Saturday 29 June 2013

கடன் கொடுக்கும்போது தெரியாத

கடன் கொடுக்கும்போது தெரியாத 
அவனின் கோரைப் பற்கள் - அதை
வசூல் செய்யும்போது வெளிப்படுகிறது.

பணத்திற்கு கூட கம்பி இருக்கிறது

பணத்திற்கு கூட கம்பி இருக்கிறது 
அதை 
வைத்திருப்பனின் நாக்கில்தான் நரம்பில்லை.

கடன் கொடுத்தவனின்

கடன் கொடுத்தவனின்
தெருவில் நடக்க முடியவில்லை
வழியெங்கும்
அவன் நாக்குகள்

Wednesday 26 June 2013

நீ தாகத்தில் இருந்ததாய்

நீ
தாகத்தில் இருந்ததாய்
நான்
கேள்விப் பட்டதுமில்லை

நான்
தாகத்தோடு இருப்பதை
நீ
கேட்டுக் கொண்டதுமில்லை

நீ அவனை வாழ்த்தும்போது

நீ அவனை வாழ்த்தும்போது
பார்த்துக் கொண்டிருந்தேன்..
வேறன்னெ செய்ய

நீ அவனை வசைபாடும்போதும்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்..
வேறன்ன செய்ய

நீயும் அவனும்
என்னை
வாழ்த்தவோ வசைபாடவோ இல்லை
பார்த்துக் கொண்டுத் தானிருக்கிறேன்
வேறன்னெ செய்ய.

Saturday 22 June 2013

என்னைக் காதலித்தவள்

என்னைக் காதலித்தவள்
எவளென்று
கண்டுபிடிக்க முடியாமலே
போய்விட்டதே...

Friday 21 June 2013

நீ நடக்கும் தெருவில்

நீ நடக்கும் தெருவில்
கால் வைக்க முடியவில்லை
வழியெங்கும் முட்கள்

Thursday 20 June 2013

நான் எழுதாத

நான்
எழுதாத கவிதைக்குள்
ஒளிந்திருக்கிறது
என் கவிதை

Wednesday 19 June 2013

உனக்கென எழுதிய

உனக்கென எழுதிய
கவிதைகளை
பிடித்திருக்கிறது
என்று சொன்னவர்களில்
நீயில்லை என்பதில்தான்
தொடங்குகிறது
என்
கவிதைகள் குறித்த சந்தேகங்கள்

என் கவிதைகள் குறித்து

என் கவிதைகள் குறித்து
நான் - உன்னிடம்
எதுவும் பேசப்போவதில்லை

Tuesday 18 June 2013

இத்தனை வருடத்திற்குப் பிறகும்

இத்தனை வருடத்திற்குப் பிறகும்
உன்னைக் காதலித்தற்கான
காரணம் மாறாமலிருக்கிறது...

திருவிழா தொடங்கியதும்

திருவிழா தொடங்கியதும்
பட்டிக்கு மாறிய ஆட்டுக்குட்டி
முடிந்ததும்
தேர்க்காலுக்கே திரும்பியது

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது
உன் பெயர்

பார்த்ததில் பிடித்தது
உன் விழிகள்

கடித்ததில் பிடித்தது
உன் இதழ்கள்

பிடித்ததில் பிடித்தது
உன் விரல்கள்

Monday 17 June 2013

பகலில் பார்க்க

பகலில்
பார்க்க முடிவதேயில்லை
கரகாட்டக்காரிகளை

குறத்தியின் மீது

குறத்தியின் மீது
குத்தி நிற்கும் கண்கள்
என்னுடையது மட்டும் தானா ?

முன்னாடிபோய்

முன்னாடிபோய்
ஒக்காந்துரனும்
குனிய தேவையில்லை

ஊக்கும் நூறு ரூவாயும்

ஊக்கும் நூறு ரூவாயும்
காலையிலே எடுத்து வச்சிட்டேன்
ஆட்டம் ராத்திரிக்குத்தான்..

போனத் திருவிழாவுக்கு வந்த
மதுரை செட்தானாம்..
அன்னக்கிளி வருவாளா?

இரவு முழுக்க

இரவு முழுக்க
சுற்றி சுற்றி வந்தேன்
கரகாட்டக்காரியின்
தொப்புளுக்கு அருகிலேயே...

Sunday 16 June 2013

அப்பாவான போது… அன்னைக்கு வியாழக்கிழமைன்னு

அப்பாவான போது…

அன்னைக்கு வியாழக்கிழமைன்னு நினைக்கிறேன். பள்ளிக்கூடம் போயிட்டு வீட்ல வந்துப் பார்த்தா அவங்கள காணோம். அப்ப நான் வீரகனூர் பள்ளிக்கூடத்தில டெம்ப்ரவரியா வேலைக்குப் போயிக்கிட்டிருந்தேன்.அப்பா, அம்மா, தம்பி யாரையுமே காணோம். வீடு வேறு பூட்டியிருந்துச்சு. முன்னாடி வீட்ல கல்யாணி சின்னம்மாவைக் கேட்டதுக்கு, ” அந்தப் புள்ளைக்கு வயித்து வலி வந்துருச்சாம் அதான் உங்கப்பா, அம்மா எல்லாரும் கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்க…” முழுதாக கேட்டு முடிக்கும் முன்பே பேருந்துக்காக ஓட்டமெடுத்தேன்.
அதுக்கப்புறம் அரைமணி நேரம் கழிச்சுத்தான் டவுன்பஸ் வந்திச்சு. பஸ்ல ஏரி அடிச்சி புடிச்சி ஆஸ்பத்திரிக்குப் போனா, எங்க இருப்பாங்கன்னு வேற தெரியல. ஓபி சீட்டு கொடுக்குற இடமெல்லாம் சாத்திக் கெடந்துச்சி. அப்புறம் ஒருத்தர்கிட்ட கேட்டு பின்னாடி பிரசவ வார்டுப் பக்கம் போய் பார்த்தா..அங்க இவ எங்கம்மா மடியில படுத்துக்கிட்டு அம்மா..அம்மான்னு கத்திக்கிட்டு இருக்கா. மணி நாலு நாலரை இருக்கும் ‘எத்தனை மணிக்கும்மா வந்தீங்க ?’ எங்கம்மாக்கிட்ட கேட்டேன். ரெண்டரைக்கே வந்துட்டதா சொன்னுச்சு. எங்கப்பாவைத் தேடினேன் அவரு ஒரு ஓரமா ஒரு வேப்பமரத்துக்கு கீழ ஒக்காந்து கிட்டு சின்ன குச்சியை எடுத்து தரையில குத்திக்கிட்டு இருக்காரு. எனக்கு என்னப் பன்றதுன்னு தெரியல. அவ பக்கத்தில போய் ‘ ஏ…வலிக்குதா.?’ ன்னு கேட்டேன். அவ்வளவு வலியிலயும் அழுவுறத நிறுத்திட்டு ‘ம்ம்ஹீம்…’ அப்பிடின்னு மொறச்சா. நான் பேசாம எங்கம்மா பக்கத்தில போய் உட்காந்துக்கிட்டேன்.
அப்புறம் யாரோ சொன்னாங்கன்னு அங்க இங்கன்னு ஆஸ்பத்திரியே நடந்தா. நானும் என்னப் பன்றதுன்னு தெரியாம டீ குடிக்கப் போறதும் வாரதுமா இருந்தேன். நேரம் ஆக ஆக எனக்கு ஒன்னும் புரியல. எங்கப்பா முகத்தைப் பார்த்தேன், அவரு புரிஞ்சமாதிரி ‘இந்தா அந்தால ரூமுல கத்திக்கிட்டிருக்கே. எளம்பலூராம். வந்து ரெண்டு நாளாச்சாம். இன்னும் ஒன்னும் ஆவல”ன்னு சொல்லிட்டு மறுபடி வேப்ப மரத்தில சாய்ஞ்சிக்கிட்டாரு. எனக்கு இன்னும் ரெண்டு நாளாவுமோன்னு வேற ஒரு மாதிரியாயிருச்சி.
