Friday 7 June 2013

எம் தந்தையே எப்போது வருவாய்…



எம் தந்தையே எப்போது வருவாய்…

நீ
நட்டு வைத்த முந்திரிகள்
காய்க்க மறந்து கண்ணீர் வடிக்கின்றன…

நீ
நடந்து பழகிய இந்த மண்
பிளந்து கதறுகிறது…

நீ
கம்பீரமாய் அமர்ந்த நாற்காலியை
மகிழ்வோடு தூக்கித் திரிந்தோம்…

நீ
கால்நீட்டி படுத்த சவத்தை
தோள்களில் சுமந்தப் போதுதான்
இதயம் கணத்தோம்…

நீ
கட்டிய வேட்டியின் சரசரப்பு சத்தத்தை
உன்
கோடித் துணியின் மெளனம் நசுக்குகிறது…

நீ
உடலோடு பூசிய சந்தனத்தின் வாசம் மறைந்து
ஊதுவத்திகளின் மணம் நெஞ்சை அடைக்கிறது…

காற்றின் பக்கமெல்லாம் தீ பரவச் செய்த
உன்
கரகர குரலின்றி
மயானக் காடாய் மெளனித்து கிடக்கிறது
இந்த மண்…

உன்
இறுதி ஊர்வல பாதையெங்கும்
மரங்கள் இலைகளை உதிர்த்தன….

நீ
குதப்பிய துப்பிய வெற்றிலை எச்சிலில்
நிறமெடுத்த ரோஜாக்கள்
உன்
மரணச் செய்திக் கேட்டு
எருக்கம் பூக்களாகி விட்டன….

உன்
மரணத்தை அறிவிக்க சுனாமி வந்தது
சுனாமிக்கு நிதியாய் இருபத்தைந்த்தாயிரம் கொடுத்தோம்
உனக்கு திதியாய் இரண்டாயிரம் இதயங்களையும் இழந்தோம்…

உன்
சிதைக்கு தீமூட்டிவிட்டு திரும்பி பார்க்கிறோம்
ஊரே இருள் மண்டிக் கிடக்கிறது…

எங்கள்
தீபங்களுக்கு ஒளியேற்ற
எம் தந்தையே
எப்போது வருவாய்…?

( மீனாட்சி இராமசாமி கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் உயர்திரு.இராமசாமி அவர்கள் மறைந்த போது எழுதி நினைவுமலரில் வெளிவந்தது )

No comments:

Post a Comment