சிப் ஸ்டேட்டஸில் சிங்கிள் என்றுதானே போட்டிருக்கிறான்..”
“ ஐய்யகோ….அது மாதவியோடு சேட்டிங் செய்வதற்கான ஏற்பாடு..”
“ அது யார் மாதவி ? “
“ அவள் இந்த நோக்கியாவுக்கு சக்களத்தியாய் வந்த சைனா மொபைல்..”
“ சரி… கோவலன் உன் கணவன் தான் என்று எப்படி நம்புவது..? ”
’ இதோ ’வென கண்ணகி .வோட்டர்ஸ் ஐ.டி.யை வீசியெறிய…
“ பொன்செய் ’மார்க்’கின் தன்சொற்கேட்ட..
 யானோ அரசன் யானே கள்வன்..”
மன்னவன் மயங்கி வீழ்ந்தனன்…..
 _____________________________________________

வாய்ப்புக்கு நன்றி....

நண்பர்கள் போலே வாழ்வதற்கு….

நண்பர்கள் போலே வாழ்வதற்கு….

வாய்ப்பு கிடைக்கிற பிறந்தநாளுக்கெல்லாம் புத்தாடை எடுப்பேன். அதுவும் இப்ப அஞ்சாறு வருஷமாத்தான். நேற்று முன் தினம் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்ததில் மறந்து விட்டு வீட்டுக்கு வந்தவுடன் அவள் கேட்டாள்...

“ ட்ரெஸ் எடுக்கல...”

‘இல்லை... பேசிட்டே மறந்துட்டேன்.. இப்ப என்னா அதுக்கு...? ‘

“ இல்லை பொறந்த நாளுன்னா எடுப்பியே அதான் கேட்டேன்...”

‘ இல்லாட்டியும் நீதான் எடுத்துக் கொடுத்திடுவ...’

“ நான் என்ன சம்பாரிக்கப் போறனா..? .. ம்ஹீக்கும்...’

அடடா..கேக்கற அளவுக்கு நடந்துக்கிட்டோமே..
எடுத்திருக்கலாமோ..?...
திட்டுவாய்ங்கன்னுல்ல நினைச்சோம்...
சரி விடு புது சட்டை போடலைன்னா பொறந்த நாள் போகதா..பொறக்கும்போது புது சட்டை போட்டுக்கிட்டா பொறந்தோம்...?

நேற்று அதான் எனது பிறந்த நாள் காலை . வழக்கமாக பிள்ளைகள் எனக்கு முன் எழுந்து குளித்து முடித்து என்னை எழுப்பி வாழ்த்துச் சொல்வார்கள்...

ம்ஹீக்கும்...ரெண்டும் தூங்குது..சின்ன வாண்டு மேயுது...

சோம்பலாய்.. ’ தேமே ‘ன்னு ... சரி குளிப்போம் என்று டாய்லெட்டுக்குள் நுழைந்து விளக்கி, குளித்து இடுப்பில் கட்டிய துண்டோடு வெளியேறியதுதான் தாமதம்.. சேகுவேராவும், இளைய நிலாவும் இடது கைகளை பின்னால் கட்டிக் கொண்டு... ‘ஹே..’ என்று கத்தி...

“ அப்பா கையைக் குடு..”

“ கையைக் குடுப்பா...” கொடுத்தேன்.

இருவரும் ஒரே குரலில் “ ஹேப்பி பர்த்டே டூ யூ… ” என்று கத்தி மறைத்து வைத்திருந்த இரண்டு புதிய ஆடைகளை ஆளுக்கொன்றாய் கொடுத்தார்கள்.

“ ஏய்…………..” இதற்கு முன்னால் இப்படி ஆனதில்லை…

“ ஏதுடா…? .எப்படா எடுத்தீங்க…? “

‘ அன்னைக்கு ஈரோட்டுக்கு புக் ஃபேர்க்கு போனல்ல அன்னைக்கே அம்மா எடுத்திருச்சு…’

“ நீங்களும் போனீங்களா..? “

‘ நாங்கத்தான் ஸ்கூல் போயிட்டம்ல…’

கைகளில் வாங்கிக் கொண்டு மனைவியைத் தேடினேன்…

“ எங்கடா அம்மா…? ”

‘ அம்மா தோசை ஊத்துதுப்பா… , யெம்மா உன்னைய அப்பா கூப்பிடுறார்….’

ஆனால் அவள் வரவில்லை...

தலைத் துவட்டி பனியன் அணிந்து , புத்தாடையின் விலைப் பட்டியல் கட்டியிருந்த நூலை அவிழ்க்க பற்களால் கடித்தபோது ஏனோ தெரியாமல் , எனது திருமணத்தின் போது அவள் ரவிக்கையில் மாட்டிக் கொண்ட எனது சட்டையை விடுவிக்க பற்களால் கடித்தது நினைவுக்கு வந்தது.

பட்டன் போடும் வேளையில் நினைத்து கொண்டேன், மூன்று வயது குழந்தையை கையில் பிடித்து கடையில போயி எப்பிடி கேட்டிருப்பாள்…?

“ என் புருஷன்னுக்கு பொறந்த நாள்…….ஒரு சட்டை குடுங்கன்னா…..”

நினைத்தால் இனிக்கும் உணர்வோடு நேற்று முழுதும் அவளை அணிந்திருந்தேன்.

பனியன் போடாத

பனியன் போடாத
சட்டைக்குள் கைவிட்டு
கொடிக்குத்திய வேளையில்
உன் விரலில் துளிர்த்த ரத்தம்தான்
என் முத்தங்களின்
தொடக்கப் புள்ளி

கொடியேற்று விழாவில்

கொடியேற்று விழாவில்
தமிழ்த்தாய் வாழ்த்து கண்மூடலில்
ஒற்றைக் கண்ணால்
கண்ணடித்தவள்
நீ

சுதந்திரதின போராட்டத்தில் நான்....

சுதந்திரதின போராட்டத்தில் நான்....

அப்ப நான் அஞ்சாவது படிக்கிறேன். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கீரம்பூர். ஆமாம் துறையூர் பக்கத்தில இருக்கிறதுதான். ஆகஸ்ட்டு 13 ஆம் தேதியே தலைமையாசிரியர் சொல்லிட்டார். ‘ கொடி ஏத்துறன்னிக்கு நீதான்டா உறுதிமொழி வாசிக்கனும்...’.

ஐந்தாம் வகுப்பு வரையிலே உள்ள பள்ளியின் நூறு சொச்சம் மாணவர்களுக்கு நான் தான் மாணவத் தலைவன். அஞ்சாவதுக்கும் நாந்தான் லீடர். அப்பெல்லாம் ’ மானிட்டர்னு ‘ சொல்வாங்க.

ஆகஸ்ட் 15. அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து அம்மா வைத்திருந்த சுடுதண்ணியில் குளிச்சுட்டு கிளம்பி பள்ளிக்கூடத்திற்கு வரும்போது மணி ஏழு ஆகியிருந்தது.

பள்ளிக்கூடத்தில நுழைஞ்சதும் தலைமையாசிரியர் அறையைக் கூட்டி டேபிளை துடைத்து அவர் சைக்கிள் நிறுத்துற இடத்தில இருந்த மண்ணையெல்லாம் நல்லாக் கூட்டி முடிச்சுட்டு நான் தயாராய் இருப்பதற்கும், என் சக மாணவர்கள் அங்கிட்டு மேற்கு பள்ளிக்கூடத்திற்கு பக்கத்தில இருக்கிற வீட்டில் ‘ காகிதப் பூக்கள் ‘ பறித்து வருவதற்கும் சரியாய் இருந்தது. காகித பூக்கள் ரோஸ் நிறம் கொண்டது. வாசனையற்றது.

அதன்பிறகு வந்த மாணவிகளை பள்ளிக்கூடத்தின் முன்பிருந்த கொடிக்கம்பத்திற்கு அருகில் கூட்டச் சொல்லி, சத்துணவு ஆயா கோலம் போட்ட பிறகு, கொடிக் கம்பத்திற்கு அருகே தலைமையாசிரியர் நிற்கும் இடத்தை இலக்கு வைத்து, மணல் தரையில் கால்களில் அச்சு இழுத்து பாதை செய்தேன். இந்த பாதையில் நடந்து சென்’றுதான் தலைமையாசிரியருக்கு வணக்கம் சொல்ல வேண்டும்.