இருட்ட ஆரம்பிச்சவுடன்னே எங்கம்மா ”ஏம்ப்பா…நீ போய் சாப்பிட்டு..அப்பிடியே இந்தப் புள்ளக்கும் ஏதாவது வாங்கியா”ன்னு முடிக்கிறதுக்குள்ள எங்கப்பா “ஆமா அவந்தான் வாங்கியாருவான்…நீ இருப்பா நான் வாங்கியார”ன்னு பதிலுக்கு காத்திராமல் கடைக்கு கிளம்பிட்டார். அப்புறம் கொஞ்சம் நேரத்தில ஒரு கேரி பேக் நெறையா பார்சல் வாங்கியாந்தார். முதல்ல அவள சாப்பிடச் சொன்னாங்க…அவ ரெண்டு மூனு இட்லிக்கு மேல திங்க முடியலன்னுட்டா. எங்கம்மா ஏங்கிட்ட “நீ போய் சாப்பிட்டு படுத்துக்கன்னு” சொன்னவுடனே நான் அவளப்பார்த்து “ நான் சாப்பிட்டா”ன்னு கேட்டேன். அவ எங்கம்மாவை ஒரு பார்வைப் பார்த்துட்டு என்னை ஒரு முறைப்பு முறைச்சா. நான் கொஞ்ச நேரம் அப்பிடியே நின்னுகிட்டு இருந்துட்டு அப்புறமா எந்திருச்சிப் போய் பையிலிருந்த நாலு பரோட்டாவைப் சாப்பிட்டுட்டு ஆஸ்பத்திரிக்குள்ள ஒரு கோயில் இருக்கு. அதுக்கு பக்கத்தில இருந்த மணலிலே, கையில வச்சிருந்த மாலைமுரசு பேப்பரை விரிச்சுப் போட்டுப் படுத்துட்டேன். அப்புறம் எப்பத் தூங்கினேன்னு தெரியல.
“ஏ…எப்பா எந்திரி..எந்திரி…” அப்பா சத்தத்தை கேட்டு கண்ணைக் கசக்கி வாட்சைப் பார்த்தேன் மணி 6.30.
‘என்னப்பா..’
”எப்பா…சீக்கிரம் எந்திரி… இங்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. திருச்சிக்குத்தான் போவனுமாம். ஒங்கம்மா ஒன்னுகுட போயிருக்கா. அவ வந்தவுடனே கெளம்பனும்…நான் போய் பிளசர் பேசிட்டு வந்துரேன்..”
ஒன்னும் புரியாம அவுந்துருந்த கையிலியைக் கட்டிட்டு அவளைத் தேடினேன். அவ வயித்தைப் பிடிச்சுக்கிட்டு இங்கிட்டும் அங்கிட்டும் நடந்துகிட்டுருந்தா. நான் எந்திரிச்சி மூஞ்சை கழுவிக்கிட்டு வர்றதுக்குள்ள எங்கம்மாவும் வந்திருச்சி. ரெண்டு பழைய சேலை, ஒரு கூடைப் பை , வாட்டர் கேன் எல்லாம் எடுத்து வச்சிகிட்டு ரெடியாவுறதுக்கும் கொஞ்ச நேரத்தில கார் வர்றதுக்கும் சரியா இருந்திச்சு. கார்ல நானு, அதுக்கப்புறம் அவ, எங்கம்மா மூனு பேரும் பின்னாடி ஒக்காந்துகிட்டோம். எங்கப்பா , அவளோட அண்ணன் அவ்வளவுத்தான். கார் கெளம்பிடுச்சு. சிறுவாச்சூர்ல ஆரம்பிச்சு போற வழி நெடுவுலயும் எங்கப்பா கையை நீட்டி நீட்டி கும்பிட்டுகிட்டே வந்தார்.
திருச்சி கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில கார் உள்ளப்போகும் போது கரெக்டா மணி 11. இறங்கிடன கொஞ்ச நேரத்தில ஸ்ட்ரெச்சர் வந்துச்சு. அங்கருந்து கொடுத்தூட்ட சீட்டு இருக்கானு கேட்டாங்க. எங்கப்பா அண்ட்ராயர்ல இருந்து எடுத்துக் கொடுத்தார். சீட்ட வாங்கிட்டு ஸ்ட்ரெச்சர்ல அவளைப் படுக்கப் போட்டு