Sunday 18 August 2013

சுதந்திர இந்தியாவின் காட்சிகள்


சுதந்திர இந்தியாவின் காட்சி - 1 :

இடம் : எங்க ஊர்
நேரம் : மதியம் 2.30 மணி

“ யெம்மா , என்னம்மா அந்தப் பள்ளிக் கூடத்து டீச்சர் இந்தப் பக்கமா போறாங்க...”

‘ கூறு கெட்டவனே.. ஒன்னுக்குட போயிட்டு வராங்கடா..’

“ அது சரி.. பின்னாடியே ரெண்டு பொம்பளப் புள்ளைங்க வருது...? “

‘ துனைக்கு..’

* பாரத சமுதாயம் வாழ்கவே..


-----------------------------------------------------------------------------------------------------------


சுதந்திர இந்தியாவின் காட்சி - 2 :

இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

நேரம் : காலை 8 மணி

ஆண்டு : வருஷா வருஷம்



“ இந்தாப் பெருசு.. எங்கப் போற..? “

‘ தியாகி.. குடை வாங்க..’

” ஓ..தியாகியா.. கூட யாரும் கூட்டிட்டு வரலை..”

‘ தனியாத்தான் வந்தேன் ‘

“ இந்தா அங்கிட்டுப் போயி நில்லு.. அப்புறமா கூப்பிடுறேன்..”

“ அந்த நாற்காலியில உட்காரச் சொன்னாங்க...”

“ யாரு அந்த ஏட்டா..? அவருக்கென்ன... நீ போய் அங்க நில்லு.. கலெக்டர் வந்த உடனே நான் கூப்பிடுறேன் “

* வந்தேமாதரம் வந்தேமாதரம்

-----------------------------------------------------------------------------------------------------------

சுதந்திர இந்தியாவின் காட்சி - 3 :

இடம் : ஸ்டேடியம்

சுதந்திரதின விழாவுக்கு பயணாளிகளை அழைத்து வந்திருந்த வட்டாட்சியர் ஒருவர் பரபரப்பாக ஓடி வருவதை கண்ட காவலர் :

“ சார், என்னாச்சு..? “

“ ஒன்னுமில்லைப்பா... யாரு அங்க பாத்ரூமை பூட்டி வைச்சது..? “

“ அதுவா சார்.. இன்னைக்கு ரொம்ப கும்பலா இருக்கும்னுதான் பூட்டிட்டாங்க..”

“ சாவி யாருக்கிட்ட இருக்கு...? “

“ நானே அது தெரியாமத்தான் தவிச்சுட்டு இருக்கேன்....”

பதிலுக்கு காத்திராமல் பக்கமாய் கருவேல மரங்கள் பக்கம் ஒதுங்குவதற்க்கும்...பி.ஆர்.ஓ. அவரை அழைப்பதற்கும் சரியாய் இருக்க... அவசரமாய் முடித்து திரும்பி வந்தவரையே எல்லோரும் பார்த்து நிற்க...

அந்நேரம் பார்த்து நிகழ்ச்சி தொகுப்பாளர் சொன்ன புதுக்கவிதை பொருத்தமாய் இருந்தது :

நீச்சலடித்த
கிணற்றை விற்று
படிக்க வைத்தது
இந்த பாழய்ப்போன
பாத்ஃரூமோடு போரடவா..?

* உச்சியில் தேசியக் கொடி பட்டொளி வீசி பறந்தது..

-----------------------------------------------------------------------------------------------------------

சுதந்திர இந்தியாவின் காட்சி - 4 :

சுதந்திரதின விழா முடிந்து மைதானத்தை விட்டு வெளியேறுகையில் :

“ அப்பா பலூன் வேணும்...”

“ இரு வாங்கித் தரேன்...”

பலூன், பொம்மைகள் விற்கும் அந்தப் பாட்டிக்கு ஏறத்தாழ 67 வயதிருக்கும்...

“ ஆயா.. ரெண்டு பலூன் கொடு...”

“ நிலா இந்தா வாங்கிக்க...”

“ அந்த கேமரா பொம்மையும் வாங்கித் தாப்பா...”

“ யே...என்ன. ரெண்டா..? “

“ கேமரா எனக்கு.. பலூன் தமிழ்நிலாவுக்கு...”

“ ஆயா அதையும் குடுங்க..”

கொடுத்துவிட்டு மீதம் சில்லரைக்காக பைகளில் கைவிட்டவாரே...

“ ஏ.. சாமி... 100 ரூவாயில 40 போன எவ்வளவு..? “

“ ஆயா 60 ரூபாய்...”

அறுபது ரூபாயைக் கொடுத்து விட்டு என்னிடம் கேட்டாள் பாட்டி ,

“ அடுத்த வாரமும் கொடி ஏத்துவாங்களா ? “

* பாரத சமுதாயம் வாழ்கவே..

------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment