Saturday 15 June 2013

"மைக் செட் மணிமாறன்..."

"மைக் செட் மணிமாறன்..."

எங்க ஊரு மாதிரி கிராமத்திலெல்லாம் ஒரு பழக்கம் உண்டு. திருவிழா, கல்யாணம், புதுமனை புகுவிழா இதுமாதிரி விசேஷங்களுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே ரேடியா செட் கட்டிடுவாங்க. பெரிய கூம்புக் குழாய் வாளியில சத்தமா பாட்டு கேட்கிறது அவ்வளவு அற்புதமா இருக்கும்.
பொதுவா ரேடியோ செட் கட்டுற எல்லோருமே அடிப்படையில மிகப் பெரிய ரசனைக்காரங்களாவும், கலைஞனாகவும் இருப்பாங்க. அவங்கத்தான் ஊருக்குள்ள முதன்முதலா புதுப்பட பாடல்களை ஒலிபரப்புரவங்களா இருப்பாங்க. அதுவும் டேப்ரெக்டார்ல மக்களோட ரசனைக்கேத்த மாதிரி காதல், தத்துவம், சோகம்னு பாடல்களை பதிவுப் பண்ணி நேரத்துக்கேத்தமாதிரி போடுவாங்க.
அதுவும் கல்யாணம்னா, பெண் அழைச்சிகிட்டு போகும்போது ”புருஷன் வீட்டில் வாழப் போறப் பொண்ணே…தங்கச்சிக் கண்ணே…சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே…” என்றும், பெண் மாப்பிள்ளை வீட்டுக்கு வரும்போது “ வாராயென் தோழி வாராயோ…மணப்பந்தல் காண வாராயோ…” என்றும் டைமிங்கா பாட்டுப் போடுவாங்க.
... அதிலும் இந்த “வாராயென் தோழி…” பாட்டுல பாட்டுக்கு முன்னாடி வர்ற ”கண்ணா என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன்…அதுல நான் எப்பவும் ஆனந்த கண்ணீரைத்தான் பார்க்கனும்….”என்ற வசனம் வரும்போது எல்லா அண்ணன்மார்களும், மணப் பொண்ணும் கண்டிப்பா கண்ணீர் சிந்திடுவாங்க. இந்த ரெண்டுப் பாட்டு எல்லா ரேடியோ செட் கட்டுறவங்ககிட்டேயும் இருக்கும்.
பள்ளிக்கூடங்களில் ‘தமித்தாய் வாழ்த்து’,’நாட்டுப் பண்’ மாதிரி இது கல்யாண வீடுகளின் தேசிய கீதம். இப்படியாக மக்களின் ரசனையோடு ’ரேடியோசெட்’ கட்டுகிறவர்கள் ஊருக்குள்ள ராஜா மாதிரி இருப்பாங்க.

ரேடியோ கட்டுற அந்த ரெண்டு மூனு நாளும் பகலெல்லாம் பாட்டு போடுறவங்க இராத்திரி 9 மணி ஆச்சுன்னா கதை-வசன கேசட் போடுவாங்க. கோவில் விழான்னா அது திருவிளையாடல் கதை வசனம்தான். ஊருக்கு நடுவுல இருக்கிற ரேடியோவுல பாடுறது ஏரிக்கரை வரைக்கும் எல்லா இடத்துக்கும் கேட்கும். மக்கள் எல்லாரும் அவங்க அவங்க வாசலில் கட்டில், பாய் போட்டு படுத்துகிட்டு அப்பிடியே வகுப்பறையில் உட்காந்திருக்கிற மாதிரி படுத்துக்கிட்டே கதை-வசனம் கேட்பாங்க. பெரும்பாலும் எல்லா கிராமத்து ஜனங்களுக்கும் ‘திருவிளையாடல்’, ‘இரத்தக்கண்ணீர்’ வசனம் மனப்பாடமா தெரியும். இது இந்த ரேடியோ செட் ’மணிமாறன்’கள் செய்த வேலை.

அதுக்கப்புறம் நாங்க படிக்கிறப்ப ‘விதி’,‘ஒரு தாயின் சபதம்’,போன்ற கதை-வசனங்கள் அதிகமா போடுவாங்க. ரேடியோ செட் கட்டுறவங்க கதை – வசன கேசட்னு ஒரு செட் வச்சிருப்பாங்க. எனக்கு நினைவு தெரிஞ்சு அந்த வரிசையில் நாங்க கடைசியாக கேட்டது ‘அமைதிப் படை’. அந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு வசனமும் எங்களுக்கு அப்பிடியே மனப்பாடமாத் தெரியும். சத்யராஜ் குரலில் அதை சொல்லிப் பார்ப்பதே தனி அனுபவம். மறுநாள் பள்ளிக்கூடத்தில் அந்த வசனங்களை சொல்லி சொல்லி சிலாகிப்போம். வகுப்பில் வாத்தியாருங்க கூட இந்த மாதிரி வசனத்தைப் பேசித்தான் மாணவர்களை கட்டிப் போடுவாங்க. அது ஒரு காலம்.

இயக்குனர் மணிவன்னன் தன்னுடைய கதாபாத்திரத்தின் பெயரைப் போலவே ‘மைக் செட் மணிமாறன்’ ஆக தன்னுடைய வசனங்களாலும் நடிப்பாலும் மக்களின் வாழ்வியலோடு கலந்து விட்டார்.

# மைக் செட் மணிவன்னன் வாழ்க….

No comments:

Post a Comment