இழுத்துக்கிட்டு ஒரு ரூமுக்குள்ளப் போனாங்க. கொஞ்ச நேரத்தில ஒரு நர்ச் வந்து ‘அந்த அம்மா வீட்டுக்காரர் யாருன்னு’ கேட்டவுடனே நான் அந்த ரூமுக்குள்ள போனேன். ஒரு விண்ணப்பத்தில கையெழுத்துக் கேட்டாங்க. நான் எதுக்குன்னு கேட்டேன். முறைச்சாங்க. நான் பேசாம போட்டுடேன். கையெழுத்துப் போடும்போது அவளை ஒரு தரம் பார்த்தேன். அவ கண்ணெல்லாம் வெளுத்துப் போயி ‘ஙே’ன்னு இருந்தா.
கையெழுத்து போட்டதுக்கப்புறம் ஸ்ட்ரெச்சரை இழுத்துக்கிட்டு ரூமுலருந்து வெளிய வந்து பிரசவ வார்டு இருக்குற பக்கம் இழுத்துட்டுப் போய்ட்டாங்க. ஏதோ சினிமாவுல பார்க்குற மாதிரி நான் பார்த்துக்கிட்டே இருந்தேன். பத்து நிமிஷம் இருக்கும் ஒரு நர்ச் ஒடி வந்து வராண்டாவில நின்னுகிட்டு ‘இங்க யாரு தனலெட்சுமி வீட்டுக்காரர்’னு கேட்டதும் நான் போய் ‘நாந்தான்’னு சொன்னேன். ”உங்க வொய்ப் காபி வாங்கிட்டு வரச் சொன்னாங்க..”ன்னு சொல்லவும் நான் கையிலியை மடிச்சி கட்டிகிட்டு ஓடப் போனவனை நர்ச் மறுபடியும் கூப்பிட்டு ‘அப்பிடியே ரெண்டு கரும்புச்சாறு வாங்கியாங்க’ன்னாங்க. நான் “ அவளுக்கு கரும்புசாறு புடிக்காது..”ன்னேன். நர்ச் விடாம “ கரும்புச்சாறு எங்களுக்கு”ன்னாங்க. நான் ஒன்னும் பேசாம ஓடிப் போய் வாங்கியாந்து கொடுத்துட்டு வராண்டாவுல ஒரு ஒரமா நின்னுகிட்டேன். பின்னாடி ஒரு நாள் அவகிட்ட கேட்டேன் “ உனக்கு அவ்வளவு வலியிலயும் காபி கேட்குதா..?” அதுக்கு அவ சொன்னாள் “அப்பிடியேத்தான் வாங்கியாந்து நீட்டிப்புட்ட…” நான் ஒன்னும் பேசலை.
நாங்கெல்லாம் அப்பிடியே அந்த வராண்டாவுல உட்காந்துட்டோம். எங்கப்பாத்தான் இங்கிட்டும் அங்கிட்டும் நடக்கிறதும் எட்டி எட்டி பார்க்கிறதுமா இருந்தார்.
ரெண்டு மணி இருக்கும் வேற ஒரு நர்ச் ஓடியாந்து “இங்க தனலெட்சுமி கூட யாரு வந்திருக்கீங்க”ன்னு கேட்கவும் நான் எந்திரிச்சேன் “ லேடிஸ் யாரு வந்திருக்காங்க..” உடனே எங்கம்மா எந்திரிச்சு ஓடிச்சு. கொஞ்ச நேரத்தில திரும்ப வந்து ஒயர் கூடையில இருந்த பழைய சேலையை எடுத்துட்டுப் போனிச்சு. நாங்கெல்லாம் பதட்டமா ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கிட்டோம். எங்கப்பா மறுபடி வெளியில ஓடியாந்து சூடம் வாங்கியாந்து ஆஸ்பத்திரிக்குள்ள இருந்த பூவரசு மரத்துக்கு கீழே கொளுத்திட்டு கும்பிட்டு வந்தார். சரியா ரெண்டே முக்கா இருக்கும் மணி. எங்கம்மா உள்ளருந்து சிரிச்சுகிட்டே வந்து என்னப் பார்த்து சொன்னுச்சு “ஆம்பளைப் புள்ளைடா”ன்னு.