அந்நேரத்தில் ஆசிரியர்களும், தலைமையாசிரியரும் வந்து விடவே 8.30 மணிக்கெல்லாம் விழா தொடங்கி விட்டது.

நான் , கொடிக்கம்பம், தலைமையாசிரியர் என வரிசையாய் நிற்க மொத்தப் பள்ளி மாணவர்களும் முன்னால் நிற்க , அதற்குப் பின்னாலும், வலது இடது புறமும் ஆசிரியர்கள் நிற்க நிகழ்வு தொடங்கியது. ஊர்ப் பொதுமக்களும் திரண்டிருந்தனர்.

” அட்டேன்ஷன்…… ” என்று நான் சத்தமாய் கத்த, என் குரலை விட சத்தமாய் ‘ம்ம்ம்ம்ம்மாமா’ என்று கத்தியது பள்ளிக்கு முன்னால் கிணற்றருகே கட்டப்பட்டிருந்த மாடு. மொத்த மாணவர்களும் ஒரே சிரிப்பு. முதுகுக்குப் பின்னால் முட்களால் கீறியது போல் நான் வேர்த்து விட்டேன். சுதாரித்துக் கொண்டு… மீண்டும் நான் “ அட்டேன்ஷன்..” சொல்ல மாடும் “ ம்ம்ம்மாமா “ என்று கத்தவும் , இப்போது தலைமையாசிரியர், “ யோவ் அந்த மாட்டை அவுத்துட்டுப் போங்கப்பா…”. மாட்டை அவிழ்த்துக் கொண்டு போயினர்.

கொஞ்சம் ஆசுவாசமாகி, மீண்டும் தொடங்கியது.

“ அட்டேன்ன்ன்…ஷன்…” கால்கள் பிரிந்தன.
“ ஸ்டேண்ன்டட்….டீஸ் ” கால்கள் இனைந்தன.

” அட்டேன்ன்…ஷன்…….ஸ்டேண்ன்டட்…டீஸ்..”
லெப்ட், ரைட் என்று கைகள் வீசி கால்களில் வரைந்த தடத்தில் நடந்து , இடது புறமாய் வளைந்து நடந்து மீண்டும் இடது வளைந்து நடந்து தலைமையாசிரியருக்கு முன்னால் நின்று உரத்துக் கத்தினேன். “ சல்ல்…யூட்”.

அடுத்து தலைமையாசிரியரை கொடிக்கம்பத்துக்கு அருகில் அழைத்து சென்று கொடிக் கம்பத்தில் இருந்து கயிற்றை அவிழ்த்து, அவரிடம் கொடுக்க அவர் கொடியை ஏற்றி முடித்தப் பின் கயிற்றை கம்பத்தில் கட்ட வேண்டும்.. இது நடைமுறை.

வீர்மிக்க எழுச்சி நடையோடு ‘ லெப்ட் ரைட்’ சொல்லி கம்பத்தின் அருகில் சென்று கைகளை உயர்த்தினேன்… கொடி கயிறு என் உயரத்திற்கு எட்டவில்லை. இரண்டு முறை முயற்சித்தேன். ம்ம்ஹீகும்.

விநாடிகளில் எனதருகே ஓடி வந்த நான்காம் வகுப்பு சுப்ரமண்யன் ஆசிரியரை கண்டதும் பயந்து விட்டேன். ஏனெனில் அவர் சைக்கிளை கவராயத்தில் ஓட்டை போட்டு பஞ்சராக்கிய அன்று அவர் அடித்தது நினைவுக்கு வந்து பயம் கொடி கம்பத்தை விட மிரட்டியது.

