Monday 26 August 2013

நான் செஞ்ச குறும்பு – 4 :

நான் செஞ்ச குறும்பு – 4 :

அப்ப எனக்கு எட்டு இல்லைன்னா ஒன்பது வயது இருக்கும். நாலாவது முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை. அப்ப நாங்க கீரம்பூர்ல குடியிருக்கோம். நீச்சல் கற்றுக் கொள்வதற்காக எங்கம்மா கூட கிணற்றுக்கு போனேன். அப்பெல்லாம் கிணத்துல ஒரே கும்பலா இருக்கும். விடுமுறை நாளென்றால் கேட்கவே வேணாம். ஊருல இருக்கிற பசங்க பூராம் அங்கத்தான் இருப்பாங்க.

எங்கம்மா, பக்கத்து வீட்டு ராஜேஸ்வரி அம்மா, தனபாக்கியம், ஜானகி அம்மா எல்லோரும் அவங்கங்க வீட்டு துணியெடுத்து வந்து துவைச்சு, காயப் போட்டு மெதுவா குளிச்சுட்டு மத்தியாணமாத்தான் வீட்டுக்குப் போவோம். கிணத்துமேல மோட்டார் ஓடினால் அங்க துணி துவைச்சாலும், கிணத்திலதான் குளிப்பாங்க. நீச்சல் ஒரு சுகம். நீச்சல் ஒரு தன்னம்பிக்கை.

எனக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக எங்கம்மா சேலையை என் இடுப்புல கட்டி நல்லா மூனு முடிச்சுப் போட்டு ( இது என் அம்மா எனக்கு போட்ட முடிச்சு , அவிழ்க்க முடியாது ) சுற்றுச் சுவரில் இருந்து ‘ குதிடா..குதிடா..’ன்னு சொன்னிச்சு. நான் திரும்பி பின்னாடி பார்க்கிறேன் சேலை அனுமார் வால் மாதிரி நீளமா இருக்கு. ஒரு முனை என் இடுப்பில். மறுமுனை எங்கம்மா கையில்.

நான் பயத்துல அப்பிடியே பின்னாடி பின்னாடி போறேன். ராஜேஸ்வரி அம்மா வேற “ இங்க பாருடா.. நான் குதிக்கிறேன்..னு..” , தொபுக்கடீர்னு குதிக்க, அவங்க குதிச்ச தண்ணி என்மேல பட்டதும் , இன்னும் பயம் சில்லுன்னு ஏறிடுச்சு.

நான் அப்பிடியே நிக்கிறேன். எங்கம்மா பக்கத்தில நின்ன ஜானகி அம்மாவைப் பார்த்து கண்ணடிக்க, என் பின்னாடி நின்னுக்கிட்டு இருந்த அவங்க அப்பிடியே காலால உட்டாங்க பாரு… ஓங்கி ஒரே உதை. நான் ‘ ஓ ‘ன்னு கத்திக்கிட்டு அழுதிக்கிட்டே கிணத்தில விழுந்துட்டேன். எங்கம்மா என் இடுப்புல கட்டியிருந்த சேலையை இழுத்து பிடிச்சுக்கிட்டு, ‘ அடி, அடி, கையை நல்லா தூக்கி அடி…காலை பின்னாடி விசிறியடி…’ன்னு கத்துறாங்க. நானா மூச்சடக்க முடியாம தண்ணி குடிச்சிட்டேன்…..’ங்ஹே…’ ‘ங்ஹே’ ன்னு கத்துறேன்.
எங்கம்மா சுற்றுப் பாருக்கு மேல நிக்குது. நான் தண்ணியில தத்தளிக்கிறேன்.

ஒரு நிமிஷம்தான்… பிடிக்கறதுக்கு ஒன்னும் இல்லாததால நான் அப்பிடியே என் இடுப்பில கட்டியிருந்த சேலையை இழுத்தேன் பாருங்க… எங்கம்மா மேலேயிருந்து தொப்புன்னு தண்ணியில விழுந்துருச்சு. இதாண்டா சமயம்முன்னு நான் அப்பிடியே, எங்கம்மா மேலே ஒரே தாவா தாவி தோள் மேல கைப் போட்டு முதுகுல ஏறி உட்கார்ந்துட்டேன். மேலேயிருந்து பார்த்துட்டு எல்லோரும் சிரிக்கிறாங்க.

எங்கம்மாவுக்கு நீச்சல் தெரியும். இருந்தாலும் என் பாரம் தாங்காம தண்ணிக்குள்ள போவுது. எங்கம்மா ஒரு நாள் பேசிக்கிட்டு இருக்கும்போது கவனிச்சிருக்கேன். “ யாரவாது தண்ணிக்குள்ள முழுகுனா அவங்க முடியை பிடிச்சு இழுக்கனும்”

எங்கம்மா முழுவுறத பார்த்து நான் “ எங்கம்மா முடிய பிடிச்சு இழுத்தேன், அது கையோட வந்துருச்சு..அப்பெல்லாம் அது சவுரிமுடி வைச்சிருக்கும்…, நான் அழுத்துறது தாங்காமலும், அது முடியப் பிடிச்சு இழுத்தனாலும் அந்த நேரத்திலயும், உட்டுச்சு பாரு ஒரு அறை , நான் தேம்பி தேம்பி அழுதிக்கிட்டே. இன்னும் வேகமா முடியைப் பிடிச்சு இழுத்து எங்கம்மா முதுகை அழுத்துறேன்.

இதுக்கு மேலே தாங்காதுன்னு ராஜேஸ்வரி அம்மாவும், ஜானகி அம்மாவும் சுற்றுப் பாருல நின்னுகிட்டு கையை குடுக்க, எங்கம்மாவை முந்திக்கிட்டு நான் அவங்க கையைப் பிடிச்சு , ரெண்டு காலாலயும் எங்கம்மா முதுகுல ஒரு அழுத்து அழுத்தி தாவி அவங்க கையைப் பிடிச்சு சுவற்றில் ஏறி உயிர் தப்பித்தேன். உடனே குடுகுடுன்னு மேல ஏறி வந்துட்டேன்.

கொஞ்ச நேரத்தில மேலேறி வந்த எங்க அம்மா ‘ பளார், பளார்’னு அறை விட்டுச்சு பாருங்க. நான் தேம்பி ,தேம்பி அழுதேன். அழுதுகொண்டே கிணற்றைப் பார்க்கிறேன். கிணறு முழுக்க நான் அழுத கண்ணீர் நிறைந்து கிடக்கிறது.

நான் ஐந்தாம் வகுப்புக்கு போன முதல் நாள் எங்க வாத்தியார் கேட்டார் “ நீச்சல் தெரியாதவங்க எல்லாம் கையைத் தூக்குங்க “. நான் கையைத் தூக்கல.

1 comment:

  1. enna mama swimming onga paiyan kathugara vasula neega kadhudatha sollariga.

    ReplyDelete