# அப்பாவான போதுதான்
உணர்ந்தேன்
அப்பாவை.

நான் உன் அப்பா மாதிரி

நான் உன் அப்பா மாதிரி
என்று சொன்னவர்கள்
யாரும் நினைவில் இல்லை
அப்பாவின் நினைவில்

பிச்சை எடுக்கும் குழந்தைகள்

பிச்சை எடுக்கும் குழந்தைகள்
உணர்த்துகிறார்கள்
அப்பாக்களின் தோல்வியை

என் பிள்ளை முத்தமிட்ட

என்
பிள்ளை முத்தமிட்ட
எச்சிலில்
அப்பாவானேன்..

அப்பாவான போதுதான்

அப்பாவான போதுதான்
உணர்ந்தேன்
அப்பாவை

Saturday 15 June 2013

குழந்தையாக்கி விடுகின்றன


குழந்தையாக்கி விடுகின்றன
குழந்தைகள்

"மைக் செட் மணிமாறன்..."

"மைக் செட் மணிமாறன்..."

எங்க ஊரு மாதிரி கிராமத்திலெல்லாம் ஒரு பழக்கம் உண்டு. திருவிழா, கல்யாணம், புதுமனை புகுவிழா இதுமாதிரி விசேஷங்களுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே ரேடியா செட் கட்டிடுவாங்க. பெரிய கூம்புக் குழாய் வாளியில சத்தமா பாட்டு கேட்கிறது அவ்வளவு அற்புதமா இருக்கும்.
பொதுவா ரேடியோ செட் கட்டுற எல்லோருமே அடிப்படையில மிகப் பெரிய ரசனைக்காரங்களாவும், கலைஞனாகவும் இருப்பாங்க. அவங்கத்தான் ஊருக்குள்ள முதன்முதலா புதுப்பட பாடல்களை ஒலிபரப்புரவங்களா இருப்பாங்க. அதுவும் டேப்ரெக்டார்ல மக்களோட ரசனைக்கேத்த மாதிரி காதல், தத்துவம், சோகம்னு பாடல்களை பதிவுப் பண்ணி நேரத்துக்கேத்தமாதிரி போடுவாங்க.
அதுவும் கல்யாணம்னா, பெண் அழைச்சிகிட்டு போகும்போது ”புருஷன் வீட்டில் வாழப் போறப் பொண்ணே…தங்கச்சிக் கண்ணே…சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே…” என்றும், பெண் மாப்பிள்ளை வீட்டுக்கு வரும்போது “ வாராயென் தோழி வாராயோ…மணப்பந்தல் காண வாராயோ…” என்றும் டைமிங்கா பாட்டுப் போடுவாங்க.
... அதிலும் இந்த “வாராயென் தோழி…” பாட்டுல பாட்டுக்கு முன்னாடி வர்ற ”கண்ணா என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன்…அதுல நான் எப்பவும் ஆனந்த கண்ணீரைத்தான் பார்க்கனும்….”என்ற வசனம் வரும்போது எல்லா அண்ணன்மார்களும், மணப் பொண்ணும் கண்டிப்பா கண்ணீர் சிந்திடுவாங்க. இந்த ரெண்டுப் பாட்டு எல்லா ரேடியோ செட் கட்டுறவங்ககிட்டேயும் இருக்கும்.
பள்ளிக்கூடங்களில் ‘தமித்தாய் வாழ்த்து’,’நாட்டுப் பண்’ மாதிரி இது கல்யாண வீடுகளின் தேசிய கீதம். இப்படியாக மக்களின் ரசனையோடு ’ரேடியோசெட்’ கட்டுகிறவர்கள் ஊருக்குள்ள ராஜா மாதிரி இருப்பாங்க.

ரேடியோ கட்டுற அந்த ரெண்டு மூனு நாளும் பகலெல்லாம் பாட்டு போடுறவங்க இராத்திரி 9 மணி ஆச்சுன்னா கதை-வசன கேசட் போடுவாங்க. கோவில் விழான்னா அது திருவிளையாடல் கதை வசனம்தான். ஊருக்கு நடுவுல இருக்கிற ரேடியோவுல பாடுறது ஏரிக்கரை வரைக்கும் எல்லா இடத்துக்கும் கேட்கும். மக்கள் எல்லாரும் அவங்க அவங்க வாசலில் கட்டில், பாய் போட்டு படுத்துகிட்டு அப்பிடியே வகுப்பறையில் உட்காந்திருக்கிற மாதிரி படுத்துக்கிட்டே கதை-வசனம் கேட்பாங்க. பெரும்பாலும் எல்லா கிராமத்து ஜனங்களுக்கும் ‘திருவிளையாடல்’, ‘இரத்தக்கண்ணீர்’ வசனம் மனப்பாடமா தெரியும். இது இந்த ரேடியோ செட் ’மணிமாறன்’கள் செய்த வேலை.

அதுக்கப்புறம் நாங்க படிக்கிறப்ப ‘விதி’,‘ஒரு தாயின் சபதம்’,போன்ற கதை-வசனங்கள் அதிகமா போடுவாங்க. ரேடியோ செட் கட்டுறவங்க கதை – வசன கேசட்னு ஒரு செட் வச்சிருப்பாங்க. எனக்கு நினைவு தெரிஞ்சு அந்த வரிசையில் நாங்க கடைசியாக கேட்டது ‘அமைதிப் படை’. அந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு வசனமும் எங்களுக்கு அப்பிடியே மனப்பாடமாத் தெரியும். சத்யராஜ் குரலில் அதை சொல்லிப் பார்ப்பதே தனி அனுபவம். மறுநாள் பள்ளிக்கூடத்தில் அந்த வசனங்களை சொல்லி சொல்லி சிலாகிப்போம். வகுப்பில் வாத்தியாருங்க கூட இந்த மாதிரி வசனத்தைப் பேசித்தான் மாணவர்களை கட்டிப் போடுவாங்க. அது ஒரு காலம்.

இயக்குனர் மணிவன்னன் தன்னுடைய கதாபாத்திரத்தின் பெயரைப் போலவே ‘மைக் செட் மணிமாறன்’ ஆக தன்னுடைய வசனங்களாலும் நடிப்பாலும் மக்களின் வாழ்வியலோடு கலந்து விட்டார்.

# மைக் செட் மணிவன்னன் வாழ்க….

இருவருக்கும் இடையில்

இருவருக்கும் இடையில்
நுழையாதீர்கள்
அவர்கள் அழட்டும்

Friday 14 June 2013

வீடு நிறைய

வீடு நிறைய
பொம்மைகள் வாங்கி
குழந்தைகளிடம் சொன்னோம்
‘ உடைச்சிடாம விளையாடு ‘ 

Wednesday 12 June 2013

நீ செய்யும் தவறுகளைப் பார்த்துதான்

நீ செய்யும் தவறுகளைப் பார்த்துதான்
என் தவறுகளை சரியாக மாற்றுகிறேன்
நன்றி உன் தவறுகளுக்கு..!

எல்லோரும் பூக்களைப் பற்றி பேசும் போது


எல்லோரும்
பூக்களைப் பற்றி பேசும் போது - நீ
மழையைப் பற்றி பேசுவாய்..

எல்லோரும்
மழையைப் பற்றி பேசும் போது - நீ
பனித்துளிப் பற்றி பேசுவாய்..

எல்லோரும்
பனித்துளிப் பற்றி பேசும் போது - நீ
புல்வெளிப் பற்றி பேசுவாய்..

எல்லோரும்
என்னைப் பற்றி பேசும் போது - நீ
எதுவும் பேசாமல் இருக்கிறாய்.

Tuesday 11 June 2013

வச்சி வக்கங்காட்டியும்

வச்சி வக்கங்காட்டியும்
“ யாருங்க போன்ல ? “ ன்னு கேட்டா 
யாருன்னு சொல்றது ?

கல்யாணம் பண்ண புதுசுல

கல்யாணம் பண்ண புதுசுல
“ஏன் பேசவே மாட்டேங்குற..?”ன்னு
கேட்டதை
அடிக்கடி நெனச்சிக்குவேன்...

