Sunday 18 August 2013

சுதந்திரதின போராட்டத்தில் நான்....

சுதந்திரதின போராட்டத்தில் நான்....

அப்ப நான் அஞ்சாவது படிக்கிறேன். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கீரம்பூர். ஆமாம் துறையூர் பக்கத்தில இருக்கிறதுதான். ஆகஸ்ட்டு 13 ஆம் தேதியே தலைமையாசிரியர் சொல்லிட்டார். ‘ கொடி ஏத்துறன்னிக்கு நீதான்டா உறுதிமொழி வாசிக்கனும்...’.

ஐந்தாம் வகுப்பு வரையிலே உள்ள பள்ளியின் நூறு சொச்சம் மாணவர்களுக்கு நான் தான் மாணவத் தலைவன். அஞ்சாவதுக்கும் நாந்தான் லீடர். அப்பெல்லாம் ’ மானிட்டர்னு ‘ சொல்வாங்க.

ஆகஸ்ட் 15. அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து அம்மா வைத்திருந்த சுடுதண்ணியில் குளிச்சுட்டு கிளம்பி பள்ளிக்கூடத்திற்கு வரும்போது மணி ஏழு ஆகியிருந்தது.

பள்ளிக்கூடத்தில நுழைஞ்சதும் தலைமையாசிரியர் அறையைக் கூட்டி டேபிளை துடைத்து அவர் சைக்கிள் நிறுத்துற இடத்தில இருந்த மண்ணையெல்லாம் நல்லாக் கூட்டி முடிச்சுட்டு நான் தயாராய் இருப்பதற்கும், என் சக மாணவர்கள் அங்கிட்டு மேற்கு பள்ளிக்கூடத்திற்கு பக்கத்தில இருக்கிற வீட்டில் ‘ காகிதப் பூக்கள் ‘ பறித்து வருவதற்கும் சரியாய் இருந்தது. காகித பூக்கள் ரோஸ் நிறம் கொண்டது. வாசனையற்றது.

அதன்பிறகு வந்த மாணவிகளை பள்ளிக்கூடத்தின் முன்பிருந்த கொடிக்கம்பத்திற்கு அருகில் கூட்டச் சொல்லி, சத்துணவு ஆயா கோலம் போட்ட பிறகு, கொடிக் கம்பத்திற்கு அருகே தலைமையாசிரியர் நிற்கும் இடத்தை இலக்கு வைத்து, மணல் தரையில் கால்களில் அச்சு இழுத்து பாதை செய்தேன். இந்த பாதையில் நடந்து சென்’றுதான் தலைமையாசிரியருக்கு வணக்கம் சொல்ல வேண்டும்.

அந்நேரத்தில் ஆசிரியர்களும், தலைமையாசிரியரும் வந்து விடவே 8.30 மணிக்கெல்லாம் விழா தொடங்கி விட்டது.

நான் , கொடிக்கம்பம், தலைமையாசிரியர் என வரிசையாய் நிற்க மொத்தப் பள்ளி மாணவர்களும் முன்னால் நிற்க , அதற்குப் பின்னாலும், வலது இடது புறமும் ஆசிரியர்கள் நிற்க நிகழ்வு தொடங்கியது. ஊர்ப் பொதுமக்களும் திரண்டிருந்தனர்.

” அட்டேன்ஷன்…… ” என்று நான் சத்தமாய் கத்த, என் குரலை விட சத்தமாய் ‘ம்ம்ம்ம்ம்மாமா’ என்று கத்தியது பள்ளிக்கு முன்னால் கிணற்றருகே கட்டப்பட்டிருந்த மாடு. மொத்த மாணவர்களும் ஒரே சிரிப்பு. முதுகுக்குப் பின்னால் முட்களால் கீறியது போல் நான் வேர்த்து விட்டேன். சுதாரித்துக் கொண்டு… மீண்டும் நான் “ அட்டேன்ஷன்..” சொல்ல மாடும் “ ம்ம்ம்மாமா “ என்று கத்தவும் , இப்போது தலைமையாசிரியர், “ யோவ் அந்த மாட்டை அவுத்துட்டுப் போங்கப்பா…”. மாட்டை அவிழ்த்துக் கொண்டு போயினர்.

கொஞ்சம் ஆசுவாசமாகி, மீண்டும் தொடங்கியது.

“ அட்டேன்ன்ன்…ஷன்…” கால்கள் பிரிந்தன.
“ ஸ்டேண்ன்டட்….டீஸ் ” கால்கள் இனைந்தன.

” அட்டேன்ன்…ஷன்…….ஸ்டேண்ன்டட்…டீஸ்..”
லெப்ட், ரைட் என்று கைகள் வீசி கால்களில் வரைந்த தடத்தில் நடந்து , இடது புறமாய் வளைந்து நடந்து மீண்டும் இடது வளைந்து நடந்து தலைமையாசிரியருக்கு முன்னால் நின்று உரத்துக் கத்தினேன். “ சல்ல்…யூட்”.

அடுத்து தலைமையாசிரியரை கொடிக்கம்பத்துக்கு அருகில் அழைத்து சென்று கொடிக் கம்பத்தில் இருந்து கயிற்றை அவிழ்த்து, அவரிடம் கொடுக்க அவர் கொடியை ஏற்றி முடித்தப் பின் கயிற்றை கம்பத்தில் கட்ட வேண்டும்.. இது நடைமுறை.

வீர்மிக்க எழுச்சி நடையோடு ‘ லெப்ட் ரைட்’ சொல்லி கம்பத்தின் அருகில் சென்று கைகளை உயர்த்தினேன்… கொடி கயிறு என் உயரத்திற்கு எட்டவில்லை. இரண்டு முறை முயற்சித்தேன். ம்ம்ஹீகும்.

விநாடிகளில் எனதருகே ஓடி வந்த நான்காம் வகுப்பு சுப்ரமண்யன் ஆசிரியரை கண்டதும் பயந்து விட்டேன். ஏனெனில் அவர் சைக்கிளை கவராயத்தில் ஓட்டை போட்டு பஞ்சராக்கிய அன்று அவர் அடித்தது நினைவுக்கு வந்து பயம் கொடி கம்பத்தை விட மிரட்டியது.

ஆனால் அவர் பொறுமையாக கொடியை அவிழ்த்து என்னிடம் கொடுக்க, நான் தலைமையாசிரியரிடம் கொடுக்க அவர் கொடியை உச்சிக்கு ஏற்றி இழுத்ததும் , பிரிந்த கொடியிலிருந்து பறந்த காகிதப் பூக்கள் தலைமையாசிரியர் மேல் விழுந்து சிதறியது. அவர் கைகளால் உதறிய ஒரு பூ என் தோளில் பட்டது. சிலிர்த்து கத்தினேன். “ கொடிக்கு வணக்கம் “.

மாணவர்கள் அனைவரும் ஒரே குரலில் ‘ கொடிக்கு வணக்கம் ‘ சொல்ல நிமிர்ந்து நோக்கினேன். தேசியக் கொடி பட்டொளி வீசி பறந்தது.

மீண்டும் லெப்ட், ரைட் ..தலைமையாசிரியரை அவர் நின்ற இடத்தில் சேர்த்து…லெப்ட்..ரைட்… நான் நின்ற இடத்திற்கு வந்து உரத்த குரலில் நான் சொல்ல… மாணவர்கள் அனைவரும் என்னோடு சொன்னார்கள்…

“ இந்தியா என் தாய்நாடு, இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர்..என் நாட்டை நான் உளமாற நேசிக்கிறேன்….”

No comments:

Post a Comment