Sunday 25 August 2013

நான் செஞ்ச குறும்பு - 1 , 2 & 3 :


நான் செஞ்ச குறும்பு - 1 :

என்னை ஒன்னாம் வகுப்பு பள்ளிக்கூடம் சேர்த்தவுடனே, போக மாட்டேன்னு தினமும் அழுவேனாம். அப்பிடி இப்பிடி எங்கம்மா கிளப்பி விட்டாலும் தெருவில இருக்கிற ஒவ்வொரு கம்பமா நிப்பேனாம். பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டு எங்கப்பா ஒரு நாள் அப்பிடியே என்னை அலாக்கா தூக்கிட்டுப் போய்... பள்ளிக்கூடத்தில நுழைஞ்சு நேரா ஒன்னாம் வகுப்பு வாசல் படியில் நிலைக்கால் கட்டையில தொப்புன்னு போட்டு, டீச்சரைப் பார்த்து “ இன்னைமே இவன் எனக்குப் புள்ளையே இல்லை... அடிச்சாலும் சரி, கொன்னாலும் சரி... “ன்னுட்டு வீட்டுக்கு வந்துட்டாராம்.

அதுக்க்ப்புறம் தான் ஒழுங்காப் பள்ளிக்கூடம் போனேனாம்...

” அப்பிடி படிக்க வைச்சண்டா உன்னைய..” என்று எங்கப்பா அடிக்கடி சொல்வார்.

* கொலைகாரனுவு...!
_________________________________________________________________________________

நான் செஞ்ச குறும்பு - 2 :

நான் மூன்றரை வயசு கைக்குழந்தையா இருந்தபோது , எங்கம்மா ஒரு நாள் அம்மியில ரசம் வைக்க பூண்டு, மிளகு சீரகம் அரைச்சிக்கிட்டு இருந்துச்சாம். பக்கத்தில விளையாடிட்டு இருந்த நான் அப்பிடியே நகர்ந்து வந்து பக்கத்துல இருந்த சுவற்றில சாய்ச்சு வச்சிருந்த ஏணியில ஏரி... அந்தாண்ட விழுந்துட்டனாம். சத்தம் கேட்ட எங்கம்மா ஏதோ செறாக்குச்சித்தான் ( விறகு ) விழுவுதுன்னு அசால்ட்டா இருந்துருச்சாம்.

அம்மியில எல்லாம் அரைச்சிட்டு “எங்கடா புள்ளைய காணோம்னு ..” தேடுனா நான் சுவற்றுக்கு அந்தால ‘தேமே’ன்னு கிடக்கிறனாம். அப்புறமா என்னையத் தூக்கிட்டுப் போனுச்சாம்.

ஆனால் நான் அழுவவே இல்லியாம், எங்கம்மா சொல்லும்.

* மவராசி...!
_________________________________________________________________________________

நான் செஞ்ச குறும்பு - 3 :

அப்ப மூனாவது படிக்கிறேன். ஒரு நாள் மத்தியானம் வகுப்பு முடிஞ்சு இடைவேளை நேரம். மணி 3.30 . எங்க வீடு, பக்கத்து வீடு, தெருவில எல்லா வீடும் கூரை வீடுதான். பள்ளிக்கூடம் மட்டும்தான் ஓட்டுக் கட்டடம்.

நான், என் ஃப்ரெண்ட் குமார், பாலகிருஷ்ணன், செங்குட்டுவன் எல்லாரும் விளையாடிட்டு இருக்கோம். அப்ப எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு சுவற்றுக்கு அருகில் எள்ளு சக்கை குமிச்சு வச்சிருந்தாங்க. நான் எங்க வீட்டுக்கு ஓடிப் போயி அடுப்புக்கு பக்கத்தில இருந்த தீப்பெட்டி எடுத்து வந்தேன். எங்க வீட்டுல எல்லோரும் காட்டுக்கு போயிட்டாங்க. தீக்குச்சியை எடுத்து விளையாட்டுத்தனமா கொளுத்தப் போயி.. எள்ளுச் சக்கை பிடிச்சுகிட்டு, அப்பிடியே நெருப்பு பக்கத்து வீட்டு கூரையில பிடிச்சிக்கிச்சு. ஊரே கூடிடிச்சு . எல்லோரும் தண்ணி மொண்டு ஊத்தி ஒரு வழியா நெருப்பை அனைச்சிட்டாங்க.

அதுக்கப்புறம் தான் க்ளைமாக்ஸே. விஷயம் பள்ளிக்கூடத்திக்கு தெரிஞ்சி, முழுக்கை வாத்தியார் மாரிமுத்து ( அவரு எப்பவும் முழுக்கை சட்டைத்தான் போடுவார் ) எங்க நாலுபேரையும் பிடிச்சிட்டார். பள்ளிக்கூடமே வேடிக்கைப் பார்க்குது.

எங்க நாலுபேரையும் ரெண்டு காதையும் கைகளால் தோப்புக் கரணம் போடுவது மாதிரி பிடிக்கச் சொல்லி, முட்டிக்கால் போட்டபடி பள்ளிக்கூடத்திற்கு முன்னாடி இருந்தா கிரவுண்ட் சுத்தி மூனு ரவுண்டு அடிக்கச் சொன்னார்... நாலு மணி வெயில், கூட படிக்கிறவங்க எல்லோரும் வேடிக்கைப் பார்க்கிறாங்க, ஒரு ரவுண்டுங்கிறது சுமாரா 20 நிமிடம். சத்தியமா நான் அழுதிட்டேன்.

விஷயம் கேள்விப்பட்டு எங்கம்மா ஒரு ரவுண்டு, எங்கப்பா ஒரு ரவுண்டுன்னு அடிப் பிண்ணிட்டாய்ங்க.

சோறு தின்னனான்னு ஞாபகம் இல்லை. அன்னைக்கு ராத்திரி அழுதுகிட்டே தூங்கிட்டேன்.

* கூரைகளும் அறிந்திடாத சோகங்கள்

No comments:

Post a Comment