முதன் முதலாய்

முதன் முதலாய் 
எங்கே தோற்றேனென்பதைத்தான்
மறந்து விட்டேன்

என் பொய்களின் பின்னாலே வந்து

என் பொய்களின் பின்னாலே வந்து 
என் உண்மைகளை நீ உடைக்கும் பொழுது, 
என் பொய்களும் உடைந்துப் போகிறது

Monday 10 June 2013

மனைவிக்கு தெரியாமலிருக்கும்

மனைவிக்கு தெரியாமலிருக்கும்
எனது முகநூல் கணக்கின்
பாஸ்வேர்டிலும்
ஏடிஎம் அட்டையின்
பின் நெம்பரிலும்
ஒளிந்திருக்கிறது
எனக்கும்
அவளுக்குமான உறவு...

மழை

மழை
வா
குடையில் நனைவோம்

என் உள்ளாடையில்

என்
உள்ளாடையில் மிச்சமிருக்கும்
ஆற்றங்கரை மணலில்
மின்னும்
நம்
சுற்றுலா நினைவுகள்

மருந்துக்கு மயங்கி

மருந்துக்கு மயங்கி
பிள்ளைப் பிடிப்பவனின்
பின்னால் போகும்
குழந்தையைப் போல்
வந்துக் கொண்டிருக்கிறேன்
உனது பின்னால்
எனது
பழைய கவிதையொன்றை
காணவில்லை..
உன்னிடம் இருக்கிறதா ?

Sunday 9 June 2013

முதல் நாள் காய் விட்டு

முதல் நாள் காய் விட்டு
மறு நாளே பழம் விட முடிகிறது
நம் குழந்தைகளால்

கிழிசல் கால்சட்டைகளோடு

கிழிசல் கால்சட்டைகளோடு
பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு
பாடம் நடத்துகிறார்கள்
நகைக்கடை பொம்மைகளாய்
ஆசிரியைகள்...

‘சமூக நீதி’ பற்றியெல்லாம்...


பள்ளிக்கூடம் முடிந்து வரும் குழந்தைக்கு
ஆடைமாற்றி, முகம் கழுவி
தேநீர் கொடுத்து விளையாடச் சொன்னால்..
அடம் பிடித்து ‘ஜாக்கிசான்’ பார்ப்பவர்களை
மிரட்டி டியூசனுக்கு அனுப்பிவிட்டு
கிடைக்கிற நேரத்தில்
நாடகம் பார்த்துக் கொண்டிருந்தால்...
டியூசன் முடிந்து வருபவர்களுக்கு
தோசை ஊற்றி தூங்க வைத்து
நாமும் தூங்கி...
... அதிகாலை அலாரம் வைத்து எழுந்து
குளிக்க வைத்து
சீருடை அணிவித்து
பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு
துவைத்துப் போட்டு
சமைத்து சாப்பிட்டு விட்டு
குழந்தைகளுக்காக காத்திருக்கையில்...
‘சமூக நீதி’ பற்றியெல்லாம்
யாராவது பேசிக் கொண்டால்
எனக்கொரு ஈ-மெயில் அனுப்புங்கள்
நேரமிருந்தால் திறந்து பார்க்கிறேன்.

Friday 7 June 2013

எம் தந்தையே எப்போது வருவாய்…



எம் தந்தையே எப்போது வருவாய்…

நீ
நட்டு வைத்த முந்திரிகள்
காய்க்க மறந்து கண்ணீர் வடிக்கின்றன…

நீ
நடந்து பழகிய இந்த மண்
பிளந்து கதறுகிறது…

நீ
கம்பீரமாய் அமர்ந்த நாற்காலியை
மகிழ்வோடு தூக்கித் திரிந்தோம்…

நீ
கால்நீட்டி படுத்த சவத்தை
தோள்களில் சுமந்தப் போதுதான்
இதயம் கணத்தோம்…

நீ
கட்டிய வேட்டியின் சரசரப்பு சத்தத்தை
உன்
கோடித் துணியின் மெளனம் நசுக்குகிறது…

நீ
உடலோடு பூசிய சந்தனத்தின் வாசம் மறைந்து
ஊதுவத்திகளின் மணம் நெஞ்சை அடைக்கிறது…

காற்றின் பக்கமெல்லாம் தீ பரவச் செய்த
உன்
கரகர குரலின்றி
மயானக் காடாய் மெளனித்து கிடக்கிறது
இந்த மண்…

உன்
இறுதி ஊர்வல பாதையெங்கும்
மரங்கள் இலைகளை உதிர்த்தன….

நீ
குதப்பிய துப்பிய வெற்றிலை எச்சிலில்
நிறமெடுத்த ரோஜாக்கள்
உன்
மரணச் செய்திக் கேட்டு
எருக்கம் பூக்களாகி விட்டன….

உன்
மரணத்தை அறிவிக்க சுனாமி வந்தது
சுனாமிக்கு நிதியாய் இருபத்தைந்த்தாயிரம் கொடுத்தோம்
உனக்கு திதியாய் இரண்டாயிரம் இதயங்களையும் இழந்தோம்…

உன்
சிதைக்கு தீமூட்டிவிட்டு திரும்பி பார்க்கிறோம்
ஊரே இருள் மண்டிக் கிடக்கிறது…

எங்கள்
தீபங்களுக்கு ஒளியேற்ற
எம் தந்தையே
எப்போது வருவாய்…?

( மீனாட்சி இராமசாமி கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் உயர்திரு.இராமசாமி அவர்கள் மறைந்த போது எழுதி நினைவுமலரில் வெளிவந்தது )

பாட்டு என்னத்த படிக்கிறது...



பாட்டு என்னத்த படிக்கிறது...

படிக்காத மூளி என்னைய
பாட்டுப் படிக்கச் சொன்னா
பாட்டு என்னத்த படிக்கிறது… ?
பாட்டுல சங்கதின்னு
என்னத்த சொல்லுறது…?

வேவாத வெயில்ல வரிசையில நின்னு
சுசேட்டு அரிசி வாங்கிட்டு
கிறுகிறுன்னு வருதுன்னு
பண்ணக்காரன் திண்ணையில் உக்காந்ததுக்கு
செருப்படி வாங்கின மானம் தாங்காம
நானுகிட்டு செத்தாரே எங்கப்பன்
அவரு தொங்கின கயிறு இருக்கு
அத தரட்டா...?

பருத்திக் காட்டுப் பக்கத்துல
கோணான் கொல்ல வரப்புல
ஆடு மேய்ச்சிட்டன்னு
பஞ்சாயத்துல கும்புட வைச்சு
என் மயிர அறுத்து வுட்டானுவுளே
மிச்ச மயிறு கொஞ்சம் இருக்கு
அத தரட்டா… ?

நாயக்கன் காட்டுக்கு
கரும்பு வெட்டப் போனப்ப
பம்புசெட்டு ரூமுல வச்சு
என் தங்கச்சிய கெடுத்த மறுமாசம்
வீட்டுக்கு தூரமாவுலன்னு
செட்டிக்குளத்துல போயி
கலைச்சிட்டு வந்த
சீட்டத்துணி இருக்கு
அத தரட்டா…?

வேல செய்ய காணியும் இல்லாம
ஆக்கித் திங்க ஏனமும் இல்லாம
அன்னாடம் எம்பொளப்பு சிரிக்குது
இதுல பாட்டுன்னு என்னத்த படிக்கிறது…?

மூத்திரச் சுவர்

மூத்திரச் சுவர்





       ஆதிக்க திமிர்
சாதியைச் சொல்லி
சுவர்களை எழுப்பும்

       கொஞ்சம் இடித்தாலும்
கோபித்துக் கொண்டு
மலைகளில் குடியேறும்

       ஆண்டைகளை
மீண்டும் வரச் சொல்லி
அரசாங்கம் தூதனுப்பும்

       சுவர்களின் காயங்களுக்கு
சப்பு கொட்டிக் கொண்டே
சமரசம் நிறைவேறும்

       மீண்டும் எழும்பிய
மிச்ச சுவற்றில்
இங்கும் அங்கும்
மூத்திரம் பேய்ந்து குரைக்கும்
ஏதுமறியாத தெருநாய்.

( உத்தமப்புரம் தீண்டாமைச்சுவர் பிரச்சனையின் போது எழுதியது )