Friday 7 June 2013

பாட்டு என்னத்த படிக்கிறது...



பாட்டு என்னத்த படிக்கிறது...

படிக்காத மூளி என்னைய
பாட்டுப் படிக்கச் சொன்னா
பாட்டு என்னத்த படிக்கிறது… ?
பாட்டுல சங்கதின்னு
என்னத்த சொல்லுறது…?

வேவாத வெயில்ல வரிசையில நின்னு
சுசேட்டு அரிசி வாங்கிட்டு
கிறுகிறுன்னு வருதுன்னு
பண்ணக்காரன் திண்ணையில் உக்காந்ததுக்கு
செருப்படி வாங்கின மானம் தாங்காம
நானுகிட்டு செத்தாரே எங்கப்பன்
அவரு தொங்கின கயிறு இருக்கு
அத தரட்டா...?

பருத்திக் காட்டுப் பக்கத்துல
கோணான் கொல்ல வரப்புல
ஆடு மேய்ச்சிட்டன்னு
பஞ்சாயத்துல கும்புட வைச்சு
என் மயிர அறுத்து வுட்டானுவுளே
மிச்ச மயிறு கொஞ்சம் இருக்கு
அத தரட்டா… ?

நாயக்கன் காட்டுக்கு
கரும்பு வெட்டப் போனப்ப
பம்புசெட்டு ரூமுல வச்சு
என் தங்கச்சிய கெடுத்த மறுமாசம்
வீட்டுக்கு தூரமாவுலன்னு
செட்டிக்குளத்துல போயி
கலைச்சிட்டு வந்த
சீட்டத்துணி இருக்கு
அத தரட்டா…?

வேல செய்ய காணியும் இல்லாம
ஆக்கித் திங்க ஏனமும் இல்லாம
அன்னாடம் எம்பொளப்பு சிரிக்குது
இதுல பாட்டுன்னு என்னத்த படிக்கிறது…?

No comments:

Post a Comment