Sunday 18 August 2013

வானம் அழுத கண்ணீர்…

வானம் அழுத கண்ணீர்…

ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு சென்றிருந்தேன். 10.08.2013.

மதியம் 3 மணிக்கு நுழைந்தவுடன் இன்ப அதிர்ச்சியாய் எழுத்தாளர் அண்ணன். வா.மு.கோ.மு. வை சந்தித்தேன். எழுத்தாளர் என்ற பிரம்மாண்டத்தை கட்டுடைத்த அவரது எளிமையையும், அவரது எழுத்தையும் சிலாகித்தேன். சிரித்தார். நான் எப்போதோ படித்த அவரது ‘ காசம் அல்லது காசநோய் ‘ சிறுகதையை பற்றி இரண்டொரு வாக்கியங்கள் சொல்லியபோது ‘எனது அனுபவம்’ என்றார்.

இன்று ‘ பிலேமி டீச்சர் ‘ , ‘ தவளைகள் குதிக்கும் வயிறு ‘ என்ற இரண்டு நூல்கள் வெளியீடு இருப்பதை சொன்னார். தெரியும் என்றேன். விடை பெற்று நான்கைந்து புத்தகங்கள் வாங்கி கொண்டு மாலைப் பேச்சுக்கு தயாராய் இருந்த 5.45 க்கு சரளைக் கற்களை பந்தலின் மேல் கொட்டியது போல் மழை மிரட்டியது.

’ அய்யோ பாரதி கிருஷ்ணகுமாரின் பேச்சைக் கேட்க முடியாதோ ‘ என்று நினைந்து வருந்திய இருபது நிமிடங்களில் வானம் வாய் மூடிக் கொண்டது. பிறகென்ன பாரதி கிருஷ்ணகுமாரின் பேச்சைக் கேட்கத்தானே பெரம்பலூரில் இருந்து வந்திருக்கிறேன். சிறு தூரலோடு ஈரநாற்காலிகளோடு நிகழ்ச்சி தொடங்கியது. கைக்குட்டையை தலைக்கு போட்டுக் கொண்டு அமர்ந்துவிட்டேன். ஏழு மணிக்கு வானமும் வந்து உட்கார்ந்துக் கொண்டது.

ஸ்டாலின் குணசேகரனின் அறிமுகமும், கோ.சேதுபதியின் ‘ விளக்கினில் திரி நன்கு சமைந்தது ‘ என்ற பேச்சும் முடிந்து 8.08 க்கு பாரதி கிருஷ்ணகுமார் பேச தொடங்கினார். ’ நன்றினில் அறிவது அறிவு..’ என்பது தலைப்பு. அப்படி பேசுகிற மொழியை எங்குத்தான் கற்றானோ ? .

’ வேறெந்த ஊரின் புத்தகத் திருவிழாவையும் குறைத்து சொல்வது என் நோக்கமல்ல , ஆனால் ஈரோடு புத்தகத் திருவிழாவை உயர்த்திச் சொல்வது என் நோக்கம்..’ என்று தொடங்கினார். நிமிர்ந்தேன். பேசுவதற்காகவே பிறந்து பேசியே வளர்ந்த உயரம் குறையாமல் பேசினார்.

‘ இரண்டு கைப்பிடி மண்ணை எடுத்த இடத்திலேயே போட்டு விடு, என்று சொல்வதற்கு எனக்கொரு அம்மா இருந்தாள்..’ என்று தனது ஆடிப் பெருக்கு மதுரை நாட்களைச் சொன்ன போது மணலாகிப் போனேன்.

இன்றைய கல்வியின் அவலத்தை , பள்ளிகளின் நிலையை அந்த பள்ளி முதலாளிகளின் முன்னிலையிலேயே சொல்வதற்கு ஒரு நெஞ்சுரம் வேண்டும். அதற்கு அவரைப் போல் வளர வேண்டும்.

‘அதிகாரத்தில் இருந்துக் கொண்டு பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துகிறவன் பெற்ற மகளோடு போவதற்கு ஒப்பானவன்..’ என்று குரானில் நபிகள் சொல்லியிருப்பதாக பேசி ஈரக்குலைகளை வெப்பமாக்கினார்.

‘ தண்டவாளத்துக்கு அருகில் தலை நசுங்கி கிடந்த பிள்ளை பால் குடித்த மார்பு துடித்தபடி , சுமந்த வயிற்றில் அடித்துக் கொண்டு அழுதாளே ஒரு தாய்… அவளின் கண்ணீருக்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும்..’ என்று தாங்க முடியாமல் உடைந்து ..” பெற்றால்தான் பிள்ளையா…? “ என்ற போது என் கண்ணங்களை நனைத்திருந்தது கண்ணீர்.

வந்து சேந்திருக்கும் ஆங்கில கல்வியோடு போராடி, கற்க முடியாமல் வெறுத்து பள்ளிகளையே புறக்கணிக்கும் எதிர்கால சமுதாயத்தின் பிள்ளைகள் எங்கு போவார்கள் என்று சொல்லி கண்ணதாசனின் கவிதையை அழுதபடியே பாடிய போது எங்களோடு சேர்ந்து வானமும் அழுத கண்ணீர் தூறலாய் இறங்கியது.

இப்படி மானுட நேசத்தோடு பேசுகிறவனின் பேச்சை நாளெல்லாம் அழுதபடி கேட்க வேண்டும். அப்படி நனைக்கிற கண்ணீராவது நம் ஆன்மாவை சுத்தப்படுத்தட்டும்.

06.43 am

No comments:

Post a Comment