ஆனால் அவர் பொறுமையாக கொடியை அவிழ்த்து என்னிடம் கொடுக்க, நான் தலைமையாசிரியரிடம் கொடுக்க அவர் கொடியை உச்சிக்கு ஏற்றி இழுத்ததும் , பிரிந்த கொடியிலிருந்து பறந்த காகிதப் பூக்கள் தலைமையாசிரியர் மேல் விழுந்து சிதறியது. அவர் கைகளால் உதறிய ஒரு பூ என் தோளில் பட்டது. சிலிர்த்து கத்தினேன். “ கொடிக்கு வணக்கம் “.

மாணவர்கள் அனைவரும் ஒரே குரலில் ‘ கொடிக்கு வணக்கம் ‘ சொல்ல நிமிர்ந்து நோக்கினேன். தேசியக் கொடி பட்டொளி வீசி பறந்தது.

மீண்டும் லெப்ட், ரைட் ..தலைமையாசிரியரை அவர் நின்ற இடத்தில் சேர்த்து…லெப்ட்..ரைட்… நான் நின்ற இடத்திற்கு வந்து உரத்த குரலில் நான் சொல்ல… மாணவர்கள் அனைவரும் என்னோடு சொன்னார்கள்…

“ இந்தியா என் தாய்நாடு, இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர்..என் நாட்டை நான் உளமாற நேசிக்கிறேன்….”

சுதந்திர இந்தியாவின் காட்சிகள்


சுதந்திர இந்தியாவின் காட்சி - 1 :

இடம் : எங்க ஊர்
நேரம் : மதியம் 2.30 மணி

“ யெம்மா , என்னம்மா அந்தப் பள்ளிக் கூடத்து டீச்சர் இந்தப் பக்கமா போறாங்க...”

‘ கூறு கெட்டவனே.. ஒன்னுக்குட போயிட்டு வராங்கடா..’

“ அது சரி.. பின்னாடியே ரெண்டு பொம்பளப் புள்ளைங்க வருது...? “

‘ துனைக்கு..’

* பாரத சமுதாயம் வாழ்கவே..


-----------------------------------------------------------------------------------------------------------


சுதந்திர இந்தியாவின் காட்சி - 2 :

இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

நேரம் : காலை 8 மணி

ஆண்டு : வருஷா வருஷம்



“ இந்தாப் பெருசு.. எங்கப் போற..? “

‘ தியாகி.. குடை வாங்க..’

” ஓ..தியாகியா.. கூட யாரும் கூட்டிட்டு வரலை..”

‘ தனியாத்தான் வந்தேன் ‘

“ இந்தா அங்கிட்டுப் போயி நில்லு.. அப்புறமா கூப்பிடுறேன்..”

“ அந்த நாற்காலியில உட்காரச் சொன்னாங்க...”

“ யாரு அந்த ஏட்டா..? அவருக்கென்ன... நீ போய் அங்க நில்லு.. கலெக்டர் வந்த உடனே நான் கூப்பிடுறேன் “

* வந்தேமாதரம் வந்தேமாதரம்

-----------------------------------------------------------------------------------------------------------

சுதந்திர இந்தியாவின் காட்சி - 3 :

இடம் : ஸ்டேடியம்

சுதந்திரதின விழாவுக்கு பயணாளிகளை அழைத்து வந்திருந்த வட்டாட்சியர் ஒருவர் பரபரப்பாக ஓடி வருவதை கண்ட காவலர் :

“ சார், என்னாச்சு..? “

“ ஒன்னுமில்லைப்பா... யாரு அங்க பாத்ரூமை பூட்டி வைச்சது..? “

“ அதுவா சார்.. இன்னைக்கு ரொம்ப கும்பலா இருக்கும்னுதான் பூட்டிட்டாங்க..”

“ சாவி யாருக்கிட்ட இருக்கு...? “

“ நானே அது தெரியாமத்தான் தவிச்சுட்டு இருக்கேன்....”

பதிலுக்கு காத்திராமல் பக்கமாய் கருவேல மரங்கள் பக்கம் ஒதுங்குவதற்க்கும்...பி.ஆர்.ஓ. அவரை அழைப்பதற்கும் சரியாய் இருக்க... அவசரமாய் முடித்து திரும்பி வந்தவரையே எல்லோரும் பார்த்து நிற்க...

அந்நேரம் பார்த்து நிகழ்ச்சி தொகுப்பாளர் சொன்ன புதுக்கவிதை பொருத்தமாய் இருந்தது :

நீச்சலடித்த
கிணற்றை விற்று
படிக்க வைத்தது
இந்த பாழய்ப்போன
பாத்ஃரூமோடு போரடவா..?

* உச்சியில் தேசியக் கொடி பட்டொளி வீசி பறந்தது..

-----------------------------------------------------------------------------------------------------------

சுதந்திர இந்தியாவின் காட்சி - 4 :

சுதந்திரதின விழா முடிந்து மைதானத்தை விட்டு வெளியேறுகையில் :

“ அப்பா பலூன் வேணும்...”

“ இரு வாங்கித் தரேன்...”

பலூன், பொம்மைகள் விற்கும் அந்தப் பாட்டிக்கு ஏறத்தாழ 67 வயதிருக்கும்...

“ ஆயா.. ரெண்டு பலூன் கொடு...”

“ நிலா இந்தா வாங்கிக்க...”

“ அந்த கேமரா பொம்மையும் வாங்கித் தாப்பா...”

“ யே...என்ன. ரெண்டா..? “

“ கேமரா எனக்கு.. பலூன் தமிழ்நிலாவுக்கு...”

“ ஆயா அதையும் குடுங்க..”

கொடுத்துவிட்டு மீதம் சில்லரைக்காக பைகளில் கைவிட்டவாரே...

“ ஏ.. சாமி... 100 ரூவாயில 40 போன எவ்வளவு..? “

“ ஆயா 60 ரூபாய்...”

அறுபது ரூபாயைக் கொடுத்து விட்டு என்னிடம் கேட்டாள் பாட்டி ,

“ அடுத்த வாரமும் கொடி ஏத்துவாங்களா ? “

* பாரத சமுதாயம் வாழ்கவே..

------------------------------------------------------------------------------------------------------------

வானம் அழுத கண்ணீர்…

வானம் அழுத கண்ணீர்…

ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு சென்றிருந்தேன். 10.08.2013.

மதியம் 3 மணிக்கு நுழைந்தவுடன் இன்ப அதிர்ச்சியாய் எழுத்தாளர் அண்ணன். வா.மு.கோ.மு. வை சந்தித்தேன். எழுத்தாளர் என்ற பிரம்மாண்டத்தை கட்டுடைத்த அவரது எளிமையையும், அவரது எழுத்தையும் சிலாகித்தேன். சிரித்தார். நான் எப்போதோ படித்த அவரது ‘ காசம் அல்லது காசநோய் ‘ சிறுகதையை பற்றி இரண்டொரு வாக்கியங்கள் சொல்லியபோது ‘எனது அனுபவம்’ என்றார்.

இன்று ‘ பிலேமி டீச்சர் ‘ , ‘ தவளைகள் குதிக்கும் வயிறு ‘ என்ற இரண்டு நூல்கள் வெளியீடு இருப்பதை சொன்னார். தெரியும் என்றேன். விடை பெற்று நான்கைந்து புத்தகங்கள் வாங்கி கொண்டு மாலைப் பேச்சுக்கு தயாராய் இருந்த 5.45 க்கு சரளைக் கற்களை பந்தலின் மேல் கொட்டியது போல் மழை மிரட்டியது.

’ அய்யோ பாரதி கிருஷ்ணகுமாரின் பேச்சைக் கேட்க முடியாதோ ‘ என்று நினைந்து வருந்திய இருபது நிமிடங்களில் வானம் வாய் மூடிக் கொண்டது. பிறகென்ன பாரதி கிருஷ்ணகுமாரின் பேச்சைக் கேட்கத்தானே பெரம்பலூரில் இருந்து வந்திருக்கிறேன். சிறு தூரலோடு ஈரநாற்காலிகளோடு நிகழ்ச்சி தொடங்கியது. கைக்குட்டையை தலைக்கு போட்டுக் கொண்டு அமர்ந்துவிட்டேன். ஏழு மணிக்கு வானமும் வந்து உட்கார்ந்துக் கொண்டது.

