Monday 14 October 2013

என் வார்த்தைகளை வரச் சொன்னாயா ?

கடந்த 13.10.2013 அன்று நடைபெற்ற பெரம்பலூர் பதியம் இலக்கியச் சங்கமத்தில் நடைபெற்ற கவிதை வாசிப்பில் நான் வாசித்த கவிதை.

எது சிலாகிக்க
என்னை கவிதை எழுதி வரச் சொல்லி
அழைப்பு விடுத்தாய் ?

ஆமாம்சாமி போட்டு குப்புறக் கவிழ்ந்து
எதன் போதும் நிமிர்ந்து சிலிர்த்துடாது
குனிந்தே கிடக்கும் உன் தலையை
துடைத்து தூக்கி கிரீடம் சூட்ட – என்
வார்த்தைகளை வரச் சொன்னாயா ?

பதுங்கி மெல்ல நகரும் பூனையைப் போல்
அதர்மங்களின் பாதையில் அரவமின்றி
இமைமூடி நடக்கிற உன் கண்களுக்கு
பீலி கோர்த்து சாமரம் வீச
அவிழ்த்துப் போட்ட அம்மணமாய் – என் கவிதைகளை
ஆடைகளின்றி வரச் சொன்னாயா ?

ரேகைகள் அழிய ரூபாய் நோட்டுக்களை
எண்ணிக் களைத்து குவிந்து சூம்பிப் போய்
லஞ்ச சீழ்ப்பிடித்த உன் கைகளின் விரல்களில்
வெளிறிப் போன குஷ்டங்களை மறைக்க
கணையாழிப் போல் சூடிக் கொள்ள – என்
வார்த்தைகளை வரச் சொன்னாயா ?

நேர்மையின் பாதையில் சிறுநடையும் பயிலாது
அருவருப்பின் மலங்களின் மீதமர்ந்த
தொடைகளை தாங்கி நிற்கும்
கழிப்பறையின் நிலையொத்த உன் கால்களுக்கு
பரதனின் பாவணையோடு பாதுகை சூட – என்
வார்த்தைகளை வரச் சொன்னாயா ?

கோவில் திருவிழாவில் கவளங்களை உள்வாங்கும்
யாசக யாணையைப் போன்று
ஆவணங்கள் தொலைந்துப் போகும்
வழிப்பறியின் நெடும்பாதையிலும்
மழலைகளை வன்புனர்ந்து
முலைகளை அறுத்தெரிந்த போர்க்களத்திலும்
தொண்டைச் செருமி இருமாத உன் வாய்களுக்கு
வெண்ணெய் பூசி களிப்பூட்ட – என்
வார்த்தைகளை வரச் சொன்னாயா ? 

எரியூட்டப்பட்ட குடிசைகளின் உள்ளிருந்து
மரணமேறிய காயங்களோடு கதறிய போதும்
சீருடைகளோடு பள்ளிக்கனுப்பி கரிக்கட்டைகளாய் வெந்துப் போன
மலர்களை நெஞ்சில் தாங்கி வெடித்து விம்மிய போதும்
அசைவற்ற எருமையின் தோலொத்த உன் செவிகளுக்கு
ஆனந்த யாழெடுத்து மீட்ட – என்
வார்த்தைகளை வரச் சொன்னாயா ?

கொத்துக் குண்டுகளால் நிலைக் குலைந்து
பிய்த்துதெறித்து சிதறிய செஞ்சோலை கறித்துண்டுகள் பட்டும்
எல்லைகளில் புகுந்தும் நாணயங்களை வீழ்த்தியும்
காறித் துப்பிய எச்சில் முகத்தில் வழிந்தபோதிலும்
குந்திச் சாத்திய சவத்தையொத்த உன் உடலுக்கு
வாகை மலர்களை சூட – என்
வார்த்தைகளை வரச் சொன்னாயா ?

பிணமானாய் என்று சேதியனுப்பு
அஞ்சலிக் கவிதை அனுப்பி வைக்கிறேன்.
நன்றி.



6 comments:

  1. கவிதை கர்ஜனை தோழர்... வாழ்த்துக்கள் எனது முகநூலில் பகிர்ந்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. வணக்கம்
    உணர்வுகளின் மேலீட்டால் உதிர்ந்த நெருப்பு துளிகள்.அருமை.

    ReplyDelete
  3. ஆகா ஏன் இந்த இணைப்பை எப்.பியில் தரவில்லை..
    வருத்தங்கள் ....
    இனி தொடர்வேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி Mathu Kasthuri Rengan..

      Delete