Sunday 16 June 2013

அப்பாவான போது… அன்னைக்கு வியாழக்கிழமைன்னு

அப்பாவான போது…

அன்னைக்கு வியாழக்கிழமைன்னு நினைக்கிறேன். பள்ளிக்கூடம் போயிட்டு வீட்ல வந்துப் பார்த்தா அவங்கள காணோம். அப்ப நான் வீரகனூர் பள்ளிக்கூடத்தில டெம்ப்ரவரியா வேலைக்குப் போயிக்கிட்டிருந்தேன்.அப்பா, அம்மா, தம்பி யாரையுமே காணோம். வீடு வேறு பூட்டியிருந்துச்சு. முன்னாடி வீட்ல கல்யாணி சின்னம்மாவைக் கேட்டதுக்கு, ” அந்தப் புள்ளைக்கு வயித்து வலி வந்துருச்சாம் அதான் உங்கப்பா, அம்மா எல்லாரும் கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்க…” முழுதாக கேட்டு முடிக்கும் முன்பே பேருந்துக்காக ஓட்டமெடுத்தேன்.
அதுக்கப்புறம் அரைமணி நேரம் கழிச்சுத்தான் டவுன்பஸ் வந்திச்சு. பஸ்ல ஏரி அடிச்சி புடிச்சி ஆஸ்பத்திரிக்குப் போனா, எங்க இருப்பாங்கன்னு வேற தெரியல. ஓபி சீட்டு கொடுக்குற இடமெல்லாம் சாத்திக் கெடந்துச்சி. அப்புறம் ஒருத்தர்கிட்ட கேட்டு பின்னாடி பிரசவ வார்டுப் பக்கம் போய் பார்த்தா..அங்க இவ எங்கம்மா மடியில படுத்துக்கிட்டு அம்மா..அம்மான்னு கத்திக்கிட்டு இருக்கா. மணி நாலு நாலரை இருக்கும் ‘எத்தனை மணிக்கும்மா வந்தீங்க ?’ எங்கம்மாக்கிட்ட கேட்டேன். ரெண்டரைக்கே வந்துட்டதா சொன்னுச்சு. எங்கப்பாவைத் தேடினேன் அவரு ஒரு ஓரமா ஒரு வேப்பமரத்துக்கு கீழ ஒக்காந்து கிட்டு சின்ன குச்சியை எடுத்து தரையில குத்திக்கிட்டு இருக்காரு. எனக்கு என்னப் பன்றதுன்னு தெரியல. அவ பக்கத்தில போய் ‘ ஏ…வலிக்குதா.?’ ன்னு கேட்டேன். அவ்வளவு வலியிலயும் அழுவுறத நிறுத்திட்டு ‘ம்ம்ஹீம்…’ அப்பிடின்னு மொறச்சா. நான் பேசாம எங்கம்மா பக்கத்தில போய் உட்காந்துக்கிட்டேன்.
அப்புறம் யாரோ சொன்னாங்கன்னு அங்க இங்கன்னு ஆஸ்பத்திரியே நடந்தா. நானும் என்னப் பன்றதுன்னு தெரியாம டீ குடிக்கப் போறதும் வாரதுமா இருந்தேன். நேரம் ஆக ஆக எனக்கு ஒன்னும் புரியல. எங்கப்பா முகத்தைப் பார்த்தேன், அவரு புரிஞ்சமாதிரி ‘இந்தா அந்தால ரூமுல கத்திக்கிட்டிருக்கே. எளம்பலூராம். வந்து ரெண்டு நாளாச்சாம். இன்னும் ஒன்னும் ஆவல”ன்னு சொல்லிட்டு மறுபடி வேப்ப மரத்தில சாய்ஞ்சிக்கிட்டாரு. எனக்கு இன்னும் ரெண்டு நாளாவுமோன்னு வேற ஒரு மாதிரியாயிருச்சி.
இருட்ட ஆரம்பிச்சவுடன்னே எங்கம்மா ”ஏம்ப்பா…நீ போய் சாப்பிட்டு..அப்பிடியே இந்தப் புள்ளக்கும் ஏதாவது வாங்கியா”ன்னு முடிக்கிறதுக்குள்ள எங்கப்பா “ஆமா அவந்தான் வாங்கியாருவான்…நீ இருப்பா நான் வாங்கியார”ன்னு பதிலுக்கு காத்திராமல் கடைக்கு கிளம்பிட்டார். அப்புறம் கொஞ்சம் நேரத்தில ஒரு கேரி பேக் நெறையா பார்சல் வாங்கியாந்தார். முதல்ல அவள சாப்பிடச் சொன்னாங்க…அவ ரெண்டு மூனு இட்லிக்கு மேல திங்க முடியலன்னுட்டா. எங்கம்மா ஏங்கிட்ட “நீ போய் சாப்பிட்டு படுத்துக்கன்னு” சொன்னவுடனே நான் அவளப்பார்த்து “ நான் சாப்பிட்டா”ன்னு கேட்டேன். அவ எங்கம்மாவை ஒரு பார்வைப் பார்த்துட்டு என்னை ஒரு முறைப்பு முறைச்சா. நான் கொஞ்ச நேரம் அப்பிடியே நின்னுகிட்டு இருந்துட்டு அப்புறமா எந்திருச்சிப் போய் பையிலிருந்த நாலு பரோட்டாவைப் சாப்பிட்டுட்டு ஆஸ்பத்திரிக்குள்ள ஒரு கோயில் இருக்கு. அதுக்கு பக்கத்தில இருந்த மணலிலே, கையில வச்சிருந்த மாலைமுரசு பேப்பரை விரிச்சுப் போட்டுப் படுத்துட்டேன். அப்புறம் எப்பத் தூங்கினேன்னு தெரியல.
“ஏ…எப்பா எந்திரி..எந்திரி…” அப்பா சத்தத்தை கேட்டு கண்ணைக் கசக்கி வாட்சைப் பார்த்தேன் மணி 6.30.
‘என்னப்பா..’
”எப்பா…சீக்கிரம் எந்திரி… இங்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. திருச்சிக்குத்தான் போவனுமாம். ஒங்கம்மா ஒன்னுகுட போயிருக்கா. அவ வந்தவுடனே கெளம்பனும்…நான் போய் பிளசர் பேசிட்டு வந்துரேன்..”
ஒன்னும் புரியாம அவுந்துருந்த கையிலியைக் கட்டிட்டு அவளைத் தேடினேன். அவ வயித்தைப் பிடிச்சுக்கிட்டு இங்கிட்டும் அங்கிட்டும் நடந்துகிட்டுருந்தா. நான் எந்திரிச்சி மூஞ்சை கழுவிக்கிட்டு வர்றதுக்குள்ள எங்கம்மாவும் வந்திருச்சி. ரெண்டு பழைய சேலை, ஒரு கூடைப் பை , வாட்டர் கேன் எல்லாம் எடுத்து வச்சிகிட்டு ரெடியாவுறதுக்கும் கொஞ்ச நேரத்தில கார் வர்றதுக்கும் சரியா இருந்திச்சு. கார்ல நானு, அதுக்கப்புறம் அவ, எங்கம்மா மூனு பேரும் பின்னாடி ஒக்காந்துகிட்டோம். எங்கப்பா , அவளோட அண்ணன் அவ்வளவுத்தான். கார் கெளம்பிடுச்சு. சிறுவாச்சூர்ல ஆரம்பிச்சு போற வழி நெடுவுலயும் எங்கப்பா கையை நீட்டி நீட்டி கும்பிட்டுகிட்டே வந்தார்.
திருச்சி கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில கார் உள்ளப்போகும் போது கரெக்டா மணி 11. இறங்கிடன கொஞ்ச நேரத்தில ஸ்ட்ரெச்சர் வந்துச்சு. அங்கருந்து கொடுத்தூட்ட சீட்டு இருக்கானு கேட்டாங்க. எங்கப்பா அண்ட்ராயர்ல இருந்து எடுத்துக் கொடுத்தார். சீட்ட வாங்கிட்டு ஸ்ட்ரெச்சர்ல அவளைப் படுக்கப் போட்டு இழுத்துக்கிட்டு ஒரு ரூமுக்குள்ளப் போனாங்க. கொஞ்ச நேரத்தில ஒரு நர்ச் வந்து ‘அந்த அம்மா வீட்டுக்காரர் யாருன்னு’ கேட்டவுடனே நான் அந்த ரூமுக்குள்ள போனேன். ஒரு விண்ணப்பத்தில கையெழுத்துக் கேட்டாங்க. நான் எதுக்குன்னு கேட்டேன். முறைச்சாங்க. நான் பேசாம போட்டுடேன். கையெழுத்துப் போடும்போது அவளை ஒரு தரம் பார்த்தேன். அவ கண்ணெல்லாம் வெளுத்துப் போயி ‘ஙே’ன்னு இருந்தா.
