Friday 10 May 2013



ஒரு மழை வந்துப் போகவேண்டும்          n     செல்வகுமார்

குந்தாணிகள்
தெருவோரத்து கல்தெய்வம்

அம்மி குளவிகளின்
ஆண்டை

தலைமுறைகளைத் தாண்டியும்
நகர்ந்து வரும்
காலக் கடைசல்

மின்கம்பங்களுக்கு அருகமர்ந்த
கல்கம்பங்கள்

’நெல்லுகுத்த வக்கில்ல’ என்பதாக
பெண்ணளக்கும்
கல்தராசு

உலக்கைகளோடு உறவாடி
நெல்லை அரிசியாக்கும்
கல்குழி

திருவிழா நாட்களில்
அரிசி குத்தும் பெண்களிடம்
வாய் நிறைய வழியும் மாவோடு
கதைகேட்கும்
கல்மழலை

குந்தாணியோடு கட்டப்பட்ட மாடுகள்
குந்தாணியிலேயே தவிடுண்ணும்

தவுடு கரைத்த கழிநீரில்
மூக்கணாங்கயிறு தாண்டி
மூழ்கிய மாடுகளின் 
மூச்சிரைக்கும் குமிழிகள் மேல்வந்து
குந்தாணிக்குள் கொப்பளிக்கும்

குந்தாணிச் சுவற்றில் ஒட்டியிருக்கும்
மிச்சத் தவிடுகளை
நக்கித் திண்ணும் மாடுகளின்
நாக்கில் சொட்டும் ஈரங்களில்
வெட்கி குளிக்கும்

புளியிடிக்கும் பொழுதினில்
கொட்டைகள் ஏறி விளையாடும்
கல் பள்ளத்தாக்கு

குந்தாணியில் அமருவதென்பது
குலப்பெருமை

குந்தாணிகள் தேக்கிக் கொள்ளும்
ஒரு குடம்கொள்ளும்
மழைநீரை

மிளகாய் குத்திய
குந்தாணியில் அமர்வதற்கு
ஒரு மழை
வந்துப் போக வேண்டும்

குந்தாணிகளுக்கு அடியில் இருக்கிற
தேள்களுக்குத் தெரியும்
குந்தாணிகள்
நகர்ந்து செல்லாதவைகளென்று.



No comments:

Post a Comment