Friday 26 April 2013



அம்மாவும் கோழியும்
                 

வலதுகாலை மடக்கி
இடதுகாலை நீட்டி
திருவையில் வரகு அரைக்கிற
அம்மாவின் தோளிலும் தொடையிலும்
பயமின்றி ஏறிவிளையாடும்
கோழிக்குஞ்சுகள்

அம்மாவும் கோழிகளைப் போலத்தான்

”அடுப்புக்கிட்ட போகாத”
“கொளம்புசட்டிய ஊத்தாத”
”ச்சூ வெளியிலபோயி  மேயி”
எதையாவது கோழிகளோடு
பேசிக் கொண்டுத் தாணிருப்பாள்

வெளியூருக்குப்  போனால்
மறக்காமல் சொல்லிவிட்டுப் போவாள்
“இருட்டுறதுக்கு முன்னாடி
கோழியை பிடிச்சு
கொடாப்புல அடைச்சு வை”

திண்ணையில்
அரிசி புடைத்து கொண்டிருந்த
அம்மாவின் கால்களின் கீழே
மேய்ந்த குஞ்சுகளை
தூக்க வந்த பருந்துகளை விரட்ட
அரிசியோடு முறத்தை வீசியதில்
குஞ்சுகளை போட்டுவிட்டு
பறந்தோடும் பருந்துகள்

மகளோ மருமகனோ
விசேத்துக்கு வந்து விட்டால்
வாசலில் மேயும் கோழியை
தலையை பிடித்து
சுடுதண்ணீர் சொம்பில்
கவிழ்த்து விடுவாள்

மழைக்கு பயந்து
தகர கதவை தாண்டி
வீட்டுக்குள் வரும்
கோழிகளையும் குஞ்சுகளையும்
பக்கத்திலேயே வைத்து படுத்துறங்குவாள்

குஞ்சுகள் கோழியின் சிறகிலும்
கோழி அம்மாவின் சேலையிலும்
கண்ணுறங்கும்



பாத்திரம் விளக்கி ஊற்றிய தண்ணீரில்
கோம்பு கருவேப்பிலை
கொத்தவரும் கோழியை பிடித்து
புட்டிய போட்டு மூடி வைச்சா
காட்டுக்கு போறதுக்கு முன்னால்
முட்டை போட்டு விடும்

மறந்த நாட்களில்
விட்டத்தில் ஏறி
சாமி போட்டா பின்னாடி
போட்ட முட்டைகள்
அம்மாசிக்கு அப்பா
பொட்டு வைப்பதற்காக அழுத்துகையில்
விபூதி தட்டுகளில்
விழுந்து விடும்

பள்ளிக்கூடம் போன பிள்ளைகள்
இடைவேளைகளில்
தண்ணீர் குடிக்க வந்தால்
பச்ச முட்டையை
விரலால் தட்டி ஓடு உடைத்து
அப்படியே குடிக்கத் தருவாள்

புட்டியில் வைக்கோல் பரப்பி
முட்டைகளை வைத்து
அடைக்கு வைக்கிற
இருபத்தியோரு நாட்களும்
திறந்து திறந்து பார்ப்பாள்

ஒரே சமயத்தில்
பதினான்கு குஞ்சுகள் பொரித்த
அந்த வருஷத்தில் தான்
அம்மாவும் முழுகாம இருந்தாள்
எனது தம்பிக்காக

குப்பைமேடு சாக்கடை
வெட்டிக்காடு
எங்கு சென்றாலும்
குஞ்சுகளோடுதான்  கோழிகள் செல்லும்
அம்மாவைப் போலவே

அம்மாவைப் பார்த்துதான்
கற்றுக் கொண்டதோ கோழிகள்
குஞ்சுகளை இறகில் மூடுவதை.

                    .

No comments:

Post a Comment