கையெழுத்து போட்டதுக்கப்புறம் ஸ்ட்ரெச்சரை இழுத்துக்கிட்டு ரூமுலருந்து வெளிய வந்து பிரசவ வார்டு இருக்குற பக்கம் இழுத்துட்டுப் போய்ட்டாங்க. ஏதோ சினிமாவுல பார்க்குற மாதிரி நான் பார்த்துக்கிட்டே இருந்தேன். பத்து நிமிஷம் இருக்கும் ஒரு நர்ச் ஒடி வந்து வராண்டாவில நின்னுகிட்டு ‘இங்க யாரு தனலெட்சுமி வீட்டுக்காரர்’னு கேட்டதும் நான் போய் ‘நாந்தான்’னு சொன்னேன். ”உங்க வொய்ப் காபி வாங்கிட்டு வரச் சொன்னாங்க..”ன்னு சொல்லவும் நான் கையிலியை மடிச்சி கட்டிகிட்டு ஓடப் போனவனை நர்ச் மறுபடியும் கூப்பிட்டு ‘அப்பிடியே ரெண்டு கரும்புச்சாறு வாங்கியாங்க’ன்னாங்க. நான் “ அவளுக்கு கரும்புசாறு புடிக்காது..”ன்னேன். நர்ச் விடாம “ கரும்புச்சாறு எங்களுக்கு”ன்னாங்க. நான் ஒன்னும் பேசாம ஓடிப் போய் வாங்கியாந்து கொடுத்துட்டு வராண்டாவுல ஒரு ஒரமா நின்னுகிட்டேன். பின்னாடி ஒரு நாள் அவகிட்ட கேட்டேன் “ உனக்கு அவ்வளவு வலியிலயும் காபி கேட்குதா..?” அதுக்கு அவ சொன்னாள் “அப்பிடியேத்தான் வாங்கியாந்து நீட்டிப்புட்ட…” நான் ஒன்னும் பேசலை.
நாங்கெல்லாம் அப்பிடியே அந்த வராண்டாவுல உட்காந்துட்டோம். எங்கப்பாத்தான் இங்கிட்டும் அங்கிட்டும் நடக்கிறதும் எட்டி எட்டி பார்க்கிறதுமா இருந்தார்.
ரெண்டு மணி இருக்கும் வேற ஒரு நர்ச் ஓடியாந்து “இங்க தனலெட்சுமி கூட யாரு வந்திருக்கீங்க”ன்னு கேட்கவும் நான் எந்திரிச்சேன் “ லேடிஸ் யாரு வந்திருக்காங்க..” உடனே எங்கம்மா எந்திரிச்சு ஓடிச்சு. கொஞ்ச நேரத்தில திரும்ப வந்து ஒயர் கூடையில இருந்த பழைய சேலையை எடுத்துட்டுப் போனிச்சு. நாங்கெல்லாம் பதட்டமா ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கிட்டோம். எங்கப்பா மறுபடி வெளியில ஓடியாந்து சூடம் வாங்கியாந்து ஆஸ்பத்திரிக்குள்ள இருந்த பூவரசு மரத்துக்கு கீழே கொளுத்திட்டு கும்பிட்டு வந்தார். சரியா ரெண்டே முக்கா இருக்கும் மணி. எங்கம்மா உள்ளருந்து சிரிச்சுகிட்டே வந்து என்னப் பார்த்து சொன்னுச்சு “ஆம்பளைப் புள்ளைடா”ன்னு.

# அப்பாவான போதுதான்
உணர்ந்தேன்
அப்பாவை.

2 comments:

  1. என்ன செல்வக்குமார் சார் எழுத்துல பின்றீங்க

    ReplyDelete
  2. என் பிளாக் ம் பாருங்க
    http://swthiumkavithaium.blogspot.com/

    ReplyDelete