ஸ்டாலின் குணசேகரனின் அறிமுகமும், கோ.சேதுபதியின் ‘ விளக்கினில் திரி நன்கு சமைந்தது ‘ என்ற பேச்சும் முடிந்து 8.08 க்கு பாரதி கிருஷ்ணகுமார் பேச தொடங்கினார். ’ நன்றினில் அறிவது அறிவு..’ என்பது தலைப்பு. அப்படி பேசுகிற மொழியை எங்குத்தான் கற்றானோ ? .

’ வேறெந்த ஊரின் புத்தகத் திருவிழாவையும் குறைத்து சொல்வது என் நோக்கமல்ல , ஆனால் ஈரோடு புத்தகத் திருவிழாவை உயர்த்திச் சொல்வது என் நோக்கம்..’ என்று தொடங்கினார். நிமிர்ந்தேன். பேசுவதற்காகவே பிறந்து பேசியே வளர்ந்த உயரம் குறையாமல் பேசினார்.

‘ இரண்டு கைப்பிடி மண்ணை எடுத்த இடத்திலேயே போட்டு விடு, என்று சொல்வதற்கு எனக்கொரு அம்மா இருந்தாள்..’ என்று தனது ஆடிப் பெருக்கு மதுரை நாட்களைச் சொன்ன போது மணலாகிப் போனேன்.

இன்றைய கல்வியின் அவலத்தை , பள்ளிகளின் நிலையை அந்த பள்ளி முதலாளிகளின் முன்னிலையிலேயே சொல்வதற்கு ஒரு நெஞ்சுரம் வேண்டும். அதற்கு அவரைப் போல் வளர வேண்டும்.

‘அதிகாரத்தில் இருந்துக் கொண்டு பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துகிறவன் பெற்ற மகளோடு போவதற்கு ஒப்பானவன்..’ என்று குரானில் நபிகள் சொல்லியிருப்பதாக பேசி ஈரக்குலைகளை வெப்பமாக்கினார்.

‘ தண்டவாளத்துக்கு அருகில் தலை நசுங்கி கிடந்த பிள்ளை பால் குடித்த மார்பு துடித்தபடி , சுமந்த வயிற்றில் அடித்துக் கொண்டு அழுதாளே ஒரு தாய்… அவளின் கண்ணீருக்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும்..’ என்று தாங்க முடியாமல் உடைந்து ..” பெற்றால்தான் பிள்ளையா…? “ என்ற போது என் கண்ணங்களை நனைத்திருந்தது கண்ணீர்.

வந்து சேந்திருக்கும் ஆங்கில கல்வியோடு போராடி, கற்க முடியாமல் வெறுத்து பள்ளிகளையே புறக்கணிக்கும் எதிர்கால சமுதாயத்தின் பிள்ளைகள் எங்கு போவார்கள் என்று சொல்லி கண்ணதாசனின் கவிதையை அழுதபடியே பாடிய போது எங்களோடு சேர்ந்து வானமும் அழுத கண்ணீர் தூறலாய் இறங்கியது.

இப்படி மானுட நேசத்தோடு பேசுகிறவனின் பேச்சை நாளெல்லாம் அழுதபடி கேட்க வேண்டும். அப்படி நனைக்கிற கண்ணீராவது நம் ஆன்மாவை சுத்தப்படுத்தட்டும்.

06.43 am

கொஞ்சம் குழப்பம்தான்

கொஞ்சம் குழப்பம்தான்
நீ வீசுவது
வாழ்த்தரிசியா ?
வாய்க்கரிசியா ?

நானும் சில பாடல்களும்....

நானும் சில பாடல்களும்....



நம்ம பல்வேறு சந்தர்ப்பங்களில் பல பாடல்களை பாடுகிறோம் :

உதாரணத்திற்கு கீழ்வரும் ஸ்டேட்டஸ்களில் .....

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்...

