Wednesday 8 May 2013



திருவிழாவில் தொலைந்தவர்கள்     .  ப. செல்வகுமார்

எல்லா வருஷம் மாதிரியே
இந்த வருஷமும் வந்தது
காட்டு மாரியம்மனுக்கு திருவிழா

பூ அலங்காரம்
பல்லக்கில் பவணி
தேர் ஊர்வலம்
குறையொன்றுமில்லை
மாரியம்மனுக்கு...

முந்தின வருஷத்து
வடு மாறாமலே
அலகு குத்தி வரும்
கருப்பையாவுக்கு
கூட்டத்தைப் பார்த்ததும்
அருள் வந்து விடுகிறது
சடசட வென்று…

ஏரோப்ளேன் அலகில்
தலைகீழாய் வரும்
முருகேசனுக்கு வாய்த்திருக்கிறது
அந்தரத்தில் பறக்க…….

வெட்டுண்ட கிடாய்களின்
ரத்தத்தின் மேல்
கொடுவாளோடு நிற்கும்
முருகையனுக்கு
இன்றைக்கு மட்டும்
சாமி மரியாதை…

முறம் போல் விரித்த
முந்தாணையில்..
ம்ஹீம்.. ம்ஹீம் என
சாமியாடி வரும்
தாண்டாயி கிழவிக்கு
இப்போதும்
ஒரு குடம் தண்ணீரும்
ஒரு பிடி விபூதியும்தான்…

ஊக்கோடு குத்தப்பட்ட
ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை
அடவுகளை கூட்டியது
காவடியாடும் ஜெயராமனுக்கு…

அக்னிச்சட்டி ஏந்தி வரும்
வள்ளியம்மைக்கு
வேறொன்றும் வாய்ப்பதில்லை
கட்டிய
மஞ்சள் சேலையைத் தவிர….

அங்கப்பிரதட்சணம் செய்து
கோவிலை சுற்றுபவர்களின்
முழங்காலுக்கு மேலேறிய
பாவடைகளை சரிசெய்யும்
தோழியர்களின் பார்வைகளோடு
சேர்ந்து சிவக்கும்
கோவிலின் புனிதம்… 

மஞ்சள் நீராடியும்
மறையவில்லை
கடன் கொடுத்தவன் துப்பிய
எச்சில் கரி…

மூனுசீட்டுக் காரனையும்
தாலிசெயின் அறுப்பவனையும்
பிள்ளைப் பிடிப்பவனையும்
கடந்து செல்கிறபோதும்
மெளனமாகவேயிருக்கிறாள்
மாகாளி
சூலாயுதத்தோடு…… 

மேலும் கீழுமாய்
சுற்றி சுற்றி வரும்
ராட்டினம் மட்டும்
சொல்லிக் கொண்டேயிருக்கிறது
வாழ்வின் சூட்சமங்களை….

“ ம்ம்ம்ம் சொல்லு……
என்ன்னா கொற வச்சோம்…? ”
அதட்டலோடு கேட்கும்
பூசாரிக்கு தெரிந்தே இருக்கிறது
தெய்வங்கள்
நம் குறைகளை தீர்க்க வருவதில்லையென்று.


1 comment: