Wednesday 2 October 2013

காந்தி ஜெயந்தியும் கள்ளுண்ணாமையும்

காந்தி ஜெயந்தியும் கள்ளுண்ணாமையும்

காந்தி பிறந்த நினைவாக அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து கொண்டாடுகிறது. அவர் வலியுறுத்திய மது விலக்குப் பற்றிய எந்த முடிவும் எடுக்க அரசு துணியாது. தெருவெங்கும் டாஸ்மாக்குகளின் வழியே நடந்துக் கொண்டு எனக்கும் கூட அதை வலியுறுத்துவது ஒரு மிகையான தத்துவச் சொல்லாடலாக தெரிகிறது.

ஆயினும் வள்ளுவர் சொல்லிய கள்ளுண்ணாமை அதிகாரத்தின் குறள்களை இங்கு எடுத்துப் பதிய முனைகிறேன். கள்ளுண்ணாமை அதிகாரம் – 93, பொருட்பால்.

921.   உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்
      கள்காதல் கொண்டுஒழுகு வார்.

பொருள் : மதுவின் மீது ஆசைக் கொண்ட ஒருவரைக் கண்டு எதிரிகள் கூட பயப்பட மாட்டார். அவரது முன்னோர்கள் சேர்த்த புகழையும் இழப்பார்.

922.   உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான்
      எண்ணப் படவேண்டா தார்.

பொருள் : சாண்றோர்களால் தான் மதிக்கப் படவேண்டாம் என்று நினைப்பவர்கள் மட்டுமே மது அருந்துவர்.மற்றவர்கள் தவிர்ப்பர்.

923.   ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
      சான்றோர் முகத்துக் களி.

பொருள் : எதுசெய்தும் பொறுக்கும் பெற்றவள் முன்னால் கூட மது அருந்தக் கூடாது எனும்போது சான்றோர் முன் செய்வது தவறு.

924.   நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்என்னும்
      பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

பொருள் : மது அருந்துபவர்களை புகழ் எனும் நல்லாள் பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொள்வாள்.

925.   கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

பொருள் : தன் பொருளைக் கொடுத்து உடலை மறக்க செய்ய மது அருந்துதல், தன் செயல்களால் தனக்கே பழி ஏற்படுத்துதலாகும்.

926.   துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்
      நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

பொருள் : தூங்குபவர்கள் எப்படி இறந்தவர்க்ளுக்கு ஒப்பாவாரோ அதுபோல மது அருந்துபவர்கள் விஷம் குடிப்பவர்களுக்கு ஒப்பாவார்.

927.   உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
      கள்ஒற்றிக் கண்சாய் பவர்.

பொருள் : மறைந்துச் சென்று மது அருந்தி மயங்குபவர்களின் நிலையை உள்ளூரில் காண்பவர்கள் அவர்கள் மறைந்துச் செல்வதைக் கண்டு எள்ளி நகையாடுவர்.

928.   களித்துஅறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

பொருள் : மதுஅருந்தியதே இல்லை என்று பொய்சொல்வீர்கள் எனில் அந்தப் பொய் நெஞ்சில் இருந்து உங்களை அறியாமலே வெளிப்படும்.

929.   களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்க்
      குளித்தானைக் தீத்துரீஇ யற்று.

பொருள் : போதையில் இருக்கும் ஒருவனிடம் புத்திமதி சொல்வது என்பது தண்ணீரில் தொலந்தவனை விளக்கு கொண்டு தேடுவது போன்றது.

930.   கள்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

பொருள் : குடிகாரன் ஒருவன் மது அருந்தாத போது குடித்திருப்பவனைக் கண்டால் ‘நாமும் இப்பிடித்தான் இருப்போமா ?’ என்று நினைத்து கலக்கமுறுவான்.

**

No comments:

Post a Comment