* பொதுவாக இந்தப் பாடலை செயல் தொடங்குவதற்கு முன்னர்தான் பாட வேண்டும். இது சூளுரைக்கும் பாடல். ஆனால் பெரும்பாலும் செயல் முடிந்து வெற்றி பெற்ற பின்னர்தான் பாடுகிறோம்.

@

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்

* இந்த பாட்டை ஹம்மிங் பன்னலைன்னா நீங்கள் வேறு ஏதோ கிரகத்தில் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்

@

மஞ்சள் நிலாவுக்கு இங்கு ஒரே சுகம்...
புது சுகமே... இனிக்கும் நன்னாளிது...

* இது எந்த உணர்வின்போது பாடுகிறோம் என்று தெரியவில்லை. ஆனால் மாததில் ஒரு நாள் தொற்றிக் கொள்ளும்.

@

போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய்
வாழ்ந்தவர் யாரடா...

* இறப்பின் துக்கத்தில் எழுதிய பாடல் இது. ஆனால் யாரைப் பற்றியும் யாரும் இப்படி கொள்வதாக எண்ண முடிவதில்லை.

சான்று :
1. சுனாமியில் இறந்தவர்கள்

2. சமீபத்தில் பத்ரிநாத்தில் இறந்தவர்கள்

* ஆனால் மனிதர்களுக்காக எழுதிய இந்தப் பாடலை பெரும்பாலும் பொருள்களை இழக்கும்போது பாடுகிறார்கள்

சான்று :

1. மணிபர்சிலிருந்து ஐந்து ரூபாய் நாணயம் தவறிய போது

2. பிச்சைக்காரன் நாம் கொடுக்கும் சில்லரையை வாங்காதபோது

@

அமைதியான நதியினிலே ஓடும் .. ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்...

* இது உண்மையிலே அமைதியா இருக்கும் போதுதான் வரும். இன்னொன்னு என்னான்னா... அமைதியாவும் + மகிச்சியாவும் இருந்தாத்தான் வரும்.

@

பருத்தி எடுக்கையிலே - என்னை
பலநாளும் பார்த்த மச்சான்..

* இது எந்தப் பருத்திக் காட்டுலயும் யாரும் பாடினதா கேட்டதில்லை. ஆனால் அந்த மூனாவது வரியை பல பெண்கள் பாடி கேட்டிருக்கேன்.

ஒருத்தி இருக்கையில
ஓடி வந்தால் ஆகாதோ..?
ஓடித்தான் வந்திருப்பேன் - நான்
ஒன்ன மட்டும் பார்த்திருந்தா.

@

பெத்து எடுத்தவதான் என்னையும்
தத்து கொடுத்துப் புட்டா
பெத்த கடனுக்குத்தான் என்ன
வித்து வட்டிய கட்டிப் புட்டா

* நிறைய பேரு சோகமா இருக்கும்போது அடிக்கடி இதை பாடுவாங்க. ஆனால் இது அம்மாக்களோடு வாழமுடியாத பிள்ளைகள் பாட வேண்டியது. நான் இத எங்க அம்மாகிட்டியே பாடி இருக்கேன். அதிலேயும்...

ஊருல எங்க நாட்டுல எங்க
காட்டுங்க எங்க தாய்போல...

* ஹை பீக்....

@

என்ன சத்தம் இந்த நேரம்
இசையின் ஒளியாய்....

* காட்சிப்படி இது ஆளில்லாத ஆலப்புழா மாதிரி இடத்தில பாடனும். எனக்குத் தெரிஞ்சு இந்த பாட்டு டவுன்பஸ்ஸுலதான் பாடுவாங்க. ஏன்னா..நோக்கம் அப்பிடி.

கூந்தலில் நுழைந்த கைகள்
ஒரு கோலம் போடுதே...

* இந்த வரி பாடும்போது திரும்பியாச்சுன்னா சிக்னல் கிடைச்சாச்சுன்னு அர்த்தம்

மங்கையவள் வாய்திறந்தால்
மல்லிகைப் பூ வாசம்

** பாட்டுப் பூராம் ஒரே கோஃட் வேர்டா இருக்கு. அப்பிடி பாஸாகும்.